ஆகஸ்ட் 03

அர்ச். முடியப்பர் சரீரம் கண்டெடுக்கப்பட்டது.

முதல் வேதசாட்சியான முடியப்பருடைய சரீரம் ஜெருசலேம் நகருக்கு அப்பால் 20 மைல் தூரத்தில் அடக்கம் பண்ணப்பட்டது. இவ்விடம் அக்காலத்து கிறீஸ்தவர்களுக்குத் தெரியாமலிருந்தது. 

415-ம் வருடத்தில் லூசியன் என்னும் குருவானவருக்கு அர்ச். கமாலியேல் என்பவர் நித்திரையில் தோன்றி முடியப்பருடையவும் இன்னும் சில புண்ணியவாளர்களுடையவும் சரீரங்கள் அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் இடத்தைக் காட்டி, அத்திருச் சரீரங்களை குழியினின்று வெட்டி எடுக்கும்படிச் சொன்னார். 

இச்சங்கதியை லூசியன் குருவானவர் ஜெருசலேம் நகரின் மேற்றிராணியாருக்கு அறிவிக்கவே, அவர் உத்தரவின்படி அர்ச். கமாலியேல் காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, பூமி அதிர்ந்து குழியிலிருந்த பிரேதம் பூமிக்குமேல் உயர்த்தப்பட்டதைக் குருவானவரும் அங்கு கூடியிருந்த திரளான ஜனங்களும் கண்டு சந்தோஷப் பூரிப்புடன் சர்வேசுரனை தோத்தரித்து முடியப்பரை வணங்கினார்கள். 

மேலும் அந்தச் சரீரத்தினின்று ஒருவித பரிமள வாசனை வீசியது. அங்கு கூடியிருந்த அநேக வியாதியஸ்தர் அற்புதமாக சௌக்கியமடைந்தார்கள். 

இந்தச் சம்பவத்தின் ஞாபகமாக இன்றையத்தினத்தில் முடியப்பருடைய இரண்டாம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

யோசனை

நாமும் அர்ச்சியசிஷ்டவர்களுடைய பண்டங்களைப் பக்தியாய் வணங்கி, அந்தந்த அர்ச்சியசிஷ்டவர்களை விசுவாசத்துடன் மன்றாடுவோமாகில் தேவ உதவியை அடையலாம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். நிகோதேமுஸ், து. 
அர்ச். கமாலியேல், து. 
அர்ச். வால்தென், ம.