மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றி

பரிகார பக்தியின் பிரகடனம் : பரிகாரம் என்னும் வேத உண்மை எக்காலமும் உள்ளதுதான். அது “ பாத்திமா போதனையாக “ இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக மாதாவால் போதிக்கப்படுகிறது. அதன் முதல் பாத்திமா பரிகாரப் பிரகடனம் பாத்திமா சம்மனசானவரால் முதன்முதலில் செய்யப்பட்டது. அதன்படி முதன்முதலில் பரிகாரம் செய்யப்படவேண்டியவர்: எல்லாம் வல்ல சர்வேசுரனேயாம்!

பாத்திமா சம்மனசானவர் இரண்டாம் காட்சியில்: “ உங்களால் முடிந்த அளவு அனைத்தையும் பரித்தியாகமாக்குங்கள். கடவுளை நோகச் செய்கிற பாவங்களுக்குப் பரிகாரமாக அவைகளை ஒப்புக்கொடுங்கள். பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் ஒப்புக்கொடுங்கள். யாவற்றிற்கும் மேலாக கடவுள் உங்களுக்கு அனுப்புகிற துன்பங்களை அமைந்த மனதுடன் தாங்கிக் கொள்ளுங்கள் “ என்றார். இவைதான் பாத்திமா தூதரின் முதல் பரிகார பிரகடன வார்த்தைகள்.

“ தூதரின் இந்த வார்த்தைகள் எங்கள் மனதில் அழியாதவிதமாய் பதிக்கப்பட்டன “ என்று சகோதரி லூசியா எழுதியிருக்கிறாள். பரிகார பக்தியின் முதல் அம்சம்: கடவுளுக்குப் பாவபரிகாரம் செய்யவேண்டும் என்ற கருத்து. இது நம் மனதில் ஆழமாக பதிக்கப்பட வேண்டும்.

“ தூதரின் வார்த்தைகள் ஓர் ஒளி போல் இருந்தன. அவ்வொளி கடவுள் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்றும். நம்மால் நேசிக்கப்பட எவ்வளவு ஆசிக்கிறார் என்றும் அதிலே நாங்கள் கண்டுபிடித்தோம். பரித்தியாகங்களின் விலை எவ்வளவு அதிகமானது, அவற்றின் பொருட்டு கடவுள் பாவிகளை மனதிருப்புவதற்கு எப்படி வரப்பிரசாதங்களைக் கொடுக்கிறார் என்று அறிந்து கொண்டோம் “ என்றும் லூசியா கூறியிருக்கிறாள்.

இக்குழந்தைகள் கடவுளை உணர்ந்தார்கள். தம்மால் நேசிக்கப்பட அவர் எவ்வளவு ஆசிக்கிறார் என்றும் கண்டுபிடித்தார்கள். இவைகளை நாமும் உணர்ந்து கண்டுபிடிக்கும்படி மாதாவிடம் வேண்டினால் நமக்கும் அந்த வரப்பிரசாதம் கொடுக்கப்படும்.

நன்றி : மாதா பரிகார மலர்

பரிகாரம், பரித்தியாகங்கள், ஒறுத்தல்கள், நமக்கு வரும் சிலுவைகளை ஏற்பது ( நோய் வந்தால் வைத்தியம் செய்யனும் அதுவரை உள்ள வேதனையை ஒப்புக்கொடுக்கனும்) திருப்பலியில் பக்தியோடு கலந்து கொண்டு திவ்ய நற்கருணை உட்கொள்வது ( மாதத்தின் முதல் வெள்ளி, முதல் சனி பக்தியை அனுசரிப்பது. ( பரிகார நற்கருணை உட்கொள்வது, ஜெபமாலை ஜெபிப்பது இவைகள் மூலமாக இயேசுவின் திருதயத்திற்கும், மாதாவின் மாசில்லா இருதயத்திற்கும் ஆறுதல் அளிப்பது மற்றும் வெற்றியை தேடித்தருவது.