கார்மேல் அன்னையிடம் வேண்டுதல்.

கார்மேல் அன்னை வழியாக நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு, இறை இரக்கம் பெற்ற நாம் அன்னை வழியாக நம் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பிப்போம்.

திருச்சபையின் கருத்துக்காக செபிப்போம். திருச்சபையை வழி நடத்தும் எங்கள் திருத்தந்தை, அகில உலகத்திலிருக்கும் அனைத்து ஆயர்கள் குருக்கள், துறவறத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒரே ஆயனும் ஒரே மந்தையுமாக மாறுவதற்கும், விசுவாசத்தில் வளருவதற்காகவும் வரம் வேண்டி கார்மேல் அன்னை வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக, ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்லாம் வல்ல இறைவா. எங்கள் ஆன்மீக வாழ்வில் பக்தி விசுவாசமும் இறைப்பற்றும் வளரச் செய்யும். உலக சிந்தனைகளாலும் அவநம்பிக்கைகளாலும், செபமில்லாமல் பிரச்சனைகளிலும், போராட்டங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும அனைவரிலும் தனிச்செபம், குடும்பசெபம் செய்யும் அருளைத் தரும்படியாக கார்மேல் அன்னை வழியாக உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பாவத்தின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்காகவும் செபிப்போம். போதைப் பொருட்களுக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள், தவறான உறவுமுறைகளிலும் அசுத்தமான பழக்க வழக்கங்களிலும் வாழ்கின்றவர்கள், பிரிவினை, சண்டை, கோபம், தற்பெருமை. சோம்பேறித்தனம் போன்ற எல்லாப் பாவங்களிலிருந்தும் எங்களை விடுவிக்கும்படியாகவும் நல்ல பாவ அறிக்கை செய்து கடவுளோடும், மனிதர்களோடும் அன்புறவு கொண்டு வாழக் கிருபை தரும்படி கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பொருளாதார நெருக்கடிகளால் வாடுகின்றவர்களுக்காக செபிப்போம். கடன் தொல்லை, எதிர்பாராத விபத்து, தோல்வி, நிரந்தர வேலையின்மை, விவசாயத்திலும், வியாபாரத்திலும், தொழிலிலும் ஏற்படும் நஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார செழிப்பைத் தரும்படியாக கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குடும்பக் கருத்துக்களுக்காக செபிப்போம். கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் ஏற்படும் கருத்து வேற்றுமை உள்ள குடும்பங்கள், திருமணமாகியும் குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதியர்கள், திருமணத் தடைகளால் கவலைப்படுகின்றவர்கள், உறவினரோடிருக்கும் பகைமை, கசப்பு, வெறுப்பு அனைத்தையும் நீக்கி உண்மையான இறைப்பிரசன்னம் நிறைந்த குடும்ப வாழ்க்கையைத் தரும்படியாக கார்மேல் அன்னை வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். கார்மேல் அன்னை வழியாக ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நம்முடைய தனிப்பட்ட கருத்துகளை மௌனமாக கார்மேல் அன்னையிடம் சமர்ப்பிப்போம்.

கபிரியேல் சம்மனசோடும், எலிசபெத்தம்மாவோடும், அர்ச்சியாசிஸ்டவர்களோடும் இணைந்து நம் அன்னையைப் புகழ்வோம்.

பிரியதத்தத்தினாலே பூரண மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்ஜாதிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாயே! சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

ஆமென் சேசு.