திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.
தரித்திரர்களுடய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும்.
வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும்.
உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!
ஆமென்.
பிரார்த்திக்கக்கடவோம்.
சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடய இருதயங்களை இஸ்பிரீத்துசாந்துவின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே, அதே இஸ்பிரீத்துசாந்துவினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.
ஆண்டவரே, நாங்கள் சரீரக் கற்புடனே உமக்கு ஊழியம் செய்யவும், இருதய சுத்தத்துடனே உமக்குப் பிரியப்பட நடக்கவும், உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி. எங்கள் கிரியைகள், வார்த்தைகளெல்லாம் உம்மைக் கொண்டு துவக்கவும், உம்மிலே முடியவும் வேண்டியதாகையால், நாங்கள் அதை செய்வதற்கு முன்னமே உம்முடைய ஏவுதலைத் தந்தருளும். செய்யும்போது உமது உதவியைத் தந்து நடத்தும் ஆண்டவரே.
ஆமென்.