10. குரு "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்கிற மந்திரம் சொல்லும் போது


சேசுநாதர் சுவாமி நமக்காகப் பாடுபட வேணுமென்று மிகுந்த தாழ்ச்சி பொறுமையுள்ள இராஜாவாக நீச வாகனத்தின் மீது யெழுந்தருளி ஜெருசலேமென்கிற பட்டணத்தில் பிரவேசிக்கிற பொழுது, அந்தப் பட்டணத்து ஜனங்கள் மரத்தின் கொப்புகளை ஒடித்துப் போட்டும், குருத்துக்களைக் கையிலேந்தியும், தங்கள் வஸ்திரங்களை வழியில் விரித்தும் வழியை அலங்கரித்து சுவாமிக்கு முன்னும் பின்னுமாகப் புகழ் கூறிக் கொண்டு போகும் பொழுது அந்தப் பட்டணத்து ஜனங்கள் செய்யும் கொடிய பாவத்தால் அவர்கள் இனி அனுபவிக்கும் கடினமான நிர்ப்பந்தங்களை நினைத்து, அவர் மனமிரங்கி அழுது கொண்டு போனாரென்று சிந்தித்துக் கொள்.

சுவாமி! எங்களுக்கு சந்தோஷம் வந்தால் அதனாலே நாங்கள் ஆங்காரிகளாகாமல் எங்கள் சந்தோஷத்தில் தேவரீரைத் தோத்திரம் பண்ணும்படி எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணியருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

ஆமென்.