பாப்பரசர் 13-ம் சிங்கராயர் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பேரில் செய்த செபம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எங்களுடைய துன்ப துயரங்களில் உமது சரணமாக ஓடி வந்தோம். உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின், உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு மன்றாடுகின்றோம்.

தேவ தாயாரான அமலோற்பவ கன்னிமாதாவின்பேரில் நீர் வைத்திருந்த அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து, அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய் பார்த்தருளி, எங்கள் அவசரங்களில் உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

திருக்குடும்பத்தைக் காத்து நடத்தின விவேக காவலனே! இயேசு கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும். அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே! சகல பாவங்களினின்றும் எங்களைத் தற்காத்தருளும். வல்லமை பொருந்திய பாதுகாவலனே! எங்கள் சத்துருக்களோடே நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும்.

மரண ஆபத்தினின்று திவ்விய பாலனை தேவரீர் அன்று மீட்டு இரட்சித்ததைப்போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் நின்றும் இக்கட்டு இடையுறுகளில் நின்றும் திருச்சபையை பாதுகாத்தருளும். உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரிகையைப் பின்சென்று, பரிசுத்தமாய் சீவித்துப் பக்தியாய் மரித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய இடைவிடாத உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும்.

ஆமென்.