பெரிய வியாழன் அன்று இரவு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தும்போது சாப்பிட்டது. அப்போதும்தான் நீரும் பருகினார். அன்று இரவே நம் தெய்வத்தை கைது செய்தார்கள். அவரிடம், இவரிடம் என்று விசாரணைக்காக மாற்றி மாற்றி அழைக்கழித்தார்கள். அடித்தார்கள்; வதைத்தார்கள், மிதித்தார்கள்; கசையால் நம் தலைவரின் உடலைக் கிழித்தார்கள்; தலையில் முள்முடி சூட்டினார்கள். ஏற்கனவே அனுபவித்த இன்னல்களும்; இப்போது சிலுவையை சுமந்து செல்லும்போது ஏற்பட்ட இன்னல்களும், பசியால், தாகத்தால் ஏற்பட்ட களைப்பும் ஒன்று சேர்ந்து அவரை வாட்ட இடரி மூன்றாம் முறையாகவும் விழுந்து விட்டார்.
உடலில்தான் சோர்வே தவிர அவர் உள்ளத்தில் சோர்வு என்பது துளியும் இல்லை.
“ உடலைக் கொன்றபின் ஒன்றுமே செய்யமுடியாதவருக்காக அஞ்சாதீர்கள்; இறந்த பின்னும் நரகத்தில் தள்ள வல்லவருக்கே அஞ்சுங்கள் “ என்றார் நம் தெய்வீக கல்வாரி நாயகன்.
முந்தைய ஸ்தலத்தில் சொல்லியதைப் போல அவர் சொல்லியதைத்தான் செய்தார்; நம்மால் செய்ய முடியக்கூடியதைத்தான் சொல்லுவார். எழுந்தார் அஞ்சா நெஞ்சத்தோடு கல்வாரி மலையை நோக்கி நடந்தார்.
அவரின் ஆன்மாவை இம்மி அளவுக்கூட அசைக்க முடியாமல் அவர் உடலைக்கொல்ல கொண்டு செல்லும் இந்த அற்ப மக்களுக்காகவா அவர் அஞ்சுவார் நோ சான்ஸ்.
ஆனால் நாம் எப்படி ?
சின்ன சின்ன இடர்கள், துன்பங்கள், சோதனைகள் வந்துவிட்டால் உலகமே இருண்டுவிட்டது போல் எனக்கு எல்லாமே முடிந்துவிட்டது. இனி எனக்கு என்று எதுமில்லை. இனி என்னால் வாழ்வே முடியாது என்று முடிவு கட்டுகிறோம். சோதனைகளில் நம்பிக்கையை இழப்பது நம் இயல்பு..
ஆனால் சோதனைகளை சாதனைகளாக்குவதும், தடைக்கற்களை படிக்கட்டாக்குவதும் நம் பரமனுக்கு கை வந்த கலை. இதையேதான் நம்மிடமும் எதிர்பார்க்கிறார். அவர் நம் துணை நிற்கும்போது நம்மாலும் எதுவும் செய்ய முடியும், எதையும் தாங்க முடியும், எதையும் எதிர்த்து நிற்க முடியும். போராட முடியும். வெற்றியும் பெற முடியும். நம்மால் தூக்க முடியாத சுமைகளையும், தாங்க முடியாத பாரங்களையும் நம் சர்வேசுவரன் நமக்கு தருவதில்லை.
வைரம் பட்டை தீட்ட தீட்டத்தான் ஜொலிக்கும். அதுபோல மனிதனும் துன்பங்களையும் சோதனைகளையும், தாங்க தாங்கத்தான் அவனும் ஜொலிப்பான். அதுவும் ஆண்டவர் முன்.
ஆதலால் நாம் எத்தனை முறை விழுந்தோம் என்று கணக்குப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கக்கூடாது. மீண்டும்.. எழ வேண்டும்.. அது எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும்..
சரி எதோ தெறியாமல் தவறி விழுந்துவிட்டோம்.. “ ஐய்யையோ நான் இப்பேற்பட்ட பாவத்தை செய்துவிட்டேனே “ என்று நிற்காமல் உடனே செய்த பாவத்திற்காக மனம் வருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து மீண்டும் அந்த பாவத்தில் விழாமல் எச்சரிக்கையோடு நடக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.
எந்த மனிதனும் சாவான பாவத்தில் விழுந்து எழாமல் மரிக்கக்கூடாது. ஆகையால் சாவான பாவத்தில் இருப்பவர்கள் உடனே மனம் திரும்பி அப்பாவத்தில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்... அதற்காக நம் கல்வாரி நாயகனிடம் மன்றாடுவோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠