திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் - இன்றைய சிந்தனை

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார்...சீமோன் பேதுரு...

'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ''யோனாவின் மகனான சீமோனே,... உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்...' என்றார்''

 (மத்தேயு 16:13,16-18)


அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பிலிப்புச் செசரியா என்னும் நகரம் இஸ்ரயேல் நாட்டுப் பகுதின் வடக்கில் இருந்தது. அகுஸ்துஸ் சீசர் என்னும் உரோமைப் பேரரசன் அந்நகரைப் பெரிய ஏரோதுக்குக் கொடுத்திருந்தார். ஏரோதின் மகன் பிலிப்பு அந்நகரை விரித்துக் கட்டி, அதற்குத் தன் பெயரையும் சீசரின் பெயரையும் இணைத்து ''பிலிப்புச் செசரியா'' என்று புதிய பெயர் வைத்தார் (மத் 16:13). இயேசு தம் சீடரை நோக்கி, ''மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்றொரு கேள்வியைக் கேட்கிறார் (மத் 13:13). இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது ''மானிடமகன்'' என்கிறார். வேறு யாரும் அவரை அப்பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை. ''மானிடமகன்'' என்னும் சொல்லுக்கு என்ன பொருள்? மத்தேயு நற்செய்தியில் பல இடங்களில் இயேசு தம்மை இவ்வாறு அடையாளம் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, மத் 9:6; 11:19; 12:8,32; 13:37; 16:13 ஆகிய பகுதிகளைக் காட்டலாம். இயேசு தாம் துன்புற்றுச் சிலுவையில் அறையப்படுவதை முன்னறிவித்த வேளைகளில் தம்மை ''மானிடமகன்'' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 12:40;17:9,12,22; 20:18;,28; 26:2;,24,45). இறுதிக் காலத்தில் தாம் நடுவராக வரப்போவதைக் குறிப்பிடும்போதும் ''மானிடமகன்'' பற்றிப் பேசுகிறார் (காண்க: மத் 10:23; 13:41; 16:27,28; 19:28; 24:27,30,37,39,44; 25:31; 26:64).

-- ''மானிடமகன்'' என்று தம்மை அழைத்த இயேசு தாம் மனித குலத்தோடு நெருங்கி ஒன்றித்திருப்பதை அப்பெயர் மூலம் வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் மனித குலத்தின் பிரதிநிதியாகக் கடவுள்முன் நிற்கின்றார். மனித குலத்திற்குப் புதிய வாழ்வு வழங்க அவர் தம்மையை கையளிக்கின்றார். தாம் யார் என இயேசு கேட்ட கேள்விக்கு பேதுரு பதிலளிக்கிறார்: ''நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' (மத் 16:16-17). இயேசு பட்டம் பதவி தேடிவருகின்ற மெசியா அல்ல; மாறாக, துன்புற்று இறக்கப்போகின்ற மெசியா (மத் 16:21). இயேசு பேதுருவைப் ''பாறை'' என அழைக்கிறார். பேதுரு என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அதுவே. அரமேய மொழியில் ''கேபா''. பேதுரு பாறைபோல உறுதியாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் நாம் பாறைபோல நிலைத்திருக்க வேண்டும். நம் நம்பிக்கை அசைவுற்றுக் குலைந்துவிடாமல் நாம் பிடிப்புடன் இருக்க அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் மக்கள் குழுவாகிய திருச்சபை இயேசு என்னும் பாறைமேல் கட்டப்பட்டிருப்பதால் நாமும் பாறைபோல் உறுதியாயிருக்க நமக்கு அருள் வழங்கப்படுகிறது.