சேசுநாதர் ஒரு விடுதலை வீரரோ, புரட்சியாளரோ அல்ல! அவர் தேவனும் மனிதனுமானவர்!

"சேசுக்கிறீஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

மூன்று வருடங்களாக, இரவும் பகலும் அவர் பக்கத்தில் இருந்தவர்கள், அவர் போதித்த போதனையைக் கவனித்துக் கேட்டவர்கள், அவர் செய்த அற்புதப் புதுமைகளைக் கண்ணால் கண்டு அச்சமும், அதிசயமும் கொண்டவர்கள், அவருடன் இணைபிரியாது வாழ்ந்து, உண்டு, உறங்கி, ஊர் ஊராய்ச் சுற்றி வந்தவர்கள், படித்தோரும், பாமரரும் அவரைப் பற்றிக் கூறியவைகளை மனதில் வைத்து ஆழ்ந்து சிந்தித்தவர்கள், அவரால் சீடர்கள் எனவும், அப்போஸ் தலர்கள் எனவும் அன்புடன் அழைக்கப்பட்டவர்கள். அவருடைய கட்டளைக்கிணங்கி, அவருடைய திருப் பெயரால் அற்புதங்களைச் செய்யும் அபூர்வ வரமும் பெற்றவர்கள். இந்த அப்போஸ்தலர்களைப் பார்த்துத்தான் சேசுநாதர் கேட்கிறார், ""என்னைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?'' என்று!

இக்கேள்விக்கு என்ன பதில் கூறுவது? இரண்டில் ஒன்றுதானே? ஒன்றில் அந்த அப்போஸ்தலர்களுடைய தலைவரான இராயப்பர் அச்சமயத்தில் கூறியதுபோல, ""சுயஞ்சீவியரான சர்வேசுரனுடைய குமாரனாகிய கிறீஸ்து நாதர் நீர்தாம்'' (மத்.16:16) என்று அவருடைய தேவ சுபாவத்தை ஏற்றுக்கொள்வது; அல்லது உலகில் தோன்றிய கொடியவர்களில் மிகவும் கொடியவர் என்று அவரைப் புறக்கணிப்பது. ""ஏன் ஐயா, இப்படிச் சொல்கிறீர்கள்? மனுக்குலத்தின் மாணிக்கமாகிய அந்த சேசு என்பவர் மிகவும் உத்தமர், சாந்த குணமுள்ளவர். அவரைக் கடவுளின் திருக்குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர் ஒரு புனிதர் என்று சொன்னால் என்ன குறைந்து விடப் போகிறது?'' இவ்விதம் பேசுவது, தங்களைத் தாங்களே அறிவாளிகள், பகுத்தறிவுவாதிகள் என அழைத்துக் கொள்ளும் சிலரது கூற்று.

உலகம் கண்டிராத உத்தமர், தமக்கு நிகர் இல்லாத சாது. கோர உபாதனை செய்து, தம்மைச் சிலுவையில் அறைந்த கொடியவர்களுக்கும் பரிந்துபேசும் பெரும் குணக்குன்று. அவர் நினைத்த நினைவிலும், பேசிய பேச்சிலும், செய்த செய்கையிலும் அணுவும் பிசகாத அற்புதக் கோமகன். இத்தகைய மனுமகன் தம்மைத் தேவன் என்று கூறலாமோ? ஆனால் இந்த சேசுநாதர் தம்மை மனிதனும் தேவனுமாக அல்லவா மதித்து நடந்தார்? மனுவுரு எடுத்த கடவுளாய்த் தாம் இருப்பதாக அல்லவா மற்றவர்களிடம் கூறினார்? ஒரு மனிதன் செய்ய முடியாதவையும், கடவுளால் மாத்திரமே செய்ய முடிந்தவையுமான செய்கைகளை அல்லவா அவர் செய்து காண்பித்தார்? ஆகையால்தான்: ஒன்றில் அவர் மனித அவதாரம் எடுத்த கடவுளாய் இருக்க வேண்டும், இல்லையேல் மக்கள் அனைவரையும் ஏய்த்து விட்ட, மாயம் நிறைந்த கொடியவராய் இருக்க வேண்டும் என்று கூற வேண்டியிருக்கிறது.


சரித்திரம் சொல்வது

யூதர்கள் என்ற ஒரு ஜாதியினர். பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்து வந்தவர்கள். சேசுநாதர் அவர்கள் மத்தியில் வாழ்ந்த சில வருடங்களுக்குப் பின்னர் ரோமாபுரியின் பெரும் படைகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு, மடிந்தவர்கள் போக எஞ்சியவர்கள் உலகின் பல்வேறு பாகங்களில் பரதேசிகளாய்க் காலங்கடத்தி வந்தவர்கள். சேசுநாதர் காலத்தைச் சேர்ந்த யூத சரித்திர ஆசிரியரான பிளாவியுஸ் ஜோசபுஸ் என்பவர் சொல்வதைக் கேளுங்கள்: ""அக்காலத்து யூதர்களின் துர்க்குணமும் துஷ்டத்தனமும் கட்டுக்கடங்காதவையாக இருந்ததால், உரோமையர்கள் அவர்களை அழித்திராவிட்டால், கடவுளே மற்றொரு பெருவெள்ளத்தால் அவர்களை அழித்திருப்பார்.''

இத்தகைய யூதர்கள் மத்தியில்தான் சேசுநாதர் தோன்றி, ""நானும் பிதாவும் ஒன்றுதான்'' எனக் கூறுகிறார் (அரு.10:3). யூதர்களின் பெரிய குருவாயிருந்த கைப்பாஸ் என்பவன் யூத மத சட்டசபையாகிய செனதிரீன் சங்கத்தில் அவரை நிறுத்தி, ""ஜீவிய தேவ குமாரனாகிய கிறீஸ்து நீதானோ?'' என்று வினவுகிறான். அவர் ஆம் எனப் பதில் உரைக்கிறார். உடனே அப்பெரிய குரு, ""இனி நமக்குச் சாட்சிகள் வேண்டுவதென்ன? நீங்களே இத்தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்குத் தோன்றுகிறது என்ன?'' என இரைந்து ஆர்ப்பரிக்கிறான். அவர்கள் ""இவன் சாவுக்குப் பாத்திரவான்'' என்று முடிவுகட்டுகிறார்கள் (மாற்கு.14:61).

"தேவகுமாரன் என்றால் குற்றமா? ஒவ்வொரு மனிதனும் ஒரு விதத்தில் கடவுளின் புத்திரன்தானே? சேசுநாதர் இவ்விதம் கூறியதால் அவர் கடவுளின் அவதாரம் ஆகி விடுவாரா?' என்றெல்லாம் உங்களுக்கு யோசனை ஓடுகிறதா? அன்பரே, கேளுங்கள். மற்ற மனிதரைப் போலும் சேசுநாதர் தம்மைத் தேவகுமாரன் என்று கூறி யிருந்தால், அக்கூற்று, ""தேவதூஷணம்'' ஆகாது. ""சாவுக்குப் பாத்திரமாயும்'' இருந்திருக்க மாட்டார். ஆனால் அவர் தம்மைக் கடவுளுக்குச் சமமாய் வைத்துப் பேசியதால்தான் செனதிரீன் என்னும் யூத தலைமைச் சங்கம் அவரை மரணத்திற்கு உள்ளாக்கியது.


தேவ சுபாவமும் மனித சுபாவமும்

சேசுநாதர் ஒரு மாயத் தோற்றம் அல்ல. அவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர். ஜெத்சமெனி என்னும் பூங்காவனத்தில், "என் ஆத்துமம் மரணமட்டுக்கும் துக்கமாய் இருக்கிறது'' என்று அவர் தம் சீடர்களிடம் கூறுகிறார். ஒரு சமாரியப் பெண்ணிடம் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறார். அவர் நம்மைப் போலவே பசியுற்றார், களைப்புற்றார், தவிப்புற்றார், ஆன்ம சரீர வேதனையை உணர்ந்தார். அவரைப் பின்பற்றியவர்கள் அவருடன் உறவு கொண்டாடுகிறார்கள்; அவருடைய கீர்த்திப் பிரதாபத் தைக் கண்டு பெருமை கொள்கிறார்கள்; அவரைச் சூழ்ந்து நின்ற சிறியோரும் பெரியோரும் அவருடைய ஆடை களையும், சரீரத்தையும் நெருங்கித் தொடுகிறார்கள்; அவரைச் சகித்துக்கொள்ளாத விரோதிகள் அவரை ஒரு சாதாரண மனிதன் என்பதாகவே பாவித்துத் தர்க்கிக் கிறார்கள், காய்மகாரம் கொள்கிறார்கள், வெறுக்கிறார்கள், பகைக்கிறார்கள், கடைசியாய் அவரை உபாதித்துச் சிலுவையில் அறைந்து கொல்கிறார்கள். ஆதலால் உண்மை யாகவே அவர் ஒரு மனிதன்.

இந்த மனிதன் மற்ற மனிதர்கள் செய்ய முடியாத மகத்துவச் செயல்களைச் செய்கிறார். ""லாசரே, எழுந்திரு'' என்று கட்டளை கொடுக்கிறார். உடனே நான்கு நாட்களுக்கு முன்பே கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டு, அழுகிப் போன பிணம் ஒன்று மீண்டும் உயிர்பெற்று எழுந்து, அதன்பின் மற்றவர்கள் மத்தியில் பல வருடங் களாக ஜீவிக்கிறது! சர்வேசுரன் மாத்திரமே கொடுக்கக் கூடிய பாவ மன்னிப்பைத் தாம் கொடுப்பதாக அவர் கூறுகிறார்; தாம் கூறியது உண்மைதான் என்பதை நிரூபிப் பதற்காக அவர் ஓர் அற்புதத்தையும் செய்து காண்பிக்கிறார். தம் சொந்த வல்லபத்தால் புயற்காற்றையும், கொந்தளிக்கும் கடலையும் அமர்த்துகிறார். ""மரித்த மூன்றாம் நாள் உயிர்த் தெழுவேன்'' என உறுதியாக உரைக்கிறார். அவ்விதமே உயிர்த்துத் தம் சீடர்கள் முன்பு தோன்றுகிறார்.

ஒரு முறை "பிதா என்னிலும் மேலானவர்'' (அரு.14:28) என்று கூறுகிறார். வேறு ஒரு முறை, ""பிதாவும் நானும் ஒன்றே,'' "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக் கிறோம்'' (அரு.10:30,38), "என்னைக் காண்கிறவன் பிதாவைக் காண்கிறான்'' (அரு.14:9) என்று இவ்வாறு திருவுளம்பற்றுகிறார். ஆகவே, சேசுநாதரிடத்தில் தேவ சுபாவம், மனித சுபாவம் என்ற இரண்டு சுபாவங்களும் இருக்கின்றன என்பது தெளிவாகிறது அல்லவா? எவ்வாறு இரண்டு சுபாவங்கள் ஒரே ஆளிடத்தில் இருக்க முடியும் என்று நாம் கண்டுணர முடியாதுதான். எனினும் நமது அற்பப் புத்திக்கு எட்டாத எத்தனையோ காரியங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நீ உண்ணும் உணவு உயிருள்ள உன் இரத்தமாக மாறுகிறது. மாறுகிற அற்புதம் உனக்குத் தெரியும். அதற்கு மேல் உன்னால் அறிய முடியாவிடினும், அந்த அற்புத உண்மையை நீ நிராகரிப்பதில்லையே. அவ்வண்ணமே இரண்டு சுபாவங்களைக் கொண்ட ஒரு தேவ ஆள் உலகில் வாழ்ந்தார் என்ற உண்மையை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

""அவர் தேவ ரூபமாயிருக்கையில்... தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி, மனுரூபமாகக் காணப்பட்டார்'' (பிலிப்.2:6). ""அவரிடத்தில் தெய்வீகத்தன்மை முழுவதும் மெய்யாகவே குடிகொண்டிருக்கிறது'' (கொலோ.2:9). இவரே ""நமது தேவனும் இரட்சகருமான சேசுக்கிறீஸ்து'' (2 இரா.1:1).