வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா.

வரலாறு:

வங்கக்கடலோரம் பனை மரச்சோலையில் அமைதியான சூழலிலே அமைந்திருப்பதுதான் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம். அனைத்துலகு  புகழ்பெற்ற இந்த மரியன்னையின் திருத்தலம் "கீழை நாடுகளின் லூர்து நகர்" என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது.

இத்திருத்தலம் தஞ்சை மறை மாவட்டத்தின்  கலங்கரை தீபமாக திகழ்கிறது. இந்த திருத்தலத்திற்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான  மக்கள் திரண்டு வந்து, அன்னையின் அன்பைப்  பருகிச் செல்கிறார்கள். அவதியுறும் மக்களை அரவணைத்து தேற்றி வரும் அத்தாயின் பரிவையும் பாசத்தையும்  அனுபவித்து மகிழ்ந்து  நெகிழ்ந்து  போகிறார்கள்.

நாகரீக பழமையும், ஆழ்ந்த ஆன்மீகமும் நிறைந்த  இந்திய திருநாட்டில்  அமைந்திருக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம், பண்பாட்டினாலும், மொழியினாலும், சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணிய பூமியாக திகழ்ந்து வருகிறது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஈடு இணையற்ற சான்றாக நின்று மிளிர்கிறது வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தல பேராலயம்.

அன்று எவருக்கும் தெரியாத சிற்றூராக  வங்கக்கடலோரம் இருந்த வேளாங்கண்ணி இன்று உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக வளர்ந்து உயர்ந்து இருக்கின்றது எப்படி என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருக்கலாம். இத்தகைய மாட்சிமிக்க வளர்ச்சிக்கு காரணமென்ன? பலருக்கும் தெரியாத இச்சிற்றூரை மாதாவே தேர்ந்தெடுத்து  காட்சி தந்து ஒப்பற்ற திருத்தலமாக  அதுவும் உலக புகழ்பெற்ற மரியன்னையின் திருத்தலமாக மாற்றி இருக்கிறார்  என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைதிருத்தலம் ( நாகப்பட்டினம்மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு)  இந்தியாவில் உள்ள பெருமை மிகு, புகழ் மிகு கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் புனித ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று.

1.பால் விற்ற இடையர் குல சிறுவனுக்கு காட்சி தந்தார் வேளாங்கண்ணி ஆரோக்கிய  மாதா!

ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் நாகபட்டினத்திலிருந்த ஒரு செல்வந்தருக்கு  வேளாங்கண்ணியில் வாழ்ந்த ஒரு இடையர் குல சிறுவன் ஒருவன், ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம்.ஒரு நாள் அதேபோல் கொண்டு போகும்போது ,கடுமையான வெப்பம் தாக்கவே ,அந்த சிறுவன் சற்று இளைப்பாறும் விதமாக அங்கே இருந்த ஒரு ஆல  மரத்தின் நிழலில் குளத்துக்கு அருகே சற்று ஒய்வு எடுத்தான்,அப்போது சூரியனை விட அதிக ஒளி ஒன்று அவன் முகத்தில் பட்டது,உடனே கண் விழித்தான்  அந்த சிறுவன்.அங்கே அவன் கண்ட காட்சி..விண்ணக அழகு நிறை அன்னை தெய்வீக திருக்குழந்தையை கையில் ஏந்தியவராய் திருக்காட்சி தந்தார்.அந்த அன்னை தாய்மை புன்னகை தவழ தனது குழந்தைக்கு கொஞ்சம் பால் தருமாறு அந்த சிறுவனை கேட்டார்,,விண்ணக அழகிலே மிதந்து வந்த அத்தாயின் வேண்டுதலை சிறுவனால் புறக்கணிக்க முடியவில்லை,அச்சிறுவனும் பால் கொடுக்க ,அந்த குழந்தையும்

பருகியது  .சில வினாடிகளில் அந்த தேவ அன்னையும் ,அத்திரு குழந்தையும் அந்த இடத்திலிருந்து மறைந்தது.நாகை யில் உள்ள செல்வந்தரின் வீட்டுக்கு வந்ததும் ,அந்த சிறுவன் தான் காலம் தாழ்த்தி வந்ததர்க்காகவும் பாலின் அளவு குறைந்து இருப்பதற்காகவும் செல்வந்தரிடம் மன்னிப்பு வேண்டினான்,சிறுவன் இவ்வாறு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே என்ன ஆச்சரியம் !சிறுவன் சுமந்து வந்த பால் குடம் நிறைந்து வழிந்தோடியது.இதை பார்த்த செல்வந்தர் அந்த சிறுவனிடம் சற்று விளக்கமாய் கேட்டார்,அச்சிறுவனும் தான் வரும் வழியில் விண்ணக அழகை மிஞ்சும் தாய்,தன் குழந்தையுடன் தனக்கு காட்சி தந்ததையும் அத்தாயின் வேண்டுகோளுக்கு  இணங்க அந்த தெய்வீக குழந்தைக்கு சிறிதளவு பால் கொடுத்ததையும் சொல்லி முடித்தான் அப்போதும் பால் நிரம்பி வழிவது நிற்கவில்லை,உடனே அந்த செல்வந்தர் சிறுவன் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்தார்,அன்னை காட்சிதந்த அந்த இடத்தில் இருந்த  ஆல மரமும்  அந்த குளமும் சற்று வித்தியாசமாக தான் தெரிந்தது அந்த செல்வந்தருக்கு,உடனே அவர் அப்புனித தலத்தில் தாழ் பணிந்து வணங்கினார்,சிறிது காலத்தில் தெய்வீக தாய் காட்சி அளித்த அத்திருவிடத்தில் சிற்றாலயம் எழுப்பப்பட்டது,அதுவே இன்று நம் முன் சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும்  பழைய வேளாங்கண்ணி-மாதா குளம்,அன்று மாதா காட்சி கொடுத்த அந்த குளத்து நீர்தான் இன்று வேளாங்கண்ணி-மாதா குளத்து தீர்த்தமாக பக்தர்களால் பக்தியோடு பருக படுகிறது ,மருத்துவரால் கைவிடப்பட்ட பல நோய்கள் பிணிகள் தீர்க்கும் அரு மருந்து  வேளாங்கண்ணி-மாதா தீர்த்தம்.!

2. மோர் விற்ற, கால்  முடமான சிறுவனுக்கு காட்சி தந்து ,சுகப்படுத்தினார்    வேளாங்கண்ணி ஆரோக்கிய  மாதா

சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதாவின்  ,இரண்டாவது காட்சி வேளாங்கண்ணி சிற்றுரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு"  என்ற இடத்தில் நடைபெற்றது,அங்கே கால் ஊனமுற்ற ஒரு சிறுவன்,மோர் வியாபாரம் செய்து வந்தான்,அப்போது ஒரு நாள் மீண்டும் எழில் மிகு தோற்றத்துடன்  வேளாங்கண்ணி மாதா தனது குழந்தை யேசுவுடன் காட்சி தந்து தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டார்.தாயின் பேரழகையும் ,குழந்தையின் தெய்வீக திருமுகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன் குழந்தைக்கு  மகிழ்வுடன் மோர் வழங்கினான்.அப்போது அந்த பேரழகு பெட்டக தாய் ,அந்த  கால் ஊனமுற்ற சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார்.."மகனே உடனே நாகபட்டினம் சென்று அங்கே வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட  ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக "என்றார் ,ஆனால் அந்த சிறுவனோ தான் கால் ஊனமுற்றவன் என்னால் எப்படி அம்மா போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி மாதா வை பார்க்கிறான்,அவனின் ஏக்கத்தை புரிந்துகொண்ட வேளாங்கண்ணி மாதா "மகனே எழுந்து நட "என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார் மரியன்னை ,உடனே  அந்த சிறுவனின் ஊனமுற்ற  கால்களிலே ஒரு புது ரத்தம் பாய்வது போல் தோன்றியது அந்த சிறுவனுக்கு,உடனே எழுந்தான் ,நடந்தான்,ஓடினான் ,அந்த சிறுவனின் ஓட்டம் நாகபட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது ,வீட்டிற்க்கு சென்று நடந்ததை சொன்னான் ,அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்தார் கத்தோலிக்க கிறிஸ்தவர்.அதற்க்கு முந்தைய இரவில்  அந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்     

கனவில் வேளாங்கண்ணி மாதா தோன்றி ஆலயம் கட்ட சொன்னதை நினைவு கூர்ந்தார்,உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி மாதா கட்சி கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது ..மகனே இந்த இடத்திலேயே  ஆலயம் கட்ட வழி செய்வாயாக ..இதை கேட்ட  கத்தோலிக்க கிறிஸ்தவர்  ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டிமுடித்தார் ,அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி மாதா வீற்றிருக்கும் பேராலயம்!

3. புயலில் சிக்கிய போர்சுகீசிய மாலுமிகளின் கப்பலை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரை சேர்த்தார் வேளாங்கண்ணி ஆரோக்கிய  மாதா

கி பி 17 ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி-மாதா வின் மூன்றாவது புதுமை நிகழ்ந்தது.அப்போது சீனாவில் உள்ள மாக்கொவிலுருந்து போத்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது,வழியில் கடுமையான புயலால் அந்த கப்பல்  தாக்கப்பட்டது ,அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடலில் மூழ்கபோகிறோமே என்று   பயந்து அஞ்சி நடுங்கினார்கள் ,புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது,அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள் ,அம்மா மரியே ,எங்களை இந்த கடும் புயலிலிருந்து காப்பாற்றும் ,நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில்  கன்னி மரியே உனக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என நேர்ந்து கொண்டார்கள் ,சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோசம் குறைய தொடங்கியது,அவர்களின் புயலில் சிக்கிய  கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது ,அன்றைய தேதி செப்டம்பர் 8,அன்று கன்னி மரியின் பிறந்த நாள் ,கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை.மாலுமிகள் தாங்கள் நலமுடன் வந்து சேர்ந்ததற்காக இறைவனுக்கும் ,கன்னி மரியாவிற்க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி ,நன்றி காணிக்கையாக  மாதாவிற்க்கு சிற்றாலயம்  ஒன்று எழுப்பினார்கள்.போர்சுகீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ அப்போதெல்லாம்   மீண்டும்  மீண்டும் தாங்கள் கட்டிய சிற்றாலயம் வந்து வணங்கி செல்வது வழக்கம் ,அப்படி வரும் பொது ஒருமுறை தாங்கள் கட்டிய சிற்றாலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு அந்த மாலுமிகள் தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி-மாதா ஆலய பீடத்தில் பதித்து ஆலயத்தை அழகு படுத்தினார்கள்,அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்கை நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்ட பட்டுஉள்ளன.அவை வேளாங்கண்ணி-மாதா திருத்தல பீடத்தை அலங்கரிக்கும்  அழியா ஓவியங்களாக  இறவா காவியங்களாக இன்றும் காணப்படுகிறது வேளாங்கண்ணி-மாதா பீடத்தில்.!

இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்தபுதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.