பரிசுத்த ஆவியாரின் நவநாள் செபம்.

மூவொரு இறைவா, உம்மைத் தொழுகிறோம், அனைத்திற்கும் முதல் பொருள் நீரே.

இறைவா, உம்மை விசுவசிக்கிறோம், என்றும் மாறாத நிலையான உண்மை நீரே.

இறைவா, உம்மை நம்புகிறோம், எல்லையற்ற இரக்கமும், நிறையாற்றலும் நீரே.

இறைவா, உம்மை அன்பு செய்கிறோம், அளவற்ற அன்பும், நன்மையும் நிறைந்தவர் நீரே.

அன்புத் தந்தையே, உம் பரிசுத்த ஆவியாரை அனுப்பியருளும், அவர் எங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவாராக.

இனிய இயேசுவே, உமது பரிசுத்த ஆவியாரின் கொடைகளை அனுப்பியருளும், அனைத்திலும் நாங்கள் இறைவனை மகிமைப்படுத்துவோமாக.

அக்னி நாவுபோல் சுடர்விடும் அன்பின் பரிசுத்த ஆவியே, என் மேல் எழுந்தருளி வாரும். இறைமக்கள் உள்ளங்களை உம் அருள் ஒளியால் நிரப்பும். அவற்றில் அன்புத் தீயைப் பற்றி எரியச் செய்வீர். உம்முடைய அறிவுச் சுடரொளியை வரவிடுவீர். அதனால் இந்தப் பூவுலகைப் புதுப்பிப்பீர்.

செபிப்போமாக.
அளவற்ற அன்பும், இரக்கமும், நிறைந்த உன்னத இறைவா, பரிசுத்த ஆவியின் ஆற்றலால் உம் மக்களின் உள்ளங்களைப் புதுப்பித்தவர் நீரே. அத்பரிசுத்த ஆவியின் ஆற்றலால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அதனால் நன்னையானதை நாடவும் அருள்புரிவீராக. அவர் அளிக்கும் ஆறுதலால் துணிவை அடையும் மனவலிமையையும் எமக்குத் தாரும்.

ஆமென்.