ஆகஸ்ட் 19

அர்ச். லூயிஸ் - மேற்றிராணியார் (கி.பி. 1297) 

இரண்டாம் சார்லஸ் என்னும் இராஜாவிடத்தினின்று லூயிஸ் பிறந்தார். சிறு வயதில் இவருடைய புண்ணிய நடத்தையால் அர்ச்சியசிஷ்டவராகக் காணப்பட்டார். 

இவர் இராஜ குமாரனாயிருந்தும் உலக மகிமையையும் செல்வ பாக்கியத்தையும் வெறுத்து, தர்ம வழியில் நடந்தார். இரு சந்நியாசிமாரைத் தம்மோடு இருக்கச் செய்து அவர்களுடன் ஜெபதபங்களை நடத்துவார். 

வெறுங் காலால் நடந்து தேவாலயங்களைச் சந்திப்பார். இரத்தம் வரத் தம்மை அடித்துக்கொண்டு வெறுந் தரையில் படுத்து இளைப்பாறுவார். இரவு வேளையில் வெகு நேரம் ஜெபத்தியானம் புரிவார். 

கற்பென்னும் புண்ணியத்தின் மீது இவருக்குள்ள பற்றினால் தமது ஐம்புலன்களை அடக்கி, ஒறுத்தல் என்னும் புண்ணியத்தை வெகு கவனமாக அனுசரிப்பார். இவருக்கு 23 வயது நடக்கையில் திருமணத்தை வெறுத்து, குருப்பட்டம் பெற்று, ஐந்து காய பிரான்சிஸ்கு சபையில் சேர்ந்து புண்ணிய வழியில் நடந்தார். 

பரிசுத்தப் பாப்பரசரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து துலுாஸ் என்னும் நகருக்கு மேற்றிராணியாரானார். இந்த மேலான பதவியிலிருந்து பரிசுத்த தரித்திரத்தை அனுசரித்து முன்னிலும் அதிக புண்ணியங்களைச் செய்து தவக்காரியங்களை இரு மடங்காக்கி அர்ச்சியசிஷ்டவராய் நடந்து வந்தார். 

அவருடைய சிறந்தப் பிரசங்கத்தால் அநேக பாவிகள் மனந்திரும்பினார்கள். இவர் ஏழை எளியவர்கள் மீது அதிக அன்பு காட்டி உதவிகள் புரிவார். இவருடைய பிரசங்கத்தால் மனந்திரும்பினதைவிட இவருடைய சாந்தகுணம், பக்தி, மேரை மரியாதை முதலிய நற்குணங்களால் அநேகர் மனந்திரும்பினார்கள். 

இவர் செய்த கடின பிரயாணங்களாலும் தபக் காரியங்களாலும் வியாதியுற்று, அவர் வெறுத்துத் தள்ளிய உலகமுடிக்குப் பதிலாக மோட்ச முடியைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை

நாமும் நமது நற்குணத்தாலும் நன்மாதிரிகையாலும் பிறரை மனந் திருப்புவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். திமோத்தியும், துணை. வே. 
அர்ச். மாக்தேயுஸ், மே. 
அர்ச். குமின், மே.