ஆகஸ்ட் 18

அர்ச். ஹெலனம்மாள் - இராணி (கி.பி. 328) 

இங்கிலாந்தில் பிறந்த ஹெலனம்மாள் அஞ்ஞானியாயிருந்தாலும் நற்குணமுள்ளவளாய் வாழ்ந்து அஞ்ஞானியாயிருந்த ஒரு படைத்தலைவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். 

இவர்களுக்குப் பிறந்த கான்ஸ்டான்டையின் என்பவர், தியக்கிளேசியன் இராயன் கிறீஸ்தவர்களை வேத கலாபனையில் வதைத்துக் கொல்லும் காலத்தில், படைத்தலைவனாகி தன் வீரத்தால் கீழ்த்திசைக்கு இராயரானார். 

தேச சட்டத்தால் இயற்றப்பட்ட வேத விரோத சட்டங்களை ரத்து செய்து கிறீஸ்தவர்களைப் பாதுகாத்து வந்தார். ஹெலனம்மாள் கிறீஸ்தவ வேதத்தின் உண்மையை அறிந்து ஞானஸ்நானம் பெற்று சத்திய வேத கடமைகளை வெகு நுணுக்கமாய் அனுசரித்து, பூசை பிரார்த்தனை வேளையில் ஜனங்களுடன் கலந்து தேவாராதனை செலுத்துவாள். 

ஒருநாள் கான்ஸ்டான்டையின் இராயன் சத்துருக்களோடு போர் புரிந்தபோது, தனக்கு ஜெயம் உண்டாகும்படி தன் தாயார் வணங்கும் சத்திய கடவுளைப் பார்த்து மன்றாடவே, மேகத்தில் ஒரு அற்புதமான சிலுவை தோன்றி, அதில் "இந்த அடையாளத்தால் வெற்றிகொள்வாய்" என்று வரையப்பட்டிருந்தது. 

ஹெலன் அம்மாள் ஜெருசலேமுக்குப் போய், அங்கு கர்த்தர் பாடுபட்ட சிலுவையைத் தேடிப் பார்த்து அதைக் கண்டெடுத்தப்பின், கபாலமலையில் அச்சிலுவைக்குத் தோத்திரமாக ஒரு பிரமாண்டமான தேவாலயத்தைக் கட்டுவித்து, அதில் திருச்சிலுவையை ஸ்தாபித்தாள். 

திருச்சிலுவையின் ஒரு பாகத்தையும் திரு ஆணிகளையும் இராயனான தன் குமாரனுக்கு அனுப்பினாள். ஒலிவேத்து மலையிலும் வேறு அநேக இடங்களிலும் சர்வேசுரன் பெயரால் கோவில்களைக் கட்டி எழுப்பினாள். உரோமைக்குச் சென்று அங்கு தன் குமாரனுக்கு நற்புத்திகளைக் கூறி, அர்ச்சியசிஷ்டவளாய் மரித்தாள்.

யோசனை 

நாமும் எப்போதும் திருச்சிலுவை மட்டிலும் அதில் அறையுண்டு மரித்த கர்த்தருடைய பாடுகளின் மட்டிலும் மெய்யான பக்தி வைப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஆகாபேத்துஸ், வே. 
அர்ச். க்ளேர், க.