ஆரோக்கிய மழை மலை மாதாவை நோக்கி வரம் தரும் ஜெபம்.

அற்புத ஆரோக்கிய மழை மலைத் தாயே! அச்சிறுபாக்கம் நல்லாயன் குன்றில் வீற்றிருக்கும் அம்மா,  உமது குழந்தைகள் நாங்கள் உம்மை வணங்குகிறோம்.

கடவுளின் அன்னையே தாயே , உம்மையே நாங்கள் பின்பற்றி நம்பிக்கையோடு உம்மைப் பற்றிக் கொண்டு வாழ்வில் இறையருள் பெற்றிட நிறையாசீர் தாரும் அம்மா.

பாசத்தோடு எம்மைப் பாதுகாக்கும் அன்னையே, பரம தந்தையிடம் எமக்காய் பரிந்து பேசும் அம்மா, தீராத நோய்களை எல்லாம் தீர்ப்பவர் நீரே, நம்பிக்கையோடு வருபவர்க்கு ஆறுதல் நீரே, நன்றியால் உம் பாதம் பணிகின்றோம் .

அம்மா ஆரோக்கியத் தாயே , ஆரோக்கியத்தை மழையாய்ப் பொழிபவரே, நற்சுகத்தையும் , மன அமைதியையும் நிறைவாய்த் தாரும் அம்மா! ஞானத்திலும் அறிவிலும் வளர்ந்திட, வேலைவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் பெற்றிட, திருமகன் இயேசுவிடம் மன்றாடும் தாயே!

எங்கள் உழைப்பையும் தொழிலையும் ஆசீர்வதியும் தாயே! எங்களுக்குப் போதிய மழையைத் தந்து விளைச்சலைப் பெருக்கும் அம்மா! சுப நிகழ்ச்சிகளும் , குழந்தை பாக்கியம் கிடைத்திடவும் தயை புரியும் தாயே!

அன்பின் நிறைவே அன்னையே! சமுதாயத்தில் நீதி நேர்மை நிலைத்திடவும், எம்மில் மனித நேயம் வளர்ந்திடவும் அருள் தாரும். உம் வழியாய்ப் பெற்றுக்கொள்ளும் நன்மைகளுக்கு ஈடாக எம் அயலாரின் துன்பத்தில் துணை நிற்க, நல்ல மனதைத் தாரும். உம் திருமகன் இயேசுவைப் போல் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவர்களாய் வாழ வரமருளும்.

ஆமென்.