மரித்த விசுவாசிகளுக்காக பிரார்த்திக்கக் கடவோம்.

சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா, மரித்த உமது அடியோர்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுகளை அங்கீகரித்து அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். சதாகாலமும் சீவியரான சர்வேசுரா, இந்த மன்றாட்டைத் தயவோடே கேட்டருளும் சுவாமி.

நித்திய பிதாவே! பெற்றோர் பந்துக்கள், சிநேகிதர், உபகாரிகள் முதலியவர்களைத் தக்க விதமாய் நேசித்து அவர்களுக்கு வேண்டிய நன்மை செய்யக் கற்பித்தருளினீரே. ஆகையால் எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் பற்பல உபகாரம் எங்களுக்குச் செய்தவர்களும், எங்கள் பந்துக்கள், சிநேகிதர் முதலானவர்களும், வேதனை நீங்கி, நித்திய காலம் உம்மைச் சந்தோஷமாய்த் தரிசித்துக் கொண்டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுவோமாக. நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி. முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.

சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா! முக்திப்பேறு பெற்ற கன்னித்தாயான மரியாயுடைய ஆத்துமமும் சரீரமும் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்து அருளினீரே! அந்தத் திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

ஆமென்.