உத்தரிக்கிற ஆன்மாக்கள் நமது உத்தரிப்புக் கடனைக் குறைப்பார்கள்!

உத்தரிக்கிற ஆன்மாக்கள், தங்களுக்கு மற்றுமொரு மிகப் பெரிய வரப்பிரசாதம் எதுவென்றால், எளிய, குறைந்த கால உத்தரிப்புக் கடன் அல்லது உத்தரிப்புக் கடனே இல்லாத மீட்பு!

தோமினிக்கன் சபையின் பொது நிலை சகோதரரான முத்திபேறு பெற்ற மாசியஸின் ஜான், உத்தரிக்கிற ஆத்மாக்களின் மேல் பெரிதும் பரிவு கொண்டிருந்தார். தனது ஜெபத்தின் மூலம் (முக்கியமாக ஜெபமாலை ஜெபிப்பதன் மூலம்) 14,00,000 ஆத்மாக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளார்.

கைம்மாறாக இந்த புனித ஆன்மாக்கள், பெரிய அசாதாரணமான உதவிகளை இவருக்குப் பெற்றுத் தந்தனர். அவரது மரண நேரத்தில் இந்த ஆன்மாக்கள் உடனிருந்து இளைப்பாறுதல் அளித்து மோட்சத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந் நிகழ்ச்சி தெளிவான சத்திய மாக இருந்ததாலேயே, திருச்சபை இதனை அவரது முத்திப்பெறு நிகழ்வுகளில் குறிப்பிட்டுள்ளது. பண்டிதரான கர்தினால் பெரோணியாஸ் அவர்களும் இதைப் போன்ற ஒரு நிகழ்வினைத் தெரிவித்துள்ளார். மரணப்படுக்கையில் இருந்த ஒரு நல்ல மனிதருக்கு உதவி செய்ய சென்றபோது, திடீரென்று புனித ஆன்மாக்கள் கூட்டமாக அவ்வறையில் தோன்றி, அம்மனிதரின் ஆன்மாவை சேதப்படுத்த கடைசி முயற்சியாக பெரிதும் போராடிய அலகைகளை விரட்டியடித்து விட்டு, அவருக்கு ஆறுதல் அளித்தனர்.

கர்தினால் இந்த புனித ஆன்மாக்கள் யார் என விசாரித்தபோது, தனது நற்கிரியைகளாலும், செபங்களாலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து இவரால் விடுவிக்கப்பட்ட 8000 ஆன்மாக்கள் என்றும், ஒரு நிமிடம் கூட இவர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்காத வண்ணம் உடன் பரலோகத்திற்கு அழைத்து வரக் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் எனவும் கூறினார்.

புனித ஜெர்த்துருத்தம்மாள், தனது மரணத் தறுவாயில் பிசாசின் சோதனைகளால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டார். கெட்ட ஆவி, கொடிய வஞ்சகமான சோதனைகளை தமது கடைசி நேரத்திற்காகவே திட்டமிட்டு வைத்திருக்கும். இப்புனிதையை தன்னுடைய எந்த வஞ்சகத்திட்டத்தாலும் வீழ்த்த முடியாததால் அவருடைய அழகான ஆன்ம சமாதானத்தைக் குறைக்க எண்ணி, புனிதை தாம் செய்த அனைத்து நற்செயல்களின் பலன்களையும் பல வருடங்களுக்கு முன்பாகவே உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு ஒப்பக் கொடுத்து விட்டதால், இவர் நீண்டகாலம் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் வேதனையுற வேண்டியிருக்கும் எனக் கூறியதாம்.

நமது பரிசுத்த தேவனோ, ஆறுதல் அளிக்க புனிதையால் மீட்பு பெற்ற ஆயிரக்கணக்கான ஆன்மாக்களையும் தமது வான தூதர்களை யும் அனுப்பிய தோடு திருப்தியடையாமல், தானே நேரிடையாக வந்து அலகையை விரட்டியடித்து புனிதையை தேற்றினார்.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு புனிதை செய்த உதவிகளுக்கு கைம்மாறாக மோட்சத்திற்கு நேரிடையாக அழைத்துச் சென்று, அவருடைய கிரியைகளுக்கு நூறு மடங்கான பலன் களையும் அளிப்பதாக வாக்குத்தந்தார்.

தோமினிக்கன் சபையைச் சார்ந்த முத்திபேறு பெற்ற ஹென்றி சூசோவும், சக குரு ஒருவரும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டனர். அதன்படி யார் முதலில் இறந்து விடுவாரோ, அவருடைய ஆத்துமத்துக்காக மற்றவர் வாரம் இருமுறை பலிபூசை ஒப்புக்கொடுத்து செபிக்க வேண்டும் என்பதே அந்த உடன்படிக்கை .

சக குரு முதலில் இறந்துவிடவே முத். ஹென்றி அவருடைய ஆன்ம மீட்பிற்காக உறுதியளித்தபடியே பலிப்பூசைகள் ஒப்புக் கொடுத்தார். நெடுங்காலமாக திருப்பலிகள் ஒப்புக்கொடுத்தபின் தனது நண்பர் மோட்சம் சென்றிருப்பார் என உறுதி கொண்டு திருப்பலிகள் ஒப்புக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

ஆனால் இறந்த நண்பரின் ஆன்மா மிகுந்த வேதனையுடன் தோன்றி, 'திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதை நிறுத்தியதேன்?' எனக் கேட்க அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்து, 'நீர் பரலோக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பீர் என எண்ணியே திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதை நிறுத்தினேன். ஆனால் உம்மை அனைத்து ஜெபங்களிலும் நினைவுகூர்ந்தேனே?' எனக் கூறினார்.

அதற்கு மறுமொழியாக அந்த துக்க ஆன்மா, 'என் பிரியமுள்ள சகோதரரே, ஜெபமும், தவமும் நான் படுகிற அவதிக்குப் போதாதே, என்னைச் சுட்டெரிக்கும் நெருப்பை அவிக்கச் சேசு கிறிஸ்து நாதருடைய திவ்விய இரத்தம்தான் வேண்டும், நான் அனுபவிக்கிற அகோர வேதனையிலிருந்து திவ்விய பூசை மாத்திரமே இரட்சிக்க வல்லதாயிருக்கிறது எனக் கதறியது.

முத். ஹென்றி இதன் பின்னர் இருமடங்கு உத்வேகத்துடன் செபங்களையும், பலிப் பூசைகளையும் தன் நண்பர் பரலோகம் சென்றடைந்தார் என முழுமையாக உணரும் வரை ஒப்புக்கொடுத்தார்.

இதற்குக் கைமாறாக தனது நண்பரிடமிருந்து, தாம் நினைத்ததற்கும் பல மடங்கு அதிகமாக அனைத்து வகையான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.