பரிசுத்த வேதாகமத்தில் நம் தாய் அன்னை மரியாள்!

கடவுள் ஆணும் பெண்ணுமாக இருக்கிறார். ஆனால் ஆண் தோற்றத்தில் இருக்கிறார்.

அப்படியானால் பெண் யார்? எங்கே இருக்கிறாள்? என்பதை விவிலியத்தில் காண்போம்.

மானிடரே!  உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்; ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன். நீதிமொழிகள் 8:4

நானே ஞானம்; ... அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.   திட்டம் இடுவதும் நானே; இட்டதைச் செய்வதும் நானே. உணர்வும் நானே; வலிமையும் எனதே. அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால் .... ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைக் (கடவுள்) படைத்தார்.

தொடக்கத்தில், பூவுலகு உண்டாகும் முன்னே, நானே முதன் முதல் நிலைநிறுத்தப் பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுக்களும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படும் முன்னே, குன்றுகள் உண்டாகும் முன்னே நான் பிறந்தேன். அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்கும் முன்னே, உலகின் முதல் மண்துகளை உண்டாக்கும் முன்னே நான் பிறந்தேன்.

வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன்.  உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்த போது, நான் அங்கே இருந்தேன்.   அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் (செல்லப் பிள்ளையாய்) இருந்தேன்;

நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்பொழுதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.  நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 8

மேற்கண்ட வார்த்தைகள் மூலம், ஞானமானது உயிரோட்டமான  உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஞானத்தை உன் சகோதரி என்று சொல்; உணர்வை உன் தோழியாகக் கொள். நீதிமொழிகள் 7:4

மேற்கண்ட இறைவார்த்தையின் மூலம் ஞானத்துக்கு பெண் உருவ தோற்றம் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் அறிய முடிகிறது.

இந்த ஞானமாகிய பெண் உருவத் தோற்றமானது, அறிவையும், சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன் (நீதிமொழிகள் 8:12) என்று சொல்கிறது.

ஞானத்தின்மேல் நான் அன்பு கூர்ந்தேன்; என் இளமை முதல் அதைத் தேடினேன்; என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பினேன்; அதன் அழகில் மயங்கினேன். சாலமோனின் ஞானம் 8:2

கடவுளுடைய செயல்களைத் தேர்வு செய்வதும் அதுவே (ஞானமே) சாலமோனின் ஞானம் 8:4

 எல்லாவற்றையும் உருவாக்கியது ஞானமே. சாலமோனின் ஞானம் 7:21

ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கிறது. நீதிமொழிகள் 9:1

1. மங்காத சுடரொளி  சா ஞா 7:10,26
2. தூய்மையானது சா ஞா 7:22
3. ஆற்றலுள்ளது
4. உயிரோட்டம்
5. கூர்மையானது
6. உறுதியானது
7. அழகானது சா ஞா 7:29

இந்த ஏழு தூண்களையும் கொண்ட வீடு இறைவனின் உள்ளமே.

இந்த வீட்டில்தான் ஞானம் என்ற பெண் இருக்கிறாள்.

இவ்வாறு இறைவனின் உள்ளத்தில் உள்ள ஞானத்தின் வெளிப்பாடுதான் இறைவார்த்தை.

இவ்விறைவார்த்தையை இறைமகன் என்று அழைக்கின்றோம்.

ஏழு என்ற இறை முழுமையைக் கொண்டுள்ள இறைவார்த்தையாகிய இறைமகனால்தான் அனைத்தும் படைத்து உண்டாக்கப்பட்டது என்பதை யோவான் 1:1-3, கொலோசையர் 1:14-19
தொடக்க நூல் 1,2 அதிகாரங்கள்.

பரலோகத்தில், இறைவனின் வாயிலிருந்து புறப்பட்ட இறைவனின் வார்த்தை, இறைமகன் என்றால், அந்த வார்த்தை இறைவனின் ஞானத்திலிருந்துதானே உருவெடுத்து வருகிறது.

அப்படியானால், இறைவார்த்தையாகிய இறைமகனைப் பெற்றெடுத்தது, இறைவனுக்குள் இருக்கும் பெண்ணாகிய ஞானமே.  இவ்வாறு ஞானம் தாயாகிறது.

இந்த தாய் இருக்கும் இடம் இறைவனின் உள்ளமே.!

இந்த உண்மையைத்தான் கீழக்கண்ட பாடலில் வெளிப்படுத்துகிறார்.

பாடல்:

வந்தோம் உம் மைந்தர் கூடி
ஓ மாசில்லாத் தாயே
சந்தோசமாகப் பாடி
உம் தாள்பணியவே

பூலோகந் தோன்றுமுன்னே
ஓ பூரணத் தாயே
மேலோனின் உள்ளந்தன்னில்
நீ வீற்றிருந்தாயே
வந்தோம் உம்...

1. ஞானம்
2. புத்தி
3. விமரிசை
4. அறிவு
5. திடம் / சக்தி
6. பக்தியும்
7. தெய்வ பயம்

இந்த ஏழும் கடவுளின் பெண் தன்மை. இது கடவுளோடு இணைந்துள்ள இரண்டாம் தன்மை.

ஆற்றல் அதிகாரம் உரிமை ஆகிய இந்த மூன்றும் கடவுளின் முதன்மைத் தன்மையாகிய அரசத்துவம். இது ஆண் தோற்றமாயிருக்கிறது.

இந்த முதன்மைத் தன்மையானது, பரிசுத்த பிதா, பரிசுத்த சுதன், பரிசுத்த ஆவி என்னும், இறை ஐக்கியமாக இருக்கிறது. இந்த ஐக்கியம் ஆண் தோற்ற அழைப்பைக் கொண்டுள்ளது.

இந்த மூவொரு இறை ஐக்கியத்துக்குள் மறைவாய் இருப்பது இறை ஞானம் என்னும் பெண் உருவம்.

ஆக கடவுளின் அரசத்துவத்துக்குத் துணையாயிருப்பது அவரது ஞானமாகிய பெண் உருவமே.

இவ்வாறு கடவுள் ஆணும் பெண்ணுமாக இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.