இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நவம்பர் 23

அர்ச். க்ளமென்ட் பாப்பரசர், வேதசாட்சி* (கி.பி. 100)

சாந்தப்பர் என்று அழைக்கப்படும் க்ளமென்ட் என்பவர் உரோமையர். இவர் பிரதான அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர் சின்னப்பருடைய பிரசங்கங்களைக் கேட்டு, ஞானஸ்நானம் பெற்று, தூரதேசங்களில் வேதம் போதிக்கச் சென்ற அர்ச். சின்னப்பருக்கு துணையாகச் சென்றார்.

அதன்பின் க்ளமென்ட் உரோமைக்குத் திரும்பி வந்து அர்ச்.இராயப்பருக்கு சீஷனாகி, அவரால் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு, அந்நகர மக்களைக் கவனித்து வந்தார். கி.பி.91-ல் க்ளமென்ட் பாப்பரசராக அர்ச். இராயப்பர் சிம்மாசனத்தில் ஏறி திருச்சபையைத் திறமையுடன் நடத்தினார்.

கொரிந்தியருக்குள் ஒற்றுமையின்றி குழப்பமுண்டானதைக் க்ளமென்ட் கேள்விப்பட்டு, ஒரு அதிசயத்திற்குரிய நிரூபம் அனுப்பி, கலகத்தை தீர்த்து ஒற்றுமையை உண்டாக்கினார். இவருடைய புண்ணியங்களையும் அற்புதங்களையும் கண்ட பிறமதத்தினர் அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இதை இராயன் கேள்விப்பட்டு, க்ளமென்டை 2000 கீறிஸ்தவர்களுடன் நாடுகடத்தி, சுரங்கங்களில் கடின வேலை செய்யும்படி கட்டளையிட்டான். சுரங்கங்களில் வேலை செய்யும் கிறீஸ்தவர்கள் ஒருநாள் தாகத்தால் வருந்துகையில். க்ளமென்டின் வேண்டுதலால் சுனையில் தண்ணீர் சுரந்து, தாகத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

அவ்விடத்திலும் இவருடைய பிரசங்கத்தால் அநேகர் மனந்திரும்பினதினால், அவருடைய கழுத்தில் பாரமான கல்லைக் கட்டி கடலில் அமிழ்த்தும்படி இராயன் கட்டளையிட்டான்.

அவருக்காக கடலோரத்தில் கிறீஸ்தவர்கள் துக்கத்துடன் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருக்கையில், கடல் நீரானது இரண்டு மைல் தூரம் உள்வாங்கியது. அப்போது வேதசாட்சியின் சரீரம் ஒரு பீடத்தின்மேல் இருப்பதை கிறீஸ்தவர்கள் கண்டு, அதை பக்தியுடன் தங்களோடு எடுத்துச் சென்றார்கள். இந்த புதுமையைக் கண்ட அநேக ஜனங்கள் கிறீஸ்தவர்களானார்கள்.

யோசனை 

நாமும் பிடிவாத குணத்தை விட்டுவிட்டு, நமது ஞானப் போதகர்களுடைய நற்புத்திகளுக்கு செவிசாய்ப்போமாக.