ஆகஸ்ட் 26

அர்ச். ஜெனேசியுஸ் - வேதசாட்சி (கி.பி. 303) 

தியக்கிளேசியன் இராயன் பெர்சியா தேசத்தின் மீது படையெடுத்து அதை ஜெயித்து திரண்ட பொருளைக் கொள்ளையடித்து உரோமைக்குத் திரும்புகையில், இராயன் பேரால் உரோமையில் பெருங் கொண்டாட்டமும், தேர் திருநாளும், விருந்து, நாடகமும் தயார் செய்யப்பட்டன. 

இராயனும் இராஜ பரிவாரமும் விருந்துண்டபின் அலங்காரமாய் ஜோடிக்கப்பட்டிருந்த நாடக மேடைக்குச் சென்றார்கள். ஏராளமான மக்களும் அவ்விடத்திற்குப் போய் கூடினார்கள். 

கிறீஸ்தவர்கள் பெறுகின்ற ஞானஸ்நானத்தின் அபிஷேகமே அன்று நடத்தப்பட்ட நாடகத்தின் கருத்து. ஜெனேசியுஸ் என்பவன் நடிகர்களில் ஒருவன். 

இவன் வாசாப்பு மேடையில் ஒரு மஞ்சத்தில் படுத்துக்கொண்டு தன்னைச் சூழ நின்ற நடிகர்களான சிநேகிதரைப் பார்த்து, என்னிருதயத்தில் வெகு கலக்கமும் குழப்பமும் உண்டாயிருக்கிறது. சுரங்கத்தில் ஒளிந்திருக்கும் கிறீஸ்தவ குருவை அழைத்து வந்தால் அவர் எனக்கு சமாதானம் தருவார் என்றான். 

சற்று நேரத்திற்குள் குரு வேஷம் அணிந்த ஒரு நடிகன் வியாதிக்காரனைக் கண்டு, மகனே உனக்கு என்ன வேண்டுமென்று வினவ, எனக்கு ஞானஸ்நானம் வேண்டுமென்றான் வியாதிக்காரன். உடனே குரு வேஷக்காரன் அவன் தலையில் தண்ணீர் வார்த்து ஞானஸ்நானம் கொடுத்தான். 

அக்கணமே ஜெனேசியுஸ் எழுந்து: ஆ, இது என்ன அதிசயம்! என் தலையில் தண்ணீர் வார்த்தவுடனே அநேக சம்மனசுகளைக் கண்டேன்; கிறீஸ்தவ வேதமே சத்திய வேதம். ஆகையால், இதுவரையில் நான் கிறீஸ்தவ வேதத்தைக் கேலியும் பரிகாசமும் செய்தேன். இப்போதோ அதற்காகத் துக்கப்படுகிறேன் என்று உண்மையாகப் பேசுவதை இராயன் கேட்டு அதிசயித்து, அவரை அங்கேயே உபாதித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான். 

அப்படியே ஜெனேசியுஸ் நாடக மேடையில் வேதசாட்சியாகத் தலை வெட்டப்பட்டு வேதசாட்சியானார். ஆ! இவர் பாக்கியமே பாக்கியம்!

யோசனை

நமது வேத காரியங்களைக் கேலி, பரிகாசம் செய்யலாகாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஜெபிரினுஸ், பா.வே.
அர்ச். ஜெலாசினுஸ், வே. 
அர்ச். ஜெனேசியுஸ், வே.