ஞான வாசகம், பாவ சோதனைகளை சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றை வெல்லுதல்:

ஞான வாசகம்

இதுவும் ஒரு வகைத் தியானமே. 

உண்மையில் தியானிக்க அறியாதவர்கள் நல்ல தியானப் புத்தகங்களை நிறுத்தி, நிதானித்து வாசிக்கும்போது, தியானத்தால் வருகிற நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். 

விசுவாசிகள் நாள் தவறாமல் தினமும் கிறீஸ்துநாதர் அநுசாரம், மன்ரேசா, தேவமாதா பற்றிய தியானப் புத்தகங்கள், மரண ஆயத்தம், அர்ச்சிய சிஷ்டவர்கள் சரித்திரம் போன்ற நூல்களில் ஒரு அத்தியாயத்தை நிறுத்தி நிதானமாக வாசித்து, தியானிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அப்போது அவர்கள் தங்கள் ஆத்தும நிலையையும், தாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்றும், தேவசிநேகத்தின் மிகுதியையும் உணர்ந்து கொள்வார்கள். 

நரகம் அவர்கள் மட்டில் பலமிழந்து போகும். 


பாவ சோதனைகளை சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றை வெல்லுதல்:

பாவ சோதனைகள் அவசியமானவை. கிறீஸ்துநாதரும் சோதனைக்குட்பட்டார். மரணத்தை வெல்லும்படி தாம் மரணத்திற்கு உட்பட்டது போலவே, சோதனைகளை வெல்லுவதில் நமக்கு முன்மாதிரிகை காட்டும்படி அவர் சோதனைக்கும் உட்பட சித்தங் கொண்டார்.

"நியாயமான முறையில் போரிட்டு வெற்றி பெறாதவன் எப்படி முடிசூடப்பட முடியும்? தன்னைத் தாக்க ஒருவருமில்லாத போது, மனிதன் எப்படி வெற்றி பெற முடியும்?" என்று அர்ச். பெர்னார்ட் கேட்கிறார்.

"தன் முழு இருதயத்தோடும் கடவுளை நெருங்கி வருகிறவன், சோதனையாலும், துன்ப துரிதங்களாலும் தான் அதற்குத் தகுதியுள்ளவன் என்று நிரூபிக்க வேண்டும்" என்று அர்ச். பெரிய ஆல்பர்ட் கூறுகிறார். 

தேர்வு நடத்தப்படாமல் மாணவனின் தகுதி வெளிப்படுவதில்லை. சோதனை இன்றி புண்ணியம் இல்லை, பாவத்தை விலக்கி, தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருக்கிறவர்களைத்தான் பசாசு சோதிக்கிறது. ஞான ஜீவியத்தில் உன் நிலை என்ன என்பதை நீ அறிவதற்காகவே சோதனை உனக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஆகவே திட தைரியத்தோடும், தேவ உதவியோடும் சோதனைகளை எதிர்கொண்டு அவற்றை வெல்லுகிறவன், நரகத்தை வெல்லுகிறான், கற்பனைக்கும் எட்டாத தேவ வெகுமானம் அவனுக்காகக் காத்திருக்கிறது.