உத்தரிய மாதாவுக்கு ஜெபம்.

மிகவும் பரிசுத்த மாமரியே! எங்கள் கார்மேல் அன்னையே! உம்மைப் போற்றிப் புகழ்ந்து, நன்றி, செலுத்தி எங்கள் வேண்டுதல்களை ஒப்புக்கொடுக்கின்றோம். எங்கள் தேவதாயே! உம்மை அடைக்கலம் தேடி வந்திருக்கின்றோம். உம்மை நாங்கள் வணங்குகின்றோம். உம் பிள்ளைகள் நாங்கள். உம் முன் சரணடைகின்றோம். விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசியே! எங்கள் மீது கருணைக்கண் காட்டிட மன்றாடுகிறோம். ஓ கார்மேல் அன்னையே! உம்முடைய பிள்ளைகளாக எங்களை ஏற்றுக்கொண்டு எங்கள் மீட்பின் மறைபொருளை எங்களுக்குக் கற்றுத்தாரும்.

அன்னையின் அன்பை உணராமல் வாழ்ந்ததற்காக இப்போது நாம் அன்னையிடம் மன்னிப்பு கேட்போம். ஓ மிகவும் இரக்கமுள்ள தாயே! நாங்கள் உங்கள் பிள்ளைகள் என்று அழைக்கப்பட தகுதியுள்ளவர்களல்ல. ஏனெனில் எங்கள் தீய சிந்தனைகளாலும், செயல்களாலும் உம்மை விட்டு அகன்று விட்டோம். பல பாவ, அருவறுப்புக்குரிய எங்கள் எண்ணங்களை, நாங்கள் உற்று நோக்குகையில் உம்மைத் தாயென அழைக்கவோ, உம்மிடம் நெருங்கி வரவோ நாங்கள் தகுதியில்லாதவர்களாக இருப்பினும், உமது அன்பும், இரக்கமும், ஆறுதலும் எங்களை உம்மிடம் ஈர்க்கின்றன. எனவே எங்கள் மீது இரக்கம் வையும் என்று உம் புனிதமான கரங்களில் எங்கள் ஆன்மாக்களை ஒப்புக் கொடுக்கின்றோம்.

நமது கார்மேல் அன்னையிடம் ஆழமான பக்தி விசுவாசத்தில் வளரச் செய்யும் படியாக வேண்டிக் கொள்வோம். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன் என்று சொன்ன எலியா இறைவாக்கினரைப் போல் ஆண்டவர் மீது பேரார்வம் கொண்டவர்களாய் எங்களை மாற்றும்.

கார்மேல் மலையில் செபத்திலும் தவத்திலும் ஈடுப்பட்டிருந்த புனிதர்களுக்குப் புனிதத்தன்மையை உய்த்துணருகின்ற பேரருளைப் பெற்றுத் தந்த அன்னையே, உம்முடைய வேண்டுதலால் நாங்களும் செபத்திலும், தவத்திலும் பணிவாழ்விலும் ஈடுபட்டு புனிதமென்னும் மலை ஏறி உண்மையான இறைப்பற்றில் வளர்ந்திட வேண்டிக் கொள்ளும்.

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற நம் இராக்கினியிடம் நமக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுவோம்.

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க. எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க. பரதேசிகளாகிய நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலிருந்து உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே! உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசங்கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியாவே. ஆமென்.

இயேசு கிறிஸ்துவின் திரு வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக. சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.