அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் மீது திருவாசகம்.

அற்புதங்கள் கேட்பதேனோ
அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம்
தப்பறைகள் விஷப்பிணிகள்
சாருமரணம் விலகச்
செப்ப லொண்ணாய் பெருங்குஷ்டம்
கீர்த்தி பெறும் அந்தோனி
அப்பன் முலம் பேய்க் கணங்கள்
அகன்றனைவர் சுகமடைந்தார்.

கடலில் வீழ்ந்தோர் கரையைக் கண்டார்
கரத்திற் சங்கிலி கட்டவிழ
உடனெழுந்தார். உரோகவாதர்
உம்மை நாடி வந்தவரில்
கடையரென்றும் கண்ணயரென்றும்
கருதாமல் மிகக் காத்தீர்
தடையிலாது காணச் செய்தீர்
தவறிய பொருள் தனயர்களே.

பாழ்விபத்தால் வறுமையினால்
பரிதவிக்கும் பாவிகள்மேல்
பரிதாபம் கொண்டு திவ்விய
பாலனிடம் பரிந்து பேசி
தாழ்வகலத் தார்பரித்தீர்
தரணியோர் சாட்சி சொல்வார்
தருமபதுவா புரியார்
சந்ததமுன்புகழ் கூறுவார்

வாழிபிதா சர்வேசுவருனுக்கும்
வல்லசுதன் ஆண்டவர்க்கும்
வாழநேரே இஸ்பிரீத்து
வரமருளும் தேவனுக்கும்
நல்ல மூவராள்கையில்
நலமான தோர்கடவுள்
எல்லோரும் முடிவணங்கி
எக்காலந் துதிப்போமே

இயேசு கிறிஸ்துவின் திருவாக்குத் தத்துவங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக. அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக.
இறைவா! உமது துதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரைக் குறித்து செய்யப்படுகிற பக்திக்குரிய கொண்டாட்டமானது தேவரீருடைய திருச்சபைக்கு மகிழ்ச்சி தருவதாக! அதனால் திருச்சபையானது ஞான பலம் கொண்டு எப்போதைக்கும் ஆதரிக்கப்படவும் நித்திய பேரின்ப பாக்கியத்தை அடைய பாத்திரமாகவும் கடவது. இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.

(இத்திருவாசகத்தைத் தினந்தோறும் செபிப்பவர்களாக 100 நாள் பலனும் மாதத்தில் ஒரு பரிபூரண பலனும் 9 ஆம் பத்திநாதர் தந்தருளினார்). (25 Jan. 1866) (மேற்சொன்ன திருவாசகத்தை உசேனி இராகத்திலும் பாடலாம்)