உத்தரியம் - பாகம் 03 - பாவ வாழ்வில் இருந்து மனம் திரும்பி உத்தரிய மாதாவின் வாயிலாக நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து மரித்த பெண்மணி.

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரு மிகச் சிறிய பங்கில் வாழும் செபமாலை இயக்கம் நடத்திய ஒரு நாள் செபமாலை தியானத்தின் போது, ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்திருந்தார். அவர் அனைத்து பிரசங்கங்களையும் கவனமாக கேட்டு, கேள்வி நேரத்தில் சரியான பதில்களைச் சொல்லி மிகவும் அருமையான முறையில் பங்கெடுத்தார்.

நமதன்னையின் உத்தரியத்தின் மகிமைகள் குறித்த தலைப்பில் மக்களுக்கு உத்தரியத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டு, மதியம் ஒரு மணியளவில் அனைவருக்கும் குருவானவர் உத்தரியம் அணிவித்தார். அதில் அந்த பெண்மணியும் அடங்குவார்.

மதியம் ஒன்றேகால் மணியளவில் ஊரே ஒரே களேபரமானது, கோவிலில் துக்கமணி அடித்துள்ளார்கள். என்ன? ஏது? என்று விசாரித்ததில் அந்த பெண்மணி இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். அப்போது குருவானவரின் சமையல்கார பெண்மணி அவர்களிடம் அந்த பெண்மணி குறித்த சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார்.

இறந்து போன அந்த பெண்மணி, ஊரில் அனைவருடனும் சண்டை போடுவது, யாருடனும் சண்டை என்றால் அவர்களுக்கு செய்வினை செய்வது என்று இருந்துள்ளார். அனைத்திற்கும் மேலாக தனது மருமகளைஐந்து ஆண்டுகள் வாழாவெட்டியாக மகனிடம் இருந்து பிரித்து வைத்துள்ளார்கள்.

ஆனால் கடந்த மூன்று மாதங்களாக, கோவிலில் செபமாலை சொல்லும்போது கடைசி பத்து மணிகளை யாருக்கும் கொடுக்காமல் அவர்கள் சொல்லி வந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, உத்தரியம் அணிந்த அன்று உடனடியாக பகுத்தந்தையிடம் சென்று பாவசங்கீர்த்தனம் செய்துள்ளார்கள். உடனடியாக தனது மருமகளின் வீட்டிற்கு சென்று அவளது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, தனது மகனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கேயே விழுந்து உயிர்விட்டுள்ளர்கள்.

 ***சிந்தனை***

 “எனது உத்தரியம் அணிந்து மரிக்கும் எந்த ஆன்மாவும் நரகத்திற்கு செல்லாது” என்று நமது கார்மேல் அன்னை, தனது அன்பு ஊழியன் 1251, ஜூலை 16 ஆம் நாள் புனித சைமன் ஸ்டாக்கிற்கு வாக்குறுதி அளித்தார்கள். இந்த வாக்குறுதி நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அன்னையின் வாக்குறுதி பொய்க்காது என்று நம்பிய எண்ணற்ற அன்னையின் குழந்தைகள் உத்தரியம் அணிந்து விண்ணக வாழ்வினைப் பெற்றனர்.

உத்தரியம் என்பது பொதுநிலையினரை, கார்மல் அன்னையின் சபையில் சேர்க்க அவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு அடையாளமாகும். இது கார்மல் சபையின் துறவியர்கள் அணியும் அங்கிக்கு ஒப்பாகும். இதனை அணியும் ஒவ்வொருவருக்கும் மரண வேளையில் அன்னை துணையாக வந்து நல்ல பாவ மன்னிப்பு பெறுவதற்கு உதவுவார்கள். அதன்மூலம் அவர்கள் விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்வார்கள்.

நன்றி : சகோ. ஜெரால்ட்

source : www.catholictamil.com

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !