லிஸ்பனின் லீலி மலர்கின்றது

"நீதிமானின் தந்தை மிகுதியாக அகமகிழ்கிறார்" (பழமொழி 23:23)

அரசியல் கொந்தளிப்பு

தொட்டிலை ஆட்டும் கைதான் உலகை ஆளும். தந்தையின் வழியாகவே குழந்தை இறைவனை அறிகின்றது. பெற்றோரின் நடத்தை பிள்ளைகளின் பாடப்புத்தகம். அந்தோனியாரின் தாய் "ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே" என்ற பாட்டைப் பாடி அவரைத் தாலாட்டுவாள். இதனால் அவருக்குத் தேவதாயின் மீதுள்ள பக்தி வளர்ந்து மரணம் மட்டும் இப்பாட்டை அடிக்கடி அவர் பாடி வருவது வழக்கம்.

போர்த்துக்கல் நாட்டின் தலைநகரம் லிஸ்பன். வரலாற்றில் லிஸ்பன் மாபெரும் சிறப்புப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு வர கடல்வழி கண்டுபிடித்த வஸ்கொடகாமா இங்கிருந்து தான் தன் பயணத்தை தொடங்கினார். தூய சவேரியாரும் லிஸ்பனில் இருந்துதான் இந்தியா புறப்பட்டார். இப்பட்டணதின் பேராலயத்தின் அருகிலுள்ள மாளிகை ஒன்றில் 1195ம் ஆண்டு தேவதாயின் விண்ணேற்பு பெருவிழாவான ஆகஸ்டு 15 அன்று அந்தோனியார் பிறந்தார். அந்தோனியார் பிறந்த இடத்தில் அவர் பெயரால் கட்டப்பட்ட ஓர் ஆலயம் உள்ளது. இந்த வீட்டில் எம் முன்னோர்கள் கூறிய சாட்சிகளின்படி இவ்வுலகில் இருந்து மகிமைமிகும் பரலோக மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்தோனியார் பிறந்தார் என்று அந்த ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

14ம் நூற்றாண்டுக் குறிப்புகள்: அவரது தந்தை மார்த்தீன் என்றும் தாய் மேரி என்றும் தாயாரின் சொந்த ஊர் தெபேரா என்றும் காண்கிறது. சிலுவை யுத்தத்தில் சிறப்புற்று எருசலேமின் முதல் அரசனான கோத்பிரே பாயிலியோன் என்பவரின் மரபினர் மார்த்தீன் என்று பிற்கால எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூர் என்ற சாதியாரின் பிடியிலிருந்து போர்த்துக்கலை விடுதலை செய்ய மார்த்தீன் அரசருடன் உழைத்தார் என்பது உண்மை . இவர்களுக்குச் சொந்தமான ஒரு மாளிகை பேராலயத்தின் மேற்குப் பக்கத்தில் இருந்தது. இதற்கு சான்று அந்தோனியார் பிறந்த நாட்களில் நாட்டு அரசியலில் அமைதியில்லை.

1139இல் அல்போன்ஸே என்றிக் என்ற மன்னன் நாட்டை - பாப்பிறையின் பாதுகாப்பின் கீழ் வைத்தான். 1156ல் லிஸ்பன் தலைநகரானது. பாப்பிறை 3வது இன்னொசன்று 1179ல் அவன் ஆட்சியை அங்கீகரித்தான். அதன் பின்னர் அரசன் பல துறவியர் மடங்களைக் கட்டி பக்தியை வளரச் செய்தான். அவனுக்குப் பின் வந்த முதலாம் சாங்கோ அகங்காரம் கொண்டவன். ஆகையால் திருச்சபைக்கும் அவனுக்கும் சிலுவைப்போர் மூண்டது. தலைநகரை கோயிம்பிரா நகருக்கு மாற்றினான். பாப்பிறை 3வது இன்னொசன்று 1208 அவனை சபித்து ஆணை பிறப்பித்தார். இவ்விதம் அரசியல் கொந்தளிப்பான சூழ்நிலையில் நாடு இருக்கும் போது பிறந்ததினாலேயே ''கார்மேகங் களின் இடையில் தோன்றிய விடிவெள்ளி" என்று புகழப்படுகின்றார்.

ஞானநீராட்டுதல்

அவ தேவ அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தூய பத்திரியார்கால், பேராலயத்தில் சிறுவனுக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டு, பெர்தினாந்து என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறுவன் ஞானநீராட்டுப் பெற்ற தொட்டி இன்றும் இருக்கிறது.

புனிதருக்கு திருமுழுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் "சென்ம பாவத்தின் எல்லாக் கறைகளையும் பெர்தினாந்துவிடமிருந்து நீக்கப்பட்ட இடம் இதுவே. அவர் ஒளியால் அகிலம் அகமகிழ்வு கொள்கின்றது. அவரது உடலால் பதுவையும், ஆன்மாவால் பரமும் மகிழ்கின்றது" என்று குறிக்கப்பட்டுள்ளது.

திருயாத்திரிகர்களுக்கு இது ஒரு முக்கியமான இடம். ஞான நீராட்டுதலின் வழியாக இறைவனின் மகனானார். அவர் என்றும் தூயவராகவே வாழ்ந்தார். ஞானநீராட்டுதலைப் பற்றி அந்தோனியார் பிற்காலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

"ஒருவனுக்கு திருமுழுக்கால் இரு பொருள்கள் அறிவுறுத்தப்படுகிறது. அவை:

வெண்ணிற ஆடை, எரியும் திரி. 

இவ்வருட்சாதனம் அளித்த தூய்மையை வெண்ணிற ஆடையும், அவன் வாழவேண்டிய தூய வாழ்வை எரியும் திரியும் காட்டுகின்றது. பாவத்தால் தன் வெண் ஆடையை கறைப்படுத்தி அதனால் எரியும் திரியை அணைத்திடும் பொழுது அவன் இவற்றை இழந்து விடுகின்றான்"

பெற்றோரின் பெருமை

அந்தோனியாரின் பெற்றோர் உத்தம் கிறிஸ்தவர்கள். அன்புடனும் பண்புடனும் வாழ்ந்தனர். இறைவனுக்குப் பயந்தவர்கள். பிறர் மனதை ஒரு போதும் புண்படுத்தியதே இல்லை. எனவே குடும்பத்தில் முழு அளவில் அமைதியும், சமாதானமும் இருந்தது. மகிழ்ச்சி அங்கு இளநகை புரிந்தது. "கனியைக் கொண்டே மரத்தை அறியலாம்" இது இறைவாக்கு. இறைவனுக்கும் மனிதருக்கும் பிரியமாய் நடந்த இவர்களின் கனியாகிய அந்தோனியார் எப்படி இருப்பார்? தங்கள் குழந்தை ஞானத்திலும் அறிவிலும் வளர வேண்டுமென விரும்பி செயல்பட்டனர். மோயீசனுக்குப் பிறகு இஸ்ராயேலரை வழி நடத்த இறைவனால் தெரிந்து கொள்ளப் பட்ட யோசுவா, "நானும் என் வீட்டாரும் ஆண்டவரையே தொழுது வருவோம்" (யோசுவா. 24/25) என்றார். அதைப் போலவே இவ் வீட்டாரும் செய்து வந்தனர். எனவே அந்தோனியார் பக்தி மிக்கவராய் வளர்ந்தார். சிறுவயதிலேயே ஏழைகளுக்கு அன்பு செய்தார். பிறர் துன்பத்தைக் கண்டு மனம் இரங்குவார். ஆலயங்களுக்கும் அடிக்கடி செல்வார். நல்ல பையன், ''சிறுவனின் தூதன்'' என்று யாவராலும் புகழப்பட்டார்.

'நீதிமானின் தந்தை மிகுதியாக அகமகிழ்கின்றான்: ஞானியைப் பெற்றவன் அவனைப் பற்றி மகிழ்கிறான்; உன் தந்தையும், உன் தாயும் மகிழ்வார்களாக; உன்னைப் பெற்றவள் அக்களிப்பாளாக!'' (பழமொழி 23/24,25)

கல்வி

லிஸ்பன் மாநகரில், ஆயர் சாகர் ஆண்டகை நடத்தி வந்த பேராலயப் பள்ளிக்குப் பெர்தினாந்தைப் பெற்றோர் அனுப்பி வைத்தனர். உலகியல் கல்வியுடன் இலத்தீன் மொழியையும், மறைக்கல்வியையும் கற்றார். அவரிடம் இருந்த அளவற்ற தெய்வபயம், அவரை நற்குணச் சிறுவனாக ஒழுகச் செய்தது. தேவதாய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட அவ்வாலயத்திற்கு திருப்பயணிகள் திரள் திரளாக வந்து செல்வர். மாதாவின் கருணை, பக்தர்களுக்கு அருள்மாரி பொழிவதை அவர் கண்கூடாகக் கண்டார். அவர்களுடன் அன்னையின் புகழ் பாடுவார். ஏற்கெனவே அவரின் தாயால் ஊட்டப்பட்ட தேவதாய் மீதான பக்தி அவரில் உறுதியடைந்தது.

''நமது அன்னையின் பெயர் ஒரு மாபெரும் கோபுரம். பாவகளுக்கு அவளிடம் அபயம் உண்டு. மீடபை அளித்து பாவிகளுக்கு வலுவையும், நம்பிக்கையையும் அருளும் அவள் பெயர் எத்துணை இனியது! எம் ஆண்டவளே! கடலின் விண்மீனே! உம்மை வேண்டுகிறோம். இவ்வுலகமென்னும் துன்பப் பெருங்கடலிலிருந்து மீண்டும் முடிவில்லா மகிழ்வின் துறைமுகமான பரத்தை அடைய ஒளி வீசும்".......... என பிற்காலத்தில் நம் புனிதர் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் அடியார்களால் உருவாக்கப்பட அவர் பெற்றோர் விரும்பி, பேராலயப் பள்ளிக்கு அனுப்பினர். பிற்காலத்தில் கோடி அற்புதராக அவர் திகழ இதுவே காரணமென அவர் பள்ளி நாட்கள் பற்றி சாட்சி பகர்ந்த, இரண்டாவது சாகர் ஆண்டகை மொழிந்துள்ளார். உலகியல் கல்வியும், உலக பதவிகளும் இலாபங்களுமே போதும் என இன்று பல பெற்றோர்கள் எண்ணுகின்றனர். பிள்ளைகளின் ஞான வாழ்வில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. நல்வழி நடத்துவ தில்லை; கண்டித்துத் தண்டிப்பதில்லை.

பிரம்பை கையாளாதவன் பிள்ளையை பகைக்கிறான்; அவனை நேசிக்கிறவன் கட்டாயமாய் கற்பிக்கிறான்” (பழமொழி 14/24) இதனை ஆழ்ந்து சிந்திப்போம். நமது இல்லம் ஒரு ஆலயம். நமது வீட்டிலும் பல தூயவர்கள் தோன்ற நாம் விரும்ப வேண்டும். அதற்கு விசுவாசமும் உறுதியும் அப்பழுக்கற்ற நல்வாழ்வும் தேவை.

"என் மக்கள் உண்மைக்கேற்ப நடக்கின்றனர் என்ற கேள்விப்படுவதை விட மேலானதொரு மகிழ்ச்சி எனக்கில்லை." (111 அருளப்பர் 4)