பரிகாரம் செய்யும் விதம்

பாவப் பரிகாரம் என்பது, பாவ சந்தர்ப்பங்களையும், பாவத்தின் காரணங்களையும் அடியோடு விலக்குவதில் அடங்கியிருக்கிறது. பாவத்தை விலக்கினாலும் கூட, அதன் மீது ஆசையோடு இருப்பது மீண்டும் அதே பாவத்தில் நம்மை எளிதாகத் தள்ளி விடலாம் என்பதால், பாவத்தை வெறுத்துத் தள்ளுவதற்கான வரப்பிரசாதத் திற்காக நாம் கடவுளிடம் இடைவிடாமல் மன்றாட வேண்டும்.

பலர் தங்கள் பிரதான பாவம் (primordial sin) என்ன என்பதையே அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் பாவத்தைத் தவிர்ப்பது மிகவும் கடினம். அர்ச். காசியான் அருளப்பர் கூறுவது போல, நம் பிரதான பாவங்கள் அதிக பலமும், வேகமும் உள்ள மிருகங்கள் போன்றவை. நாம் முதலில் இவற்றைக் கண்டுபிடித்து, இவற்றிற்கு எதிராகவே முதல் தாக்குதலைத் தொடுக்க வேண்டும். இவற்றின் மீது வெற்றி பெறும் வரை, கடவுள் தரும் சகல ஆயுதங்களையும் கொண்டு இவற்றைக் கடுமையாக எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். இவற்றின் மீது வெற்றி கொண்டு விட்டோம் என்றால், பலமும் வேகமும் குறைந்த மற்ற மிருகங்களை அடக்கி ஒடுக்குவது நமக்கு எளிதாக இருக்கும்.

ஆங்காரம் என்ற பாவத்தை எதிர்த்துப் போராடத் தேவையான வல்லமையை நாம் எப்போதும் கடவுளிடம் இரந்து கேட்க வேண்டும். ஏனெனில் இதுவே நம் மிகப் பெரிய எதிரி யாகவும், எல்லாத் தீமைக்கும் வேராகவும், எல்லா நன்மையினுடையவும் தோல்வியாகவும் இருக் கிறது. தாழ்ச்சியைப் பயிற்சி செய்து இந்தப் பாவத்தை வெல்ல வேண்டும்.

அடுத்து, அர்ச். சியென்னா கத்தரீனம்மாள் கூறுவது போல, கோபத்தையும், எரிச்சலையும், பொறுமையின்மையையும் விட அதிகமாக இவ்வாழ்வில் நரகத்தின் முன்சுவையை ஒரு மனித னுக்குத் தரக்கூடிய வேறு பாவம் இல்லை. எனவே சாந்தமும், தாழ்ச்சியுமுள்ள நம் ஆண்டவரிட மிருந்து இப்புண்ணியங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றில் நிலைத்திருக்கப் பாடுபடுவோமாக.

பாவப் பரிகாரம் என்பது பாவத்தை விலக்குவது மட்டுமல்ல, மாறாக, அவற்றை எதிர்த்துப் போராடி, அவற்றின் மீது வெற்றி கொள்வதே என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

"நீங்கள் தவஞ்செய்யாவிடில் எல்லோரும்..... கெட்டுப்போவீர்கள்'' என்கிறார் நம் ஆண்டவர் (லூக் 13:3). கடவுள் உங்களுக்கு அனுப்பும் யாவற்றையும் பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுங்கள் என்று தேவமாதா பாத்திமாவில் கூறியுள்ளார்கள். ஆகவே, பின்வரும் முறைகளில் ஒவ்வொரு நாளும் நாம் தவம் /பரித்தியாகம் செய்ய முயல்வோம். நம் வாழ்வையும் புனிதமாக்குவோம்.

1. பெரியவர்கள், சிறியவர்கள், அதிகாரிகள், இளைஞர்கள், இல்லறத்தார், துறவறத்தார் என்று ஒவ்வொருவரும் அவரவர் அந்தஸ்துக்குரிய கடமைகளைச் சரியாக நிறைவேற்றுதல் மூலமாக. இதில் வரக்கூடிய கஷ்டங்களைப் பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தல். அடிக்கடி தேவத்திரவிய அனுமானங்களைப் (பாவசங்கீர்த்தனம், திவ்விய நற்கருணை) பெறுதல்.

2. நமக்கு வரக்கூடிய நோயின் வேதனைகளை தேவ சித்தத்திற்கு அமைந்த மனதோடும் பொறுமையோடும் ஏற்று ஒப்புக்கொடுத்தல்.

3. வெயில், மழை, குளிர், வேலைப் பளு, இவற்றால் வரும் கஷ்டங்களை முறுமுறுக்காமல் மனமுவந்து ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொடுத்தல்.

4. கணவன், மனைவி இருவரும் ஒருவர் மற்றவரின் குறைகளோடு அவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் பெயரால் ஒருவரையொருவர் பொறுத்துக் கொண்டு, சுபாவத்திற்கு மேலான விதமாக ஒருவரையொருவர் நேசித்தல். (இது குடும்பங்களில் சமாதானத்தை வளர்க்கும்.)

5. உறவினர்களாலும், நண்பர்களாலும், நமக்குத் தெரிந்தவர்களாலும் நமக்கு வரக்கூடிய வேதனை, அவமானம், மனத் துயரம், மனக் கஷ்டங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு அவற்றைப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தல்.

6. பிரயாணங்களில் ஏற்படும் அசௌகரியங்கள், இயற்கை சீற்றத்தால் வரும் கஷ்டங்கள், சிரமங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு அவற்றைப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்தல்.

7. நம் அனுதின உணவில் சுவைக்கு முதலிடம் கொடுக்காமல், குறைகள் இருந்தாலும் முறுமுறுக் காமல் உண்ணுதல். தேவையற்ற பதார்த்தங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, உடல் நலத் துக்குத் தேவையான அளவு மட்டும் உண்ணுவதன் மூலம் பரித்தியாகம் செய்யலாம்.

8. வேலைத்தளங்களில் கண்காணிக்க அருகில் மேலதிகாரிகள் யாருமில்லாத நிலையிலும் தன் வேலையைக் கடமையுணர்வோடும், நிறைவாகவும் செய்து முடித்தல்.

9. பாத்திமாவின் பிரான்சிஸ்கோவைப் போல, பிறர் தன் பொருளை வஞ்சகமாகத் தன்னிட மிருந்து பறித்துக்கொள்ளும்போது, அதைத் தாராளமான, பற்றற்ற மனதோடு விட்டு விடுதல். அப்படிப்பட்டவர்களுக்காகவும், நம்மை நோகச் செய்பவர்களுக்காகவும் ஜெபித்தல்.

10. சில ஒறுத்தல்களைச் செய்தாவது ஒவ்வொரு நாளும் நற்கருணைநாதரையும், நம் மகா பரிசுத்த மாதாவையும் சந்திக்க முயற்சி செய்தல். (இந்த சந்திப்பே அவர்களுடைய திரு இருதயங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும். இதனால் ஏராளமான ஆத்துமங்களை நாம் இரட்சிக்க முடியும் என்பதில் ஐயமில்லை .)

11. கோவிலில், அவசியமில்லாத போதும் முழந்தாளிட்டு ஜெபமாலை முதலிய ஜெபங் களை ஜெபிப்பதன் மூலமாகவும், ஜெபமாலையின் துக்க தேவ இரகசியங்களை கைகளை விரித்து ஜெபிப்பதன் மூலமாகவும், கோவிலையே ஒரு சிறையைப் போல நாம் உணரும்படி பசாசு நம்மை சோதிக்கும் போது, நம் விருப்பத்தையும் மீறி அதிக நேரம் ஆண்டவருக்கும், மாதாவுக்கும் முன் இருந்து ஜெபிப்பதன் மூலமாகவும் பரித்தியாகம் செய்யலாம்.

12. தூங்குவதற்கும், அமர்வதற்கும் பஞ்சு மெத்தைகளைத் தவிர்த்து, மரக்கட்டில், நாற்காலி களைப் பயன்படுத்துவது. A.C., Fan முதலியவற்றை உபயோகிப்பதை சிறிது நேரம் தவிர்ப்பது.

13. மருத்துவர் சொன்ன அளவுக்கு அதிகமாக யாரும் மருந்தை உட்கொள்வதில்லை. அதுபோல உணவையும் ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்வது ஒரு தவமுயற்சி. 

14. பசிக்காக உண்பதும், ருசிக்காக உண்ணாதிருப்பதும் ஒரு தவமுயற்சி. 

15. இரு உணவு வேளைகளுக்கு மத்தியில் நொறுக்குத் தீனியைத் தவிர்ப்பது ஒரு தவமுயற்சி.

16. உங்களுக்கு ஆண்டவர் எதைத் தருகிறாரோ அதை பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று பிரிக்காதீர்கள். தமக்குத் தரப்பட்ட கசப்பான காடியை விட அதிக கசப்பான (நமக்குப் பிரியமில்லாத) எந்த உணவையும் அவர் நமக்குத் தருவதில்லை .

17. எழுவதற்கும், உறங்குவதற்குமான நேரத்தை முடிவு செய்து கண்டிப்பாக செயல்படுத்துங்கள். 

18. நீங்கள் என்ன பணி செய்தாலும் அதனை முழு மனதுடன் செய்யுங்கள்.

19. செபிக்கும் போது கூடுமான மட்டும் முழங்காலில் இருங்கள்.

20. உங்கள் அயலாரிடம் காணப்படும் குறைகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள். 

21. கோபம் வந்தால் ஆண்டவரை முன்னிட்டு சாந்தமாய் இருங்கள். யாரையாவது பழி வாங்க, அவருக்கு நன்மை செய்யுங்கள். யார் மேலாவது கடுகடுப்பாக இருந்தால் அவரைப் பார்த்து புன்முறுவல் செய்யுங்கள். யாரையாவது சந்திக்க மனமில்லையா? அவரை தேடிப் போய் வாழ்த்துங்கள். யாரையாவது பிடிக்கவில்லையா? அவரைப் புகழ்ந்து பேசுங்கள்.

22. ஏதேனும் சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் செய்து நம்மைச் சுற்றி யிருப்போரைத் தொந்தரவு செய்யாதிருப்பது ஒரு தவ முயற்சி.

23. யாராவது உங்களைப் புகழ்ந்தால், அல்லது பிறரைப் பற்றி உங்களிடம் குறை சொன்னால் காதை இறுக மூடிக் கொள்ளுங்கள்.

24. அநாவசியமாக யாரையும் தொடாதீர்கள். 

25. குளிர்காலமோ, கோடை காலமோ, நீங்கள் தரையில் படுத்தாலும் சரி, பாயில் படுத்தாலும் சரி, வசதிக்குறைவு பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள்.

26. நீண்ட வாழ்வை அல்ல, பரிசுத்தமான வாழ்வை விரும்புங்கள். 

27. குற்றமற்ற செயல்களில் கூட மனதை அதிகம் ஈடுபடுத்தாதீர்கள். 

28. இரக்கப்படுவதும், நேசிப்பதும் கிறீஸ்தவ அடையாளம் என்றாலும், கடவுளை விட அதிகமான நேசத்திற்குரியவர் எவருமல்ல என்று கண்டுபிடித்து, அதைச் செயலில் அனுசரிப்பது பெரிய தபசு.

29. பெரிய தவ முயற்சிகளில் ஒன்று நாவைக் கட்டுப்படுத்துவது. பேசிக்கொண்டிருப்பதில் இன்பம் காண்பதை விட தேவையின்றி பேசாதிருப்பதும், புறணி பேசாதிருப்பதும் சிறந்த தவ முயற்சி. 

30. பேசுவதை விட கேட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். 

31. பயனற்ற சொல் ஒன்றுவட சொல்லாதீர்கள். உங்கள் பேச்சு ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை என்று இருக்கட்டும்.

சர்வேசுரனை விசுவசியாதவர்களுக்காகவும், ஆராதியாதவர்களுக்காகவும், நம்பாதவர்களுக் காகவும், நேசியாதவர்களுக்காகவும் நாம் அவரை விசுவசிப்பதும், ஆராதிப்பதும், நம்புவதும், நேசிப்பதுமே உண்மையான தவமும், பரித்தியாகமுமாகும். இந்த உத்தமமான கருத்துடன் ஜெப, தவ, பரித் தியாக முயற்சிகளைச் செய்து, ஆண்டவரோடும், மாதாவோடும் சேர்ந்து ஆத்துமங்களை இரட் சித்து, அவர்கள் இருவருக்கும் ஆறுதல் தர ஆவலோடு முன்வருவோமாக. சேசுவும், மாதாவும் இவற்றையே மாதாவின் பிள்ளைகளிடமும், குறிப்பாக மாதாவின் அப்போஸ்தலர்களிடமும் கேட்கிறார்கள்.