எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) இவ்வுலகில் தந்தை இல்லாதவராக பிறந்த இறைமகன் இயேசு, தாய் இல்லாதவராக தோன்ற விரும்பவில்லை. இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றித்திருக்கிற இறைமகனை அற்புதமான முறையில் கருத்தாங்கிப் பெற்றெடுத்ததால் இறைவனின் தாயாகும் பேறுபெற்றவர் கன்னி மரியாள். உலகமே கொள்ளாத இறைவனை, தம் வயிற்றில் சுமந்த மரியாளை நாம் வாழ்த்துவதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மரியாள் மக்கள் அனைவராலும் வாழ்த்தப்பட வேண்டுமென்பது கடவுளின் திருவுளம்.
"விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது" (யோவான் 3:27) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, மரியாள் பெறுகின்ற வாழ்த்தும் விண்ணில் இருந்தே வந்தது. மரியாள் இறைமகனின் தாயாக முன்குறிக்கப்பட்டிருந்ததால் தந்தையாம் கடவுள் தம் வானதூதரை அனுப்பி, "அருள்நிறைந்த மரியே வாழ்க!" (லூக்கா 1:28) என வாழ்த்துகிறார். "அறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனின் செயல்முறைகளுக்கும், அவரது முடிவில்லா விருப்பத்திற்கும் நடுவில் நின்றுகொண்டு, விசுவாசத்தின் மங்கலான ஒளியில், இறைவனின் திட்டத்துக்கு தம்மை கையளித்ததால்" (மரியாளின் சேனை கைநூல் அதி. 5) மரியாள் ஆண்டவரின் தாயானார். இவ்வாறு எல்லாத் தலைமுறையினரிடமும் 'பேறுபெற்றவர்' (லூக்கா 1:48) என்ற வாழ்த்தை மரியாள் உரிமையாக்கிக் கொண்டார்.
தூய ஆவியாரின் வல்லமையால் 'உன்னத கடவுளின் மகனை' (லூக்கா 1:32) கருத்தாங்கிய மரியாள், செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை யோவான் மகிழ்ச்சியால் துள்ளினார். அப்போது எலிசபெத்தை ஆட்கொண்ட பரிசுத்த ஆவியார், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தியதோடு, மரியாளை "ஆண்டவரின் தாய்" (1:43) என்றும் அழைத்தார். "ஓர் எளியப் பெண் இறைவனின் தாயாக இருப்பது அனைத்திற்கும் மேலான இறைத்திட்டம் அல்லவா? அவர் ஒரு கன்னிப் பெண்ணைத் தம் தாயாகச் செய்ததை மிகச்சிறந்த அற்புதம் என்று சொல்வதற்கு தடை எதுவும் உண்டோ?" (கன்னி மரியாளின் வணக்க மாதம் பக். 23) இவ்வாறு மூவொரு இறைவனிடம் பெற்றிருக்கும் மேன்மையான இடத்தால், மரியாள் மனிதகுலத்தின் வாழ்த்துக்கும் வணக்கத்திற்கும் என்றும் தகுதி உள்ளவராகத் திகழ்கிறார்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠