குழந்தை இயேசு நவநாள் ஜெபம்.

அற்புதக் குழந்தை இயேசுவே! அடியோர் மேல் இரக்கமாயிரும்!
(மும்முறை)

தொடக்கச் செபம்.

எங்கள் அருமைக் குழந்தை இயேசுவே!, அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும். நீரே எங்கள் ஆண்டவர்! நீரே எங்கள் மீட்பர்! எங்களைப் பற்றி உமக்கு எவ்வளவோ அக்கரை! எங்கள் மன்றாட்டுக்களை கேட்க எங்களோடு இருக்கின்றீர். எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து எங்கள் கோரிக்கைகளை கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம். தந்தையோடும் தூய ஆவியோடும், இறைவனால் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே.!
ஆமென்.

குழந்தை இயேசு செபம்.

அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி பணிவாக உம்மை இறைஞ்சி வேண்டுகிறோம்.

எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக.

ஆமென்.