முன்னுரை - ஜெபமாலை தியானங்கள்

மரியா வால்டோர்ட்டாவின் “கடவுள்-மனிதனின் காவியத்தில் " உள்ள ஜெபமாலை தியானங்கள்

பொதுவாக, பரிசுத்த ஜெபமாலை ஜெபிப்பவர்களின் மனங்களில் உள்ள ஒரு பெரும் குறைபாடு, அதை ஜெபிக்கும் போது, பராக்கைத் தவிர்க்க முடிவதில்லை என்பதும், ஜெபமாலையை நன்கு தியானித்து ஜெபிக்கத் தங்களால் முடிவதில்லை என்பதும்தான். இதன் காரணமாக, ஜெபமாலை ஜெபிப்பவர்களின் அநேகர், அதன் மூலம் தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பலன்களில் பெரும் பகுதியை இழந்து போவது வழக்கமாகவே நிகழ்ந்து வருகிறது. எனவே போதுமான அளவுக்கு ஜெபமாலையைக் கருத்தூன்றி ஜெபிக்க இயலாதவர்கள், தங்கள் தியானத்திற்கு உதவக் கூடிய ஒரு சிறு நூலைப் பயன்படுத்தி ஜெபமாலை ஜெபிக்கும் போது, இந்தப் பெரும் குறைபாட்டிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.

இந்நூலில், காட்சி தியானியான மரியா வால்டோர்ட்டா வழியாக ஆண்டவர் நமக்குத் தந்திருக்கிற "கடவுள் - மனிதன் காவியத்தில்" உள்ள ஜெபமாலைத் தேவ இரகசியங்களோடு தொடர் புள்ள அத்தியாயங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறோம். ஜெப மாலையை ஆழ்ந்து தியானித்தபடி ஜெபிப்பதற்கு இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். இதைப் பயன்படுத்தி ஜெபமாலை ஜெபிப்பவர்கள் பின்வரும் குறிப்புகளை மனதில் இருத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்:

1. ஒரு தேவ இரகசியத்தை ஜெபிக்கத் தொடங்கும் போது, உதாரணமாக, ''கபிரியேல் சம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போமாக" என்று தொடங்கி, ஒரு பரலோக மந்திரத்தையும், தொடர்ந்து பத்து அருள்நிறை மந்திரங்களையும் மனதிற்குள் சொல்லவும். அதே சமயம், இந்த தேவ இரகசியம் தொடர்பான இந்நூலிலுள்ள அத்தியாயத்தை மெதுவாக வாசித்துத் தியானிக்கவும்.

2. ஒரு தேவ இரகசியத்தை தியானிக்கும் போது, அதற்குரிய அத்தியாயத்தை முழுவதுமாக வாசிக்க வேண்டிய அவசியமில்லை. பத்து மணிகளுக்குள் அதை முழுவதுமாக வாசித்து முடிப்பது சாத்தியமுமில்லை. மேலும், அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து அதை வாசிப்பதும் அவசியமில்லை. எனவே, ஜெபமாலை ஜெபிப் பவர்கள் இந்நூலில், குறிப்பிட்ட அத்தியாயத்தில் தாங்கள் விரும்பும் பகுதியை வாசித்து தியானிப்பது போதுமானது.

3. தியானங்களை வாசிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட வாக்கியம் தங்களில் பக்தியைத் தூண்டுவதாக உணர்ந்தால், அந்த வாக்கியத் தையே ஆழ்ந்து தியானிப்பது அதிக பலன் தரும்.

4. ஒருவேளை ஜெபமாலை ஜெபிப்பதில் நீண்ட நேரத்தைச் செலவிட முடிந்தவர்கள், பத்து மணி முடிந்த பின்னும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை முழுவதுமாக வாசித்து தியானித்து விட்டு, அதன்பின் அடுத்த தேவ இரகசியத்திற்குச் செல்லலாம்.

5. தேவைப்பட்டால், 5 பத்து மணிகளுக்கும் ஒரே தேவ இரகசியத்தின் தியானத்தை நிறுத்தி நிதானமாக வாசித்துப் பயன் படுத்துவதும் ஜெபமாலையை நன்கு தியானித்துச் சொல்ல ஒரு நல்ல வழியாகும். உதாரணமாக, துக்க தேவ இரகசியங்களை தியானிப் பவர்கள், சேசுநாதர் சுவாமி சிலுவையில் அறையுண்டு மரித்தது தொடர்பான நீண்ட அத்தியாயத்தை மட்டுமே பயன்படுத்தி இந்த இரகசியங்களை தியானிக்கலாம்.

இந்நூல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்க ஞானத்திற்கு இருப்பிடமாகிய பரிசுத்த ஜெபமாலை மாதாவிடம் மன்றாடுகிறோம்.

மரியாயே வாழ்க!