திவ்ய நற்கருணைக்கு நிந்தைப் பரிகார ஜெபம்.

ஓ மகா பரிசுத்த திரித்துவமே, பிதாவே! சுதனே! இஸ்பிரீத்துசாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்குமுள்ள நற்கருணைப் பேழைகளிலிருக்கும் சேசு கிறீஸ்துவின் விலை மதிக்கப்படாத திருச் சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்கு செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்.
ஆமென்.

ஆகாயமும், பூலோகமும் தாங்கிய சகலமான உயிருள்ள வஸ்துக்களுக்கும் அமுதளிக்கும் நாதனே! எனக்கு யாவற்றையும் கொடுத்து, உம்மையும் என் ஆத்தும போஜனமாக தேவ நற்கருணையில் கொடுத்துவிட்ட ஆண்டவரே, உமது மட்டற்ற தயாளத்தையும், சிநேகத்தையும் கண்டு பிரமித்து, இந்த தேவ நற்கருணையில் பயபக்தியோடு உம்மை வணங்கி, என்னை முழுமையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். வானம் கொண்ட ஆச்சரியமான அண்டகோளங்களுக்குப் பிரகாசம் தந்து, ஒன்றோடொன்று தட்டாமல் இயக்கும் தேவனே, நான் பொன்னாசை, புவியாசை, சரீர ஆசைகளில் தட்டுப்படாமல் சுகந்த பரலோக பரிமளம் வீசும் உம்மில் இளைப்பாறச் செய்தருளும். சர்வலோகங்களிலும் அடங்காத கர்த்தாவே, என் மேல் வைத்த சிநேகப் பெருக்கத்தால் தேவ நற்கருணையில் அடங்கினதை யோசித்து நடுநடுங்கி எல்லாவற்றையும் வெறுத்து, உம்மைக் கெட்டியாய்ப் பற்றி ஆராதிக்கிறேன். என் சித்தம், புத்தி, ஞாபகம், ஆசையெல்லாம் ஒன்றிலும் அடங்காமல், உம்மில் மாத்திரம் அடங்கிப் போகச்செய்தருளும் சுவாமி.

ஆமென்.