மாதாவை மகிமைப்படுத்துவதனால் மைந்தனுக்கு அவமதிப்புச் செய்துவிடுவோமோ???

மாதாவை மகிமைப்படுத்துவதனால் மைந்தனுக்கு அவமதிப்புச் செய்துவிடுவோமோ என்றும் - தாயை உயர்வுபடுத்தினால் குமாரனைத் தாழ்த்தி விடுவோமா என்றும் பயப்படும் பக்தர்கள்தான் உண்மையைப் பற்றித் தடுமாறுகிறார்கள்.

வேத பிதாக்கள் மாமரிக்குச் செலுத்தியுள்ள மிக நியாயமான புகழ்ச்சிகளை நாமும் அன்னைக்குச் செலுத்துவதை இவர்களால் பொறுக்க முடியவில்லை. திவ்விய நற்கருணையின்முன் காணப்படுவதைவிட, தேவதாயின் பீடத்தின் முன்பாக அதிக மக்கள் முழங்காலில் நிற்பதைக் காண்பது இவர்களுக்கு எரிச்சலை மூட்டுகிறது. நற்கருணையும் மாமரியும் ஒருவர்க்கொருவர் எதிராக இருப்பதாக நினைப்பு போலும்! அல்லது மாமரியிடம் மன்றாடுவோர் அவள் வழியாக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடவில்லை என்று நினைக்கிறார்கள் போலும்! நாம் இப்படி அடிக்கடி மாமரியுடன் பேசவும் மன்றாடவும் கூடாது என இவர்கள் விரும்புகிறார்கள்.

இவர்கள் வழக்கமாகக் கூறும் கூற்றுக்கள் இவை.
இத்தனை ஜெபமாலைகள், இத்தனை சபைகள், இத்தனை வெளிப்பக்தி முயற்சிகள் மாமரிக்குச் செய்வதால் என்ன நன்மை உள்ளது?
இதெல்லாம் பெரிய அறியாமையைக் காட்டுகிறது.
இது நம் வேதத்தையே வெறும் ஆசாரமாக்கி விடுகிறது.
இயேசு கிறிஸ்துவின்மீது பக்கியுள்ளவர்களாக மக்கள் இருக்க வேண்டும்.
நாம் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாட வேண்டும்.
அவரே நம் ஒரே மத்தியஸ்தர்.
நாம் இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கிக்க வேண்டும்.
இதுவே சரியான பக்தியாகும் என்பார்கள்.

இவர்கள் கூறுவது ஒரு வகைக்குச் சரி.

ஆனால், இதைக் கூறி அதன் தொடர்பாக மாமரிமீது பக்தி கொள்வதை இவர்கள் தடைசெய்தால், அது மிகவும் அபாயமானது.

அதிக நல்லதைச் செய்கிறேன் என்ற பாசாங்குக்கடியில் ஒளிந்திருக்கும் பசாசின் நுட்பமான வலை இது.

காரணம், இயேசு கிறிஸ்துவுக்கு நாம் மிகச் சிறந்த மரியாதை செலுத்துவது எப்போதெனில், அவர் அன்னையை மகிமைப்படுத்தும் போதுதான்.

ஏனெனில், இயேசு கிறிஸ்துவை அதிக உத்தமமான முறையில் மகிமைப் படுத்துகிறோம். நாம் தேடும் நம் கதியான இயேசு கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்லும் வழியாகக் கருதியே நாம் மாமரியிடம் செல்கிறோம்.

பரிசுத்த ஆவியுடன் சேர்ந்து, திருச்சபை மாமரியை முதலிலும் இயேசுவை இரண்டாவதுமாக வாழ்த்துகிறது.
"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கபட்டவள் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே;"

இயேசுவை விட மாமரி உயர்ந்திருக்கவில்லை.
அவருக்குச் சமமானவர்களுமில்லை - அப்படிக் கூறினால் அது பொறுத்துக் கொள்ள முடியாத பதிதமாகும்.

ஆனால் இயேசுவை அதிக உத்தமமாக வாழ்த்த வேண்டுமானால், அதற்கு முன் நாம் மாமரியை வாழ்த்த வேண்டும்.

ஆகவே, உண்மையற்ற இந்தத் தடுமாறும் பக்தர்கள் இருக்கட்டும்.

உண்மையிலேயே மாமரிமீது பக்தி பூண்டிருக்கும் அனைவருடனும் சேர்ந்து நாமும் இவ்வாறு கூறுவோம்:

"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!" மரியாயே வாழ்க!