பிழை தீர்க்கிற மந்திரம்.

சர்வ தயாபர சேசுவே!
பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

மண்ணால் மனுசனை உண்டாக்கி
திவ்விய கருணையால் வல்லவனாக்கி
அவன் கையாற் பாடுபடத் திருவுளமான
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

துஷ்டயூதர் கையிற் சிறைப்பட்டு
திருக்கண்டத்தில் கரத்திற் கயிறிட்டு
செம்மறி போலப் பலிக்கேகப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

அந்நீத குருச்சபையிலமைந்து
பொய்ச் சாட்சிகளுக்குப் பணிந்து
தேவ பழிகாரணாகக் கூறப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திருக் கண்ணத்தில் அறையுண்டு
திரு விழிகள் மறைக்கப்பட்டு
இரா முழுவதும் கோறணி வாதைகள் அனுபவித்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

பிலாத்திட்ட துஸ்ட தீர்வையாற் கற்றுணில் கட்டுண்டு
நிஸ்டுரமாக ஐயாயிரத்துக்கு அதிகமாக அடிபட்டு
சர்வாங்கமும் இரத்தவாறாக்கப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திருச்சிரசில் முள்முடி தரித்து
பீற்றற் சகலாத்தை மேலிற் போர்த்து
பரிகாச ராசனாக நிந்திக்கப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

பாரதுரச் சிலுவை தோளிற் சுமந்து
கபால மலைமட்டும் தொய்வோடே நடந்து
பெலவீனமாகத் தரையிலே விழுந்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திருத் துகிலைக் கடுரமாயுரிந்து
சர்வாங்க காயங்கள் விரிவாய் மிகுந்து
சபை முன்பாக நாணித்து வாதிக்கப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

சிலுவை மரத்தின் மீதே சயனித்து
திருப்பாத கரங்களில் ஆணிகளால் அறைந்து
இரு கள்வருக்கு நடுவே நிறுத்தப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

சிலுவையிலேறிச் சுகிர்தம் மொழிந்து
வாதிக்கிற சத்துராதிகளுக்குப் பாவம் பொறுத்து
அனைவருக்கும் தயவு காண்பித்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

சகல வாதைகளையுந் தீர அனுபவித்து
பாவிகள் இடேற்றம் முகிய முகித்து
சீவ பலியாகப் பிராணனைக் கொடுத்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திரு முக மலர்வு மடிந்து
திரு விழிகள் மறைந்து
திருத் தலை கவிழ்ந்து மரணித்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

எனக்காக இத்தனை பாடுகளைப் பட்டீரே
என் பாவம் உத்தரிக்க உமது உதிரம் சிந்தினீரே
எனது ஆத்துமத்துக்காக உமது ஆத்துமத்தைக் கொடுத்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

இந்த நன்றிகளை யெல்லாம் அடியேன் பாராமல்
எனக்காகப் பாடுபட்டதையும் எண்ணாமல்
மகா துட்ட துரோகத்தைச் செய்தேனே
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

இதோ என்னிருதயஞ் சகலமும் உதிர்ந்து
விதனத்தாற் பொடிப் பொடியாகப் பிளந்து
கண்களால் கண்ணீர் சொரிந்தழுது நிற்கிறேன்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

என் பாவத்தின் அதிகத்தையும் கொடுமையையும் பாராமல்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய கிருபையையும் மகிமையின் மிகுதியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய கசையடிகளையும் முள்முடியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய சிலுவையையும் திருமரணத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய சர்வாங்க காயங்களையும் திரு உதிரத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

சர்வ தயாபர இயேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும் - 3 முறை
(மூன்று பரலோக மந்திரம் சொல்லி முடிக்கவும்)