உத்தரிக்கும் ஸ்தலம் -7 :

புனித தந்தை பாத்ரே பியோவின் அனுபவங்கள்

“ நாளை நீர் எனக்காகப் பூசை நிறை வேற்றினால் நான் மோட்சம் போவேன் “

தந்தை பியோ 1917-ல் ஒரு நாள் மடத்தின் பொது கணப்பறையில் இருந்த போது, தம் அருகில் ஒரு வயோதிகரைக் கண்டார். அந்த மனிதர் அவரிடம் :  “ நான் பியேத்ரா டி மவுரோ. என் புனைப் பெயர் ப்ரேக்கோக்கோ. நான் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி அன்று இந்த இடத்தில் 4- அறையில் ஒரு தீ விபத்தில் இறந்தேன். நான் உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்து உம்மிடம் வர  ஆண்டவர் என்னை அனுமதித்திருக்கிறார். நாளைக்கு நீர் எனக்காக பூசை வைத்தால், நான் மோட்சம் போவேன்” என்று கேட்டுக் கொண்டார்.

பாத்ரே பியோ வாய்மொழியாக இது பற்றி “ நான் கலக்கமடைந்தேன். அதிபர் தந்தை பவுலினோ டா காஸாகாலந்தா அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி பியேத்ராவுக்காக பூசை வைக்க அனுமதி கேட்டேன். அவரும் அனுமதி தந்தார். அதன்பின் பியேத்ரா என்னிடம் சொன்னது உண்மைதானா என்று அறிய, அதிபர் தந்தை நகர மன்றத்திற்கு சென்றார். உண்மையில் 1886-ம் ஆண்டில் அதே தேதியில், இப்போது மடம் இருந்த இடத்தில் அரசாங்க மருத்துவ மனை ஒன்று இருந்தது என்பதையும், அதில் 4-ம் எண் அறையில் இதே பெயருள்ள ஒரு நோயாளி ஒரு தீ விபத்தில் புகையால் மூச்சுக்தினறி இறந்திருந்தார் என்பதையும் அரசாங்க பதிவேட்டிலிருந்து அவர் அறிந்து கொண்டார் “ என்றார்.

ஒரு நாள் மாலையில் தந்தை பியோ கோவிலில் தனியாக ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது மெழுகுவர்த்திகள் தரையில் விழுவது போன்ற மோதல் சத்தத்தை அவர் கேட்டார். ஆகவே அவர் எழுந்து திவ்ய நற்கருணை கிராதிக்கு சென்றார். அங்கே தாம் அதுவரை கண்டிராத ஒரு இளம் துறவியை அவர் கண்டார். அவர் பியோவிடம், “ நான் ஒரு கப்புச்சின் நவதுறவி. நான் இப்போது உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறேன். நான் இந்தக் கோவிலில் வேலையில் கவனமில்லாமல் இருந்ததற்காக இப்போது பரிகாரம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

தந்தை பியோ அவரிடம் “ நாளைக்கு என் பூசை உங்களுக்குத்தான். இப்போது வெளியில் செல்லுங்கள். இனி திரும்பி வராதீர்கள் “ என்றார். அச்சமையத்தில் உள்ளே வந்த தந்தை எம்மானுவேல் என்பவர் வியப்போடு தந்தை பியோவைப் பார்க்க அவர் நடந்ததை விவரித்தார்,. இருவரும் பீடத்திற்கு பின்னால் சென்று பார்க்க, அங்கே தரைமீது பல பெரிய மெழுகுவர்த்திகள் கிடந்ததைக் கண்டார்கள்..

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ.ஜேசுராஜ் Ph: 9894398144

குறிப்பு : நம்முடைய அன்றாட கடமைகளை சலிப்பில்லாமல் முழு மனத்தோடு கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து செய்வோம். நம்முடைய அன்றாட பணிகளும் நமக்கு உணவும், ஜெபமும் ஆகும்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !