ஞானோபதேசம்

ஞானோபதேசம் மிகவும் அவசியமானது. ஆனால், அந்தோ ! அநேக குடும்பங்களில் இது கைவிடப்பட்டு விட்ட ஒன்று. முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஞானபோதனைகளுக்கு கத்தோலிக்கப் பள்ளிக்கூடங்களையே நம்பியிருப்பார்கள். இன்றோ, அத்தகைய நல்லப் பள்ளிகளை நாம் காண முடிவதில்லை. ஆகையால் குழந்தைகளுக்கு விசுவாசத்தைப் போதிக்க வேண்டியது அவர்களது தாய்மார்களையேச் சார்ந்தது. அதனால் பிள்ளைகள் இளமையில் இருக்கும் போதே நீங்கள் அவர்களுக்கு ஞானக்கல்வியை ஊட்ட ஆரம்பித்திட வேண்டும். சங். கெல்லி சுவாமி, சிறு பிள்ளைகளின் ஞான வாழ்வின் முன்னேற்றத்தில் உள்ள பல்வேறுபட்ட நிலைகளை, சுருக்கமாகக் கூறுகிறார்!

“உங்கள் குழந்தையின் முதல் வருடத்தில் நீங்கள் அவனுடைய படுக்கையில் தீர்த்தம் தெளித்து, அவனுக்கு சிலுவை அடையாளம் வரைவீர்கள். அவனது இரண்டாம் வருடத்தின் மத்தியில் அவன் குழந்தை சேசுவின் படங்களை இனங்கண்டு கொள்ளவும், சிறு பாடல்களைப் பாடக் கற்றுக் கொள்ளவும் முடியும். அவனது மூன்றாவது வயதில், நீங்கள் அவனுக்கு சர்வேசுவரன் உலகனைத்தையும் படைத்தார் என்பதைப் போதிக்கவும், பூக்களிலும், பறவைகளிலும் மற்ற ஜீவராசிகளில் சிருஷ்டிகரானக் கடவுளைக் காண உதவி செய்வீர்கள். உங்கள் குழந்தை நான்கு வயதாகும் போது, அவன் உங்களோடு ஆலயத்திற்கு வந்து திவ்விய பலிபூசையில் பங்கு கொள்ளவும், அங்கே அமைதியாக அமர்ந் திருக்கவும் தேவையான வயதைக் கொண்டிருப்பான். ஆலயத்தில் நீங்கள் ஜெபிப்பதை அவன் காண்கிற போது, வேறு எவ்விடத்தையும் விட சர்வேசுவரனோடு நெருங்கியிருக்க ஆலயத்திற்கே மக்கள் போகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வான். அவன் தனது வாழ்நாட்கள் முழுவதிலும் சொல்ல இருக்கும் "கர்த்தர் கற்பித்த பரலோக மந்திரம்”, “அருள் நிறைந்த” மந்திரத்தை அறிந்து, கற்றுக் கொள்வான். அவனது 5 வயதில் காலை மாலை ஜெபங்களைத் தொடர்ச்சியான முறையில் சொல்லத் துவங்க இயலும். இப்போது அவன் நல்லது, கெட்டதன் வேறுபாடுகளை அறிந்து கொள்ளக் கூடியவனாய் இருப்பான். உதாரணமாக, ஏன் திருடக் கூடாது என்று புரிந்து கொள்ள முடியும். அவனது ஆறாவது வயதில் அவன் ஆரம்ப ள்ளிக்கூடத்தில் சேரும் முன்பாக, சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளவும், தீர்த்தத்தால் தன்னை ஆசீர்வதித்துக் கொள்ளும் பக்குவம் பெறுவான். அவனது இத்தகைய செயல்கள் உங்களைப் பார்த்து தான் கற்றுக் கொண்டான். நீங்கள் செய்வதைக் கண்டதாலேயே அவனும் செய்கிறான்.

உங்கள் குழந்தை, கேள் விகளையும், பதில்களையும் நினைவு படுத்திக்கொள்ளும் திறன் பெறும் போது, நீங்கள் சிறந்த ஞானோபதேச பாடப் புத்தகத்தை ஏற்பாடு செய்து, அவனது புதுநன்மைக்கு தயாரிப்புக்காக, அதனை அவன் கற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அதோடு இன்னும் பல சிறு, சிறு ஞானப் புத்தகங்களைக் கற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். பிள்ளைகள் இன்னும் இளம் பிராயத்தில் இருக்கும் போதே ஞான உபதேசத்தை நிறுத்துவது பெரியத் தவறாகும். நீங்கள் வேத சத்தியங்களில் திடமான தெளிவு கிடைக்கும் வகையில் ஞான அறிவை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதனால் அவர்கள் தங்களது வாலிப வயதில் உறுதியான விசுவாசத்தைப் பற்றி நிற்க அவர்களால் முடியும்.

குடும்ப ஜெபங்கள் (காலை மாலை ஜெபங்கள், திரிகால ஜெபங்கள், உணவுக்கு முன், பின் ஜெபங்கள்) மற்றும் ஞானோபதேசங்களோடு கூட, உங்களது பிள்ளைகள் சர்வேசுவரனை அறிந்து, நேசித்து, ஊழியம் செய்ய உதவுவதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன.

அவை புதுநன்மை, ஞானஸ்நானம், பெயர் கொண்ட திருநாள் (உங்கள் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட பெயர்கொண்ட அர்ச்சிஷ்டவர்களின் திருநாட்கள் - இன்று பிள்ளைகளுக்கு அர்ச்சிஷ்டவர்களின் பெயர்களை இடுவது குறைந்து கொண்டு வருகிறது - ஆசிரியர் கருத்து) ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டாடுங்கள்.

ஆம்! இத்தகைய வழிபாடுகள் இல்லங்களில் தேவ அனுசரனைக்கு மிகப் பெரிய வாய்ப்புகளைத் தருகின்றன. இவை திருச்சபையின் திருநாட்கள், குடும்ப வாழ்வில் முக்கிய அங்கங்களாக இருக்கின்றன என்பதை குழந்தைகள் உணர பெரிதும் உதவுகின்றன.

அதோடு கூட ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கென சிறு, சிறு ஞானப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஆகமனக் காலப் பூச்செண்டு தயாரித்தல், கிறிஸ்மஸ் குடில், தவக்கால ஒறுத்தல் அட்டவணை ஈஸ்டர் முட்டைகள் போன்றவை. இவைகளைப் பற்றி அதிகம் கூற போதிய அவகாசம் எனக்கு இல்லை . ஆனால் இவைகளைப் பற்றி நன்கு விவரிக்கும் புத்தகங்களும், சிறு இதழ்களும், பத்திரிகைகளும் ஏராளமாக இருக்கின்றன.