குழந்தை இயேசுவிடம் நோய் வேளை மன்றாட்டு.

இரக்கமுள்ள குழந்தை இயேசுவே! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும். இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர்.

இன்று இந்த உமது திருச்சுரூபத்தை நாடி வரும் ஆயிரமாயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான, படு மோசமான நோய்களிலிருந்து உம்மால் தான் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

குழந்தை இயேசுவே! நான் ஒரு பாவி; துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன்; உமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்குத் தெரியும்.

என்றாலும் எண்ணற்ற வரங்களையும், நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும், மாபெரும் பாவிகளுக்குக்கூட நீர் மனம் இரங்கி அளித்து வருகின்றீர். ஆகையால் என்னையும் நீர் குணமாக்க முடியும் என்று இன்னும் அதிகமாக நான் நம்புகிறேன்.

வானக மருத்துவரே! இந்த....... நோயினின்று (நோயை குறிப்பிடுக) நான் குணமடைய வேண்டும் என்பதற்காக, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும். எல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும். பெற்ற குணத்திற்கும் மூலகாரணம் மருந்தல்ல, எல்லாம் வல்ல உமது தெய்வீக ஆற்றல் என்பது எல்லோருக்கும் புலனாகும்படி எனக்கு சுகமளித்தருளும்.

ஆய்ந்தறிய முடியாத உமது ஞானத்திற்கேற்ப எந்த நிலையிலும் உமது திருச்சித்தப்படியே எனக்கு ஆகட்டும். ஆன்ம நலனையும் அடியேனுக்கு அளித்தருளும். இந்நோயால் நான் துன்புறுகையில், உமது ஆறுதலின் இனிய அமுதம் என்மேல் வழிந்தோடட்டும். இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை என் உள்ளத்தை நிரப்பட்டும்.

அன்பும், இரக்கமும் உள்ள குழந்தை இயேசுவே! துன்பங்களைத் திடமனத்துடன் சகித்துக் கொள்ளவும், உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம்தாரும். ஓ! இயேசுவே, என்னை ஆசீர்வதியும் நோயால் படுக்கையாகி விட்டாலும், நித்திய வாழ்வை நீர் எனக்கு வழங்கும். உமது பேரன்பை நான் போற்றிப் புகழ அருள் தாரும்.

ஆமென்.