உண்மையான கிறிஸ்தவக் குடும்பம்!

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாம் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்” என்று திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 3ஆம் அதிகாரம் 14 மற்றும் 15 ஆம் வசனத்தில் எழுதுகிறார். நாம் சிந்திப்போம். நம் குடும்பங்கள் சாதாரணக் குடும்பமாகத் திகழ்கின்றதா அல்லது உண்மையான கிறிஸ்தவக் குடும்பமாகத் திகழ்கின்றதா?

1. குடும்பத்தை அர்ப்பணிக்க வேண்டும்.
1சாமு 1:11ல் அன்னாள் ஆண்டவர் தனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால், அதை அதன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பதாக ஆண்டவரிடம் வாக்குப் கொடுக்கிறார். அதைப்போல ஆண்டவர் தனக்குக் கொடுத்த குழந்தை சாமுவேலை ஆண்டவரின் பணிக்காகவே அர்ப்பணித்த விட்டார். இன்று எத்தனை குடும்பங்களில் பெற்றோர் தம் பிள்ளைகளை ஆண்டவரின் பணிக்காக அர்ப்பணிக்கின்றார்கள்? தங்களுடைய பிள்ளைகள் வளரும்போது அவர்கள் இந்த உலகத்தில் பெரிய படிப்புப் படிக்கவேண்டும், பெரிய உயர்ந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றுதானே ஆசைப்படுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் அர்ப்பணிக்கும் போது அவர்களும் புனிதர்களாக மாறுவர்.

2.பெற்றோரின் செபம்:-
நல்ல குடும்பமாக , திருக்குடும்பமாக வாழப் பெற்றோர் பிள்ளைகளுக்காய் அதிகமாய்ச் செபிக்க வேண்டும். மேலும் அவர்களையும் செபவாழ்வில் வளர சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்க வேண்டும். மத்தேயு 18:20-ல் ”இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்.” என்ற இயேசு கூறியிருக்கிறார். எனவே நம் குடும்பச் செபத்தின் போது ஆண்டவர் நிச்சயமாகவே அங்கு வாசம் செய்கிறார். திருமணமானத் தம்பதியரின் செபத்திற்குச் சிறந்த உதாரணம் தோபியா, சாராவின் செபம். (தோபித்து 8:4-8)

3.எந்த சூழ்நிலையிலும் கடவுளோடு இணைந்திருத்தல்:-
2 சாமு 23:5 ”என் குடும்பம் இறைவனோடு இணைந்துள்ளது அன்றோ?” என்று தாவீது தனது இறுதிமொழிகளில் குறிப்பிட்டுள்ளார். நாம் சிந்தித்துப் பார்ப்போம். நம் குடும்பம் யாரோடு இணைந்திருக்கிறது? கிறிஸ்தவக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் பிற தெய்வங்களையும் வழிபடுவது தவறில்லை என்று கூறுகின்றனர். ”தாயின் வயிற்றில் நம்மைப் பாதுகாத்து வரும் நம் ஆண்டவரை மறந்து, அன்று அநேகப் பிள்ளைகள் காதலித்துப் பிற தெய்வங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் நிலையை இன்று அதிகமாகவே காணமுடிகிறது. நம் அன்பு ஆண்டவர் நம் குடும்பங்களில் இருக்கிறாரா? சிந்திப்போம்.

4:ஆண்டவருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம்:-
திருபா. 119:11-ல் உமக்கெதிராகப் பாவம் செய்யாதவாறு உம் வாக்கை என் இதயத்தில் இருத்தி வைத்துள்ளேன்” என்ற தாவீது கூறுகின்றார். ஆண்டவருடைய வார்த்தையை நாம் திருப்பலியிலும், செபக்கூடங்களிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் கேட்கிறோம். அந்த வார்த்தைகளை நம் உள்ளங்களிலும் பதிய வைக்கிறோமா? பல நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆண்டவரோடு இணைந்து வாழாமல் இந்த உலகத்திற்கேற்றபடியெல்லாம் வளர்கின்றனர். திருமணத்தின் போது ஆண்டவருக்குப் பிரியமாய்ப் பிள்ளைகளை வளர்ப்பீர்களா? என்று கேட்டும் போது வளர்ப்போம் என்ற பதில் கூறுகிறோம். ஆனால் பிள்ளைகள் ஆண்டவரை விட்டு விலகிதானே பலநேரங்களில் வாழ்கிறார்கள். திருகுடும்பத்தில் இயேசுவும் இருந்தார். ஆனால் நம் குடும்பங்களில் இயேசுவை வெளியே விரட்டிவிடுகின்றோம். குடும்பசெபத்தின்போது பிள்ளைகளாகத் தங்களுடைய விவிலியத்திலிருந்து சில வசனங்களை வாசிக்கப் பழக்குங்கள். யோவான் 15:3ல் ”நான் சொன்ன வார்த்தையால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்” என்ற இயேசு கூறுகிறார். ஆகவே ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிக்கின்ற பிள்ளைகள் ஒருநாளும் தூய்மையற்ற வழிகளில் செல்லமாட்டார்கள். ஏனெனில் வார்த்தையானது பிள்ளைகளைக் கழுவி தூய்மைப்படுத்துகிறது.

5:குடும்பம் கற்பாறையாகிய ஆண்டவர் மீது கட்டப்பட வேண்டும்.:-
மத்தேயு 7:24 ”இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்” நாம் நம் குடும்பங்களைக் கற்பாறையாகிய ஆண்டவர் மீது கட்டினால் நாம் எப்படிப்பட்ட துன்பங்களோ, போராட்டங்களோ நம்மைத் தாக்கினாலும் நாம் அசைக்கப்படுவதில்லை. எபே 2:19-21 ல் திருத்தூதர் பவுல் ”கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.” இயேசுவையே மூலைக்கல்லாக நம் குடும்பங்கள் கொண்டிருந்தால் நாம் உறுதியாக நிற்போம். நம் குடும்பம் முழுவதும் உறுதியானதாக இருக்கும்.

5:பிள்ளைகளைத் தேவையான நேரத்தில் கண்டித்து வளர்க்க வேண்டும்.:-

நீதிமொழி 23:13,14-ல் ” பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்த தயங்காதே” என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய நாட்களில் பெற்றோர் பிள்ளைகளைக் கண்டிக்கப் பயப்படுகின்றனர். சிறுவயதிலிருந்தே ஆண்டவரைப் பற்றியும், ஒழுக்கமாய் வாழ்வது பற்றியும் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். சீராக் 7:23ல் ”உனக்குப் பள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நற்பயிற்சி அளி. இளமை முதலே பணிந்திருக்கச் செய்” என்று வாசிக்கறோம். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை ஞானத்தில், தெய்வப் பயத்தில் வளர்க்க வேண்டும். மேலும் 1 சாமு 2:29ல் ”என் புதல்வர்களை எனக்கு மோலக உயர்த்தி” என்று ஆண்டவர் கூறுகிறார். நாம் எத்தனை முறை நம் பிள்ளைகளை ஆண்டவருக்கு மேலாக உயர்த்துகிறோம். நாம் கடவுளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை மீறி நாம் பிள்ளைகளைக் கடவுளுக்கு மேல் உயர்த்தி அவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது ஆண்டவருக்கு அஃது அருவருப்பைத் தருகிறது.

இணைசட்டங்கள் 11:19ல் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் என்ற வார்த்தையின்படி ஆண்டவரைப் பற்றிய அறிவை அவர்களுக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறாக மேல்கூறிய அனைத்துக் கரியங்களையும் பெற்றோர்கள் பின்பற்றும்போது இக்குடும்பம் உண்மையான கிறிஸ்தவக் குடும்பமாக மாறும்.