அக்டோபர் 01

அர்ச். ரெமீஜியுஸ் அதிமே. (கி.பி. 533) 

பிரான்ஸ் தேசத்தாரான ரெமீஜியுஸ் சிறந்த கோத்திரத்தினின்று உதித்து, புண்ணிய வழியில் ஒழுங்காக நடந்து வந்தார். இவருடைய குணங்களின் நிமித்தம் சகலரும் இவரை அன்புடன் நேசித்தார்கள். 

இவர் கல்வியிலும் அர்ச்சியசிஷ்டதனத்திலும் எவ்வளவு சிறந்து விளங்கினாரென்றால் இவருக்கு 22 வயது நடக்கும்போது இவரை ரேய்ம்ஸ் நகரின் அதிமேற்றிராணியாராக நியமிக்க சகலரும் கோரினார்கள். 

இவர் தலைமேல் காணப்பட்ட அதிசய பிரகாசத்தைப் பார்த்த மேற்றிராணிமாரும் ஜனங்களின் கோரிக்கைக்கு இணங்கி, வயது குறைவினால் உண்டான தடைகளை விசேஷ உத்தரவினால் நிவர்த்தி செய்து, ரெமீஜியுஸை மேற்றிராணியாராக அபிஷேகம் செய்தார்கள். 

ரெமீஜியுஸ் திருச்சபையின் நன்மைக்காக கவனமாக உழைத்து வந்தார். அத்தேசத்து அஞ்ஞான இராஜாவான க்ளோவிஸ் என்பவர் இவரது புத்தி பிரசங்கத்தால், மனந்திரும்பி அநேக பிரபுக்களோடும் கணக்கில்லாத பிரஜைகளோடும் ஞானஸ்நானம் பெற்றார். 

ஞானஸ்நானத்திற்கு வேண்டிய தைலம் குறைவானதால் இவர் கலக்கம்கொண்டு சர்வேசுரனை பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு புறா தைல சிமிழ் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தது. இவருடைய நன்மாதிரிகையைக் கண்ட அத்தேசத்தார் அனைவரும் சத்திய திருச்சபையில் உட்பட்டு நல்ல கிறீஸ்தவர்களானார்கள். 

பிரான்ஸ் தேசத்தின் தென் பகுதியிலுள்ள ஆரிய பதித மதத்தாரை ரெமீஜியுஸ் புத்திமதியாலும் தர்க்கத்தாலும் சத்திய திருச்சபைக்கு உட்படுத்தினார். இந்த அதிமேற்றிராணியாருடைய விடாமுயற்சியால் அஞ்ஞான கோவில்கள் இடிபட்டு, கிறீஸ்தவ தேவாலயங்கள் எழுப்பப்பட்டு, பதித மதம் அழிக்கப்பட்டு, வேத கற்பனையும் திருச்சபை கட்டளைகளும் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு, அக்காலத்தில் பிரான்ஸ் தேசம் விசுவாசத்தில் பிரகாசித்துத் துலங்கினது. 

ரெமீஜியுஸ் சகல புண்ணியங்களையும் அனுசரித்து தமது 90-ம் வயதில் மோட்ச பிரவேசமானார்.

யோசனை 

நாமும் அஞ்ஞானிகள் முதலிய பிற மதத்தினர் மனந்திரும்பும்படி வேண்டிக்கொள்ளக்கடவோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பாவோ , மு.
அர்ச். பியாட், வே. 
அர்ச். வாஸ்நன், து.