குழந்தை இயேசு மன்றாட்டு.

பரிவிரக்கமுள்ள தந்தையே! உமது அன்பு திருமகன் ஆண்டவர் இயேசுகிறிஸ்து எங்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்முடைய பெயராலே உம்மிடம் நம்பிக்கையோடு கேட்குமாறு எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதே நம்பிக்கையோடு இங்கு கூடியிருக்கும் உம் மக்களின் மன்றாட்டுக்களை கேட்டருள உம்மிடம் வேண்டுகிறோம்.

1. நமது திருத்தந்தைக்காகவும், ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும், துறவியருக்காகவும் வேண்டுவோம்: திருச்சபையின் வளமைக்கு உதவும் வற்றாத ஊற்றாக இவர்களின் வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. நாங்கள் வேண்டிய வரங்களை பெற்றுக்கொண்ட அனைவருக்காகவும் வேண்டுகிறோம். நன்றி கூறி உம்மை வாழ்த்திப் போற்றும் நல்ல உள்ளத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. நோயாளிகளுக்காகவும், திக்கற்றவர்களுக்காகவும், சோர்ந்திருப்போருக்காகவும் வேண்டுவோம்: இவர்களுக்கெல்லாம் ஆறுதலின், ஆதரவின் பிறப்பிடமாக தெய்வத் திருக்குழந்தையாகிய நீரே இருக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. யார் யாருக்கு தனிப்பட்ட வரங்கள் தேவையோ அவர்களுக்காக வேண்டுவோம்: இவர்களின் எளிய விசுவாசத்தை ஆசீர்வதித்து தம் திருவுளப்படி தெய்வத்திருக்குழந்தை, இவர்களின் விண்ணப்பங்களை அளித்தருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

5. குழந்தை இயேசுவின் பக்தர்கள் அனைவருக்காகவும் வேண்டுவோம்;  உயிருள்ள விசுவாசத்தை இவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(நம் சொந்த தேவைகளுக்காகவும் உறுதியோடு அமைதியாக செபிப்போம்.)

தந்தையே! உம் திருமகன் குழந்தை இயேசு வழியாக எங்கள் மன்றாட்டுக்களை கேட்டருளியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம், வாழ்வில் என்றுமே உமது திருவுளத்தை ஏற்று வாழும் வரமருளும்.

ஆமென்.