மாதாவை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இதை படித்துத்தான் ஆக வேண்டும்!


மாதா புனிதர் லூயிஸ் மரிய மோன்ட்போர்ட்டின் ஒப்பற்ற கையெழுத்தில் உதித்த விலைமதிப்பற்ற புத்தகமான 'மரியாயின் மீது உண்மை பக்தி' என்ற நூலில் இருந்து..

ஒவ்வொரு சனிக்கிழமை தோறும்... ( மாதா பக்தி முயற்சி) 

1. மிகவும் ஆசீர்வதிக்கப் பெற்ற கன்னிமாமரியாயின் வழியாகவே சேசு கிறீஸ்து உலகிற்கு வந்தார். அது போல் அக்கன்னிமரியாயின் வழியாகவே அவர் உலகில் அரசாளவும் வேண்டும்.

2. மாமரியன்னை தன் வாழ்வில் மிகவும் மறைந்திருந்தார்கள். இதனால் ''மறைந்த இரகசிய அன்னை" என்று பரிசுத்த ஆவியாலும் திருச்சபையாலும் அழைக்கப்பட்டார்கள். அவர்களின் தாழ்ச்சி எவ்வளவு ஆழமுடைய தாயிருந்ததென்றால், உலகில் அவர்களுடைய மிக வேகமுள்ள ஓயா விருப்பம்: சர்வேசுரன் ஒருவருக்கே காணப்படும்படியாக, தன்னிடமிருந்தும், எல்லா சிருஷ்டிகளிடமிருந்தும் தான் மறைந்திருக்க வேண்டும் என்பதே.

3. தான் மறைந்து, எளிமையாய், தாழ்மையாய் இருக்கவேண்டும் என்று அவர்கள் செய்த மன்றாட்டுக்களை சர்வேசுரன் கேட்டருளினார். மரியாயின் உற்பவம், பிறப்பு, வாழ்வு, வாழ்வின் திரு நிகழ்ச்சிகள், உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகியவற்றில் ஏறக்குறைய எல்லா மனிதரிடமிருந்தும் மாமரியை சர்வேசுரன் மறைத்து வைக்கக் கிருபை கூர்ந்தார். மாமரியன்னையின் சொந்தப் பெற்றோரே அவர்களை அறியவில்லை. வானதூதர்கள் 'இவள் யார்?" (Quae est Ista) என்று அடிக்கடி தங்களுக்குள் பேசிக்கொள்வர். ஏனென்றால் உன்னத சர்வேசுரன் தூதர்களிடமிருந்து மாமரியை மறைத்து வைத்திருந்தார். அல்லது அவர்களிடம் மாமரி பற்றி ஏதாவது வெளிப்படுத்தியிருந்தால் அதைவிட எல்லையற்ற காரியங்களை மறைத்துக் கொண்டார்.

4. புதுமை செய்யும் ஆற்றலைப் பிதாவாகிய சர்வேசுரன் மாமரிக்கு வழங்கியிருந்தார். ஆயினும் மாமரி தன் வாழ்நாளின்போது அற்புதம் எதுவும் செய்யாமல் - பகிரங்க அற்புதங்களையாவது செய்யாமல் இருக்கும்படி அனுமதித்திருந்தார். தம்முடைய ஞானத்தை சுதனாகிய சர்வேசுரன் மாமரிக்குக் கொடுத்திருந்தார். ஆயினும் தம் அன்னை மிகக் கொஞ்சமாகவே பேசும்படி சம்மதித்திருந்தார். பரிசுத்த ஆவியின் உண்மைப் பத்தினியாக கன்னிமாமரி இருந்த போதிலும், அவர்களைப் பற்றி மிகக் கொஞ்சமாக அதுவும் சேசுகிறிஸ்துவை அறியப்படுத்த எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே அப்போஸ்தலர்களும் சுவிசேஷகர்களும் கூறும்படி உத்தரவளித்தார்.

5. உந்நதரான சர்வேசுரன் தம் தலைசிறந்த, ஈடு இணையற்ற வேலைப்பாடாகிய மரியாயை அறிவதையும், சொந்த உடைமையாகக் கொண்டிருப்பதையும் தனக்கெனவே வைத்துக் கொண்டார். சுதனாகிய சர்வேசுரனின் வியக்கத்தக்க அன்னையாக இருக்கிறார்கள் கன்னி மாமரி. அவரோ தம் தாய் உலகில் வாழும் போது அவர்களை மறைத்தும் தாழ்த்தியும் வைத்திருந்தார். அவர்களின் தாழ்ச்சியை வளரச் செய்ய அவ்வாறு செய்தார். அவர்களை யாரோ தனக்கு அந்நியரைப் போல 'ஸ்திரீயே'' (அரு. 2:4: 19:26) என்று அழைத்தார் !

இவ்வளவிற்கும் எல்லா சம்மனசுக்களையும் மனிதர்களையும் விட அதிகமாக அவர்களை மதித்தார், நேசித்தார். கன்னிமாமரி பரிசுத்த ஆவியின் உண்மையுள்ள பத்தினி. அவர் ஒருவரே சென்றடையக் கூடிய முத்திரையிடப்பட்ட சுனை (உந், சங் 4:12). பரிசுத்த திரித்துவம் தங்கும் திரு இல்லம் - இளைப்பாறும் இடம் - மாமரியே. பிரபஞ்சத்தில் வேறு எங்குமே இல்லாத, கெரூபிம் செராபிம் என்னும் சம்மனசுக்களுக்கும் மேலாய்த் தாம் உறைவிடத்தையும் விட, அதிக மகிமையுடனும் தெய்வீகமுடனும் சர்வேசுரன் மாதாவிடத்தில் வாசம் செய்கின்றார்.

ஒரு சிருஷ்டி எவ்வளவு தூய்மையானதாயிருந்தாலும், ஒரு பெரும் சலுகையாலன்றி அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

நன்றி : மரியாயின் மீது உண்மை பக்தி, மாதா அப்போஸ்தலர் சபை. நூல் தொடர்புக்கு ph: 9487609983, 9487257479

"பரலோக பூலோக இராக்கினியும், நம் இருதயங்களின் அரசியுமான மரியாயே வாழ்க! 

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!