மே 23

அர்ச். ஜூலியா அம்மாள். கன்னிகை, வேதசாட்சி (5-ம் யுகம்)

ஜென்செரிக் என்னும் கொடுங்கோலன் கார்த்தேஜ் நகரைப் பிடித்து பிரஜைகளை அடிமைகளாக்கி, அவர்களைத் தன் தேசத்திற்கு கொண்டுபோன காலத்தில், உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஜூலியா என்னும் கன்னிகையை ஒரு அஞ்ஞான வியாபாரி அடிமையாக விலைக்கு வாங்கினான்.

இப்புண்ணியவதி யின் நற்குணங்களைக் கண்ட வியாபாரி அவள் மட்டில் அன்புகூர்ந்து அவளுக்கு யாதொரு வேலையும் கொடாமல் அவளை அன்புடன் நடத்தி வந்தான்.

ஜூலியா தனக்குண்டான நிர்பாக்கியத்தால் மனவருத்தப்படாமல் சந்தோஷத்துடன் அதைக் கையேற்றுக்கொண்டு ஜெபத் தியானத்திலும் ஞானப் புத்தகங்களை வாசிப்பதிலும் அதிக நேரம் செலவழித்து, நாள்தோறும் ஒருசந்தி உபவாசம் பிடித்து, சகல புண்ணியங்களிலும் சிறந்து விளங்கினாள்.

இவளுடைய தவ முயற்சியைக் கண்ட எஜமான் அவள்மட்டில் இரக்கம் கொண்டு அப்பேர்ப்பட்ட தவக்காரியங்களைக் குறைக்கும்படி அவளை மன்றாடியும், ஜூலியா அதற்கு சம்மதிக்கவில்லை.

வர்த்தகத்தினிமித்தம் இந்த வியாபாரி காலியா தேசத்திற்கு பிரயாணமாய்ப் போனபோது, புண்ணியவதியான ஜூலியாவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனான்.

அந்நாட்டில் நடந்த அஞ்ஞான திருவிழாவைப் பார்க்கும்படி வியாபாரி சென்றபோது ஜூலியா ஜனக் கூட்டத்தைவிட்டு வெகு துாரத்தில் நின்றுகொண்டிருப்பதைக் கண்ட அவ்வூர் அதிபதி அவளைக் கிறீஸ்தவளென்று அறிந்து, அவளை அருகில் வரவழைத்து கிறீஸ்தவ வேதத்தை மறுதலிக்கும்படி நயபயத்தைக் காட்டியும், அவள் அதற்குச் சம்மதியாததினால் அவளை கன்னத்தில் அறைந்து, அவளுடைய தலைமுடியைப் பிய்த்து ஒரு சிலுவை மரத்தில் தூக்கிக் கொன்றான்.

யோசனை 

சுகமான செல்வத்தால் கர்வம் கொள்ளாமலும், துன்பதுரிதத்தால் துக்கமடையாமலும் எப்போதும் சர்வேசுரனுக்கு சந்தோஷத்துடன் ஊழியம் புரிவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். தெசிதேரியுஸ், மே.வே.