கத்தோலிக்க திருச்சபை தோற்றமும் வரலாறும்

கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள்.

ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. 313 ஆம் ஆண்டு ரோமப் பேரரசன் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட 'நைசின் விசுவாச அறிக்கை' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. 380 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.

11 ஆம் நூற்றாண்டில் திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை,சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தது.

இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம், 1274 மற்றும் பசெல் மன்றம், 1439 இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே, புனித, கத்தோலிக்க, அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன.

திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது. இதில் பாப்பரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது. இந்நோக்கத்துக்காக டெரன்ட் மன்றம் 1545, கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் பல கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்த்திருத்தியது.

டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக்கொண்டது. இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது.

முதலாம் வத்திக்கான் சங்கம் (1869–1870), இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது.