பரிகாரச் செபம்.

ஓ! சேசுவே, தெய்வீக இரட்சகரே, ஒரே விசுவாசம், ஒரே பரிகாரம், ஒரே சிநேகத்தின் ஆசையால் தூண்டப்பட்டு இங்கு ஒன்றுகூடி தங்களுடைய சொந்தத் துரோகங்களுக்காகவும், தங்கள் சகோதரராகிய சகல நீசப் பாவிகளுடைய துரோகங்களுக்காகவும், அழுது பிரலாபிக்கும் உமது பிள்ளைகளாகிய எங்கள் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். நாங்கள் ஒருமனப்பட்டு இப்போது விசேஷித்த விதமாகச் செய்யவிருக்கும் வார்த்தைப்பாடுகள் உமது தெய்வீக இருதயத்தைத் தொட்டு, எங்கள் பேரிலும், உலகத்தின் பேரிலும், உம்மை சிநேகிக்காத சகல நிர்ப்பாக்கியர்களின் பேரிலும் உமது இரக்கத்தை அடைந்தருளும்படி செய்வீராக.

இன்றையிலிருந்து நாங்கள் எல்லோரும் வாக்களிப்பதாவது.

மனிதருடைய மறதிக்கும் நன்றிகெட்டதனத்திற்கும் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவ நற்கருணைப் பெட்டியில் தேவரீர் கைவிடப்பட்டிருப்பதற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

பாவிகளின் அக்கிரமங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

துஷ்டர்களின் பகை விரோதத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீர் பேரில் சொல்லப்படும் தூஷணங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உம்முடைய தெய்வீகத்திற்கு செலுத்தப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உம்முடைய அன்பின் தேவத்திரவிய அநுமானத்தை அவசங்கைப்படுத்தும் தேவதுரோகங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உமது பரிசுத்த சந்நிதியில் கட்டிக்கொள்ளப்படும் அவமரியாதை, அநாச்சாரங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

ஆராதனைக்குரிய உயிர்ப்பலியாகிய தேவரீருக்கு, மனிதர் செய்கிற தீமை பக்கங்களுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உம்முடைய பிள்ளைகளுக்குள்ளே அநேகர் உமக்குக் காட்டுகிற அசட்டைத்தனத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உமது நேச அழைப்புகளைப் புறக்கணிப்பதற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

உமது அன்பர் என்று சொல்லிக்கொள்ளுவோருடைய அவிசுவாசத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீருடைய வரப்பிரசாதங்களை அவமதிப்பதற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்களுடைய சொந்த அவிசுவாசத்துக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

புத்திக்கு ஒவ்வாத எங்களுடைய மூடக் கல்நெஞ்சத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீரை நாங்கள் நேசிக்க வெகுநாள் தாமதம் செய்ததற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீருடைய ஊழியத்தில் சுறுசுறுப்பற்ற எங்கள் தன்மைக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

ஆத்துமங்கள் சேதமாவதினால் நீர் அடையும் கடுந்துயரத்திற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீரை எங்கள் இருதய வாசலண்டை வெகுகாலம் காக்க வைத்ததற்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

தேவரீரை மனநோகச் செய்யும் நிஷ்டூர நிந்தைகளுக்குப் பரிகாரமாக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

அன்பின் மிகுதியினால் எங்கள் மத்தியில் தேவரீர் சிறைவைக்கப்பட்டிருப்பதற்காக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்கள் மீது வைத்த சிநேகப் பெருக்கத்தினால் தேவரீர் விட்ட பெருமூச்சுகளுக்காக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்கள் மீது வைத்த சிநேகப் பெருக்கத்தினால் தேவரீர் சிந்திய கண்ணீருக்காக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

எங்கள் மீது வைத்த சிநேகப் பெருக்கத்தினால் தேவரீர் அடைந்த மரணத்திற்காக, நாங்கள் உமக்கு ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே.

ஜெபிப்போமாக.
ஓ! சேசுவே, தெய்வீக இரட்சகரே, "எனக்கு ஆறுதல் கொடுக்கும்படி ஒருவரைத் தேடினேன். அப்படிப்பட்டவர் ஒருவரும் கிடைக்கவில்லை" என்னும் துயரமான முறைப்பாடு உமது திரு இருதயத்தினின்றல்லோ வந்தது? இதோ நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எளிய ஆறுதலைக் கருணையுடன் ஏற்றுக்கொள்ளும். இனி உம்மை மனநோகச் செய்யும் எல்லாவற்றையும் நாங்கள் விலக்கி, எல்லாவற்றிலும், எல்லாவிடங்களிலும் நாங்கள் உமது பக்தியுள்ள பிள்ளைகளாக விளங்கும்படி எங்களுக்குத் துணைபுரியும்.

ஆமென்.