திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1800-1900

1800–1823: திருத்தந்தை ஏழாம் பயஸின் ஆட்சிக்காலம்.

சூலை 16, 1802: கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடமும் பிரான்சிய அரசும் 1801இல் உடன்படிக்கை செய்துகொண்டன. பிரான்சில் ஒடுக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபை மீண்டும் உயிர்பெற்றது.

திசம்பர் 2, 1804: திருத்தந்தை ஏழாம் பயஸ் முன்னனிலையில், பாரிசு அன்னை மரியா தலைமைக் கோவிலில் (Cathedral of Notre Dame) நெப்போலியன் பேரரசனாகத் தமக்குத் தாமே முடிசூட்டிக்கொண்டார்.

1806: வில்லியம் தொபியாஸ் ரிங்கல்டவுபே (William Tobias Ringeltaube) என்னும் மறைபரப்பாளர் இலண்டன் மிஷனரி சொசைட்டி பெயரால் திருவிதாங்கூர் பகுதியில் கிறித்தவ மறைப்பணி தொடங்கினார்.

1810: வில்லியம் கேரி, யோசுவா மார்ஷ்மேன் என்னும் கிறித்தவ மறைப்பணியாளர்கள் இராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.

1812: கோவாவில் கிறித்தவக் கோட்பாட்டு விசாரணை மன்றம் (Inquisition) முடக்கப்பட்டது.

1813: கிழக்கிந்தியக் கம்பெனிச் சட்டம் (East India Company Charter Act) இயற்றப்பட்டது. அதன்படி, கிறித்தவ மறைபரப்பாளர் இந்தியா வர இசைவு வழங்கப்பட்டது. ஆயினும் கம்பெனியின் பார்வையிலுள்ள பகுதிகளில் மறைப்பணி புரிய சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.

1818: வில்லியம் கேரி, யோசுவா மார்ஷ்மேன், வில்லியம் வார்டு என்னும் கிறித்தவ மறைப்பணியாளர்களால் செரம்பூர் கல்லூரி தொடங்கப்பட்டது.

1819: ஜாண் ஸ்கட்டர் (John Scudder, Sr.) என்பவர் "அமெரிக்கன் சிலோன் மிஷன்" என்னும் கிறித்தவ மறைபரப்பு அமைப்பில் சேர்ந்தார். இவர் புகழ்பெற்ற மருத்துவரும் ஆவார்.

1819: வெஸ்லிய மெதடிஸ்டு சபையினர் சென்னையில் மறைப்பணி தொடங்கினர்.

1820: ராஜாராம் மோகன் ராய் "இயேசுவின் கட்டளைகள்" (The Precepts of Jesus) என்னும் நூலை வெளியிட்டார். அதில் நற்செய்தி நூல்களில் இயேசு வழங்கும் அறநெறிக் கொள்கைகள் தொகுத்து அளிக்கப்பட்டன.

1828 : திருவிதாங்கூரில் தோள் சீலைப் போராட்டம் வலுத்தது. கிறித்தவர்களாக மாறிய சாணார் (நாடார்) சமூகப் பெண்கள் தங்கள் மார்பகத்தை மூட அனுமதி மறுத்த சட்டத்தை மீறினார்கள். இதனால் கலவரம் வெடித்து, அப்பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கிறித்தவ நிறுவனங்கள் தாக்கப்பட்டன.

1837: இயேசு சபை மீது விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து (1814), அச்சபையினர் மீண்டும் இந்தியாவில் மறைப்பணியாற்ற வரத் தொடங்கினர்.

1843: விவிலியம் தாய்லாந்து மொழியில் பெயர்க்கப்பட்டது.

1846: திருத்தந்தை ஒன்பதாம் பயஸின் ஆட்சி தொடங்கியது. "சுதந்திரக் கட்டு இயக்கம்" (Free Masonry) கத்தோலிக்க திருச்சபையின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அவர் கண்டனம் செய்தார்.

1847: எருசலேம் நகரின் முதுபெரும் தந்தையான இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் எருசலேமில் உறைவிடம் ஏற்படுத்தி அங்கு வாழத் தொடங்கினார்.

1850: அரசியல் எதிர்ப்புகள் எழுந்தாலும், ஐக்கிய இராச்சியத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் பிற ஏழு மறைமாவட்டங்களைக் கத்தோலிக்க திருச்சபை ஏற்படுத்தியது.

1852: ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பால்ட்டிமோர் நகரில் முதல் கத்தோலிக்க திருச்சபை மாநாட்டுப் பேரவை (First Plenary Council) நிகழ்ந்தது

1854: அன்னை மரியா கருவாகத் தம் தாயின் உதரத்தில் உருவான நேரத்திலிருந்தே எவ்விதப் பாவக் கறையிலிருந்தும் காக்கப்பட்டார் என்பதைக் கிறித்தவ நம்பிக்கையாக திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அனைத்துலகுக்கும் பிரகடனம் செய்தார்.

1856: இராபர்ட் கால்ட்வெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதினார்.

1858: அன்னை மரியா பிரான்சு நாட்டிலுள்ள லூர்து நகரில் மூன்று சிறுவர்களுக்குக் காட்சியில் தோன்றி, "நானே அமலோற்பவம்" என்று அறிவித்தார்.

1865: மெதடிஸ்டு சபைப் போதகர் வில்லியம் பூத் "இரட்சணிய சேனை" (Salvation Army) என்னும் சபையைத் தோற்றுவித்தார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குக் கிறித்தவ நற்செய்தியைக் கொணர்வதே அச்சபையின் குறிக்கோள் என்று அறிவித்தார்.

திசம்பர் 8, 1869: திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடங்கிவைத்தார்.

சூலை 18, 1870: முதலாம் வத்திக்கான் சங்கத்தின் நான்காம் அமர்வின்போது "நிலையான மேய்ப்பர்" ("Pastor Aeternus") என்னும் போதனை ஏடு வெளியிடப்பட்டது. திருத்தந்தை சமயம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த உண்மைகளை எல்லாக் கிறித்தவர்களும் அதிகாரப்பூர்வமாகப் போதிக்கும் வேளையில் தவறு நிகழாமல் செயல்பட அவருக்குக் கடவுளின் உதவி உண்டு என்னும் உண்மை அவ்வேட்டில் பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது பிராங்கோ-புருஸ்ஸியப் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. உரோமையும் போரின்போது கைப்பற்றப்பட்டது. எனவே முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் முறையாக நிறைவுபெறாமல் 1890 அக்டோபர் 20இல் ஒத்திவைக்கப்பட்டது. திருத்தந்தையின் ஆட்சியிலிருந்த "திருத்தந்தை நாடுகளும்" (Papal States) முடிவுக்கு வந்தன. ஒரு சில கத்தோலிக்கர் தம்மைப் "பழைய கத்தோலிக்கர்" (Old Catholics) என்று அழைத்துக்கொண்டு, திருத்தந்தையின் "வழுவாவரம்" (Infallibility) பற்றிய போதனையை ஏற்கவில்லை.

1870: திருத்தந்தை நாடுகளுக்கு எதிராக இத்தாலியா போர் தொடுத்தது. இத்தாலிய இராணுவம் உரோமைக்குள் நுழைந்தது. திருத்தந்தை நாடுகள் ஆட்சி முடிவுற்றது.

1871-1878: புருஸ்ஸிய நாட்டு முதலமைச்சர் பிஸ்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கைக் குறைப்பதற்காகச் சட்டம் இயற்றினார். பின்னர் அச்சட்டம் தளர்த்தப்பட்டது.

1878, பெப்ருவரி 20: திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ ஆட்சிப் பொறுப்பேற்றார்.

1879: திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ "நிலையான தந்தை" (Aeterni Patris) என்னும் சுற்றுமடல் வெளியிட்டார். அதில் புனித அக்வீனா தோமா வகுத்தளித்த இறையியல் கத்தோலிக்கக் கல்விநிறுவனங்களில் கற்பிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

1879: அயர்லாந்தில் நாக்ஸ் (Knox) என்னும் இடத்தில் அன்னை மரியா காட்சியளித்தார். "அயர்லாந்தின் அரசியான அன்னை மரியா" (Our Lady, Queen of Ireland) என்னும் பெயர் சூட்டப்பட்டது.

1884: சார்லஸ் டேசே றஸ்ஸல் (Charles Taze Russell) "மாணவர் விவிலிய இயக்கம்" என்றொரு அமைப்பை உருவாக்கினார். அதுவே பின்னர் "யெகோவாவின் சாட்சிகள்" (Jehovah's Witnesses) என்னும் அமைப்பாக மாறியது. இவர்கள் பெரும்பான்மையான பிற கிறித்தவ சபைகளின் கொள்கைகளிலிருந்து மாறுபடுகிறார்கள். மக்கள் வாழ்கின்ற உலகம், அரசியல், நாட்டுச் சட்டங்கள் போன்றவை சாத்தானின் ஆட்சியில் உள்ளனவென்றும், இரத்த தானம் செய்வது தவறு என்றும், கிறித்து பிறப்பு விழா, இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா, பிறந்த நாள் கொண்டாட்டம் போன்றவை முறையற்றவை என்பதும் இந்த இயக்கத்தின் கொள்கைகளுள் அடங்கும்.

1885-1887: இன்றைய உகாண்டா நாட்டின் தென் பகுதியில் அமைந்திருந்த புகாண்டா நாட்டு மன்னன் இரண்டாம் முவாங்கா என்பவர் சார்லஸ் லுவாங்கா என்ற கத்தோலிக்க வேதியரையும் அவரோடு வேறு பல கத்தோலிக்கர் மற்றும் ஆங்கிலிக்க சபையினரையும் கொடூரமாகக் கொன்றார். இவர்கள் "மறைச்சாட்சிகள்" என்றும் கிறித்தவ வணக்கத்துக்கு உரியவர் என்றும் திருத்தந்தை ஆறாம் பவுல் 1964இல் அறிவித்தார்.

1885: பால்ட்டிமோர் நகரில் கூடிய கத்தோலிக்க திருச்சபை மாநாட்டுப் பேரவை பரிந்துரைத்தபடி, "பால்ட்டிமோர் மறைக்கல்வி நூல்" (Baltimore Cathechism) என்னும் போதனை ஏடு வெளியிடப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாகப் பயனில் இருந்தது.

1885: காண்ஸ்டண்ட் லீவென்ஸ் (Constant Lievens) என்னும் பெல்ஜிய நாட்டு இயேசு சபை மறைப்பணியாளர் சோட்டா நாகபுரி பகுதியில் தொல்குடி மக்களிடையே கிறித்தவத்தைப் பரப்பி, அவர்களுடைய உரிமைகளை மதிக்க குரல்கொடுத்தார். இதனால் அவர் "சோட்டா நாகபுரியின் திருத்தூதர்" எனவும் அழைக்கப்படுகிறார்.

1888: ஏப்ரல் 1: உலகில் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ ஒரு சுற்றுமடல் வெளியிட்டார்.

மே 15, 1891: திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ "ரேரும் நோவாரும்" (Rerum Novarum) என்ற தலைப்பில் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். "தொழிலாளர் சாசனம்" என்று அழைக்கப்படும் இம்மடலில் தொழிலாளர்களின் உரிமைகள் வலியுறுத்தப்பட்டன. கத்தோலிக்க திருச்சபை தொழிலாளர்களுக்கு ஆதரவாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

நவம்பர் 30, 1894: "கீழைத் திருச்சபைகளின் மாண்பு" (Orientalium Dignitas) என்னும் தலைப்பில் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ சுற்றுமடல் வெளியிட்டார்.

1897: சிறுமலர் (Little Flower) என்று அழைக்கப்பட்ட லிசியோ நகர் தெரேசா (Thérèse of Lisieux) இறந்தார்.

1898: இயேசு கல்லறையில் அடக்கப்பட்டபோது அவருடைய உடலைப் பொதிந்த துணி இத்தாலியில் தூரின் நகரில் பாதுகாக்கப்படுகிறது என்னும் மரபுப் பின்னணியில் அத்துணியை முதன்முறையாக செகோந்தோ பீயா என்பவர் ஒளிப்படம் எடுத்தார்.

1899: "கிதெயோன் பன்னாட்டு இயக்கம்" (Gideons International) என்னும் அமைப்பு உருவானது. உலகெங்கும் விவிலியப் பிரதிகளை வழங்குவதும் தங்கு விடுதிகளிலும் சாலையோர விடுதிகளிலும் அறைகளில் விவிலியத்தை வைப்பதும் இவ்வியக்கத்தின் முக்கிய பணிகளுள் ஒன்றாகும்.