புனித யோசப் வாஸ் அடிகள்


இலங்கையின் முதலாவது புனிதர்.

(இக்கட்டுரை விக்கி பீடியாவின் உதவியுடன் எழுதப்பட்டது)

(ஆறு வருடங்களுக்கு முன்னர் கடந்த 2015 ஜனவரி 14ல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது இலங்கைக்கான திருப்பயணத்தின்போது காலிமுகத்திடலில் இடம்பெற்ற பரிசுத்த திருப்பலியில் சுமார் 4 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் யோசப் வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் வழங்கியதனையும் தொடர்ந்து மருதமடு அன்னையின் திருப்பதிக்கு யாத்திரையாக வந்தனையும் இக்கட்டுரை வழியாகப் பணிவோடு நினைவு கூருகிறேன்)

இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் கத்தோலிக்க விசுவாசத்தைக் கட்டியெழுப்ப வேறுபாடு எதுவுமின்றி, அரும்பணியாற்றிய இலங்கையின் திருத்தூதர் என்றழைக்கப்படும் புனித யோசப் வாஸ் அடிகளாரை (21 ஏப்ரல் 1651-16 ஜனவரி 1711) நாம் அன்னையாம் திரு அவையோடு இணைந்து நினைவுகூருகிறோம்.

கடந்த 21 ஏப்ரல் 1631ல், இந்தியாவின் கோவா எனப்படும் இடத்தில் பிறந்த யோசப் வாஸ் அடிகளார், கடந்த 1685ம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri எனப்படும் துறவற சபையில் இணைந்து, 1687ம் ஆண்டு ஏப்ரலில் கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார். இவர், யோசேவாஸ் முனீந்திரர் எனவும் இலங்கைக் கத்தோலிக்க மக்களால் அழைக்கப்படுகிறார்.

இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியில் கால்வினிசத்தைப் பரப்பிக் கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்து இலங்கையில் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்திய காலத்தில், இளம்குரு யோசப் வாஸ் அடிகள் இலங்கைக் கத்தோலிக்கருக்கு சேவை செய்யவந்த குருவானவர் ஆவார்.

பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு, ஆரம்பத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கியதால், சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மக்களுக்கு தனது அளப்பரிய சேவையை ஆரம்பத்தில் வழங்கினார்.

கால்நடையாக மாறுவேடத்தில் 24 ஆண்டுகளாக வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று கத்தோலிக்க மதப்பிரசாரம் செய்தாரென அடிகளாரின் வரலாறு தெரிவிக்கிறது. பிற்காலத்தில் இவர் கண்டி இராச்சியத்தில் தங்கியிருந்து இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையை மீளமைத்தாரென இவரது வரலாறு மேலும் கூறுகிறது.

1692ல் கண்டிக்குச் சென்ற யோசப் வாஸ் அடிகளார் கண்டிப் பகுதியில் கத்தோலிக்க மதத்தை மீளத் தாபிக்கப் பெருமுயற்சி செய்ததால், இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த யோசப் வாஸ் அடிகள் 1696ல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார்.

தமிழிலும், சிங்களத்திலும் திருவிவிலியத்தை மொழி பெயர்த்ததோடு, மொழி, இன வேறு பாடுகளைக் கழைந்து கடவுள் நம்பிக்கையில் மக்கள் வளர வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்ததால் தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் மக்கள் கடவுளை வழிபடுவதற்கான நூல்களையும் எழுதியுள்ளார்.

மடுத் திருப்பதியில் அமைந்துள்ள அன்னை மரியாவின் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டுவதற்கு யோசப் வாஸ் அடிகளார் துணைபுரிந்தார். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையை இலங்கையில் பரப்புகையில், அந்தந்த மக்களின் பண்பாட்டுப் பாணிகளை மதிக்கவேண்டும் என்பதிலும் அவர் கருத்தாயிருந்தாக அறியக் கூடியதாகவுள்ளது.

1710ம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி என்னுமிடத்தில் (தற்போதைய புனித வியாகுலமாதா ஆலய வளாகத்தில்) ஒரு சிறு ஓலைக்கோயில் கட்டித் திருப்பலி ஒப்புக் கொடுக்கும் போது, காட்டிக் கொடுக்கப்பட்டு, மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். 1711ம் ஆண்டில் கண்டியில் காலமானார்.

"இலங்கையின் அப்போஸ்தலர்" என நாம் பெருமை யோடு அழைக்கும் யோசப் வாஸ் அடிகளார், 1995 ஜனவரி 20ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கொழும்பு வந்திருந்த போது ஜனவரி 21ல் காலிமுகத் திடலில் இடம்பெற்ற திருச்சடங்கில் அருளாளர் பட்டம் பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் ஆறு வருடங்களுக்கு முன்னர் கடந்த 2015 ஜனவரி 14ல் இலங்கைக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின்போது காலிமுகத்திடலில் இடம்பெற்ற திருப்பலியில் சுமார் 4 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் யோசப் வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனிதர் பட்டமளிப்புக்கான பாரம்பரியத்தின்படி வழக்கமாகத் தேவைப்படும் இரண்டாம் புதுமையினை வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யோசப் வாஸ் அடிகளாருக்கு விதிவிலக்கு அளித்திருந்தார் என்பது இங்கு விசேடமாகக் குறிக்கத்தக்கது. இலங்கையில் முதலாவது புனிதர் பட்டம் பெறுபவர் என்ற பெருமை இப்புனிதருக்குண்டு.

நன்றி - விக்கிப்பீடியா