இயேசு ஜெபிக்கும் முறையைக் கற்றுத்தருகிறார்!


எப்படிச்செபிக்க வேண்டும் என்று நம் அன்புத்தெய்வம் கற்றுத்தருகிறார். ஒரு சில அறிவுரைகளை சொல்லிவிட்டு “ பரலோக மந்திரத்தை “ கற்றுக்கொடுக்கிறார். மிகவும் எளிமையாக, அமைதியாக, அழகாக கற்றுக்கொடுக்கிறார்.

இப்போது நம்மிடையே “கரிஸ்மேட்டிக்” (பிரிவினை சபையினரைப்போல் ஜெபிப்பது) ஜெபம் வேகமாக பரவிவருகிறது. அதுவும் நற்கருணை நாதரை கதிர்பாத்திரத்தில் ஸ்தாபம் செய்துவிட்டு கத்துவது, கூச்சல் என்று ஜெபிக்கும் ஜெபங்கள் வேறு திசையை நோக்கி செல்கிறது. இயேசு சொல்வதைக் கேட்பதுதானே அழகு.நியாயம். 

இயேசுவே எப்படிச்செபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த பின். நாம் ஏன் பிரிவினை சபையினரைப்போல் ஜெபிக்க வேண்டும். அமைதியின்; அன்பின் தேவனை ஏன் சத்தம்போட்டு அழைக்க வேண்டும். தென்றலில் வரும் மூவொரு இறைவனை ஏன் தொந்தரவு செய்வதுபோல் ஜெபிக்க வேண்டும்.

அதிக நேரம் ஜெபிக்கவேண்டும் என்றால் முதலில் ஒரு ஜெபமாலை. அதன் பின் அழகழகான பழைய பாடல்களைப்பாடலாம். “ அன்பின் தேவ நற்கருணையிலே” “ இயேசுவே என்னுடன் நீ பேசு “ “ யாரிடம் செல்வோம் இறைவா” “ சுமை சுமந்து சோர்ந்திருப்போரே “ “ ஒளியாம் இறையே வாராய்” இன்னும் எத்தனையோ கண்களில் கண்ணீரை வருவிக்கும் பாடல்களைப்பாடலாம். இடையிடையே அமைதியாக ஜெபிக்கலாம்.ஏன் திருமணி ஆராதனை இருக்கிறதே அதைச்செய்யலாம். கத்திப்பேசினால் மட்டும்தான் நமக்கு குணம் கிடைக்கும் என்றில்லை. அமைதியாக, உருக்கமாக, உருகி வேண்டிலாலும் குணம் கிடைக்கும்.

இது யாரையும் குறைகூற அல்ல. நம் வழிகளில் நாம் செல்லலாம். ஏன் இதைச்சொல்கிறோம் என்றால் பல இடங்களில் இப்படி ஜெபிக்கப்படும் ஜெபங்கள் ஆண்டவருக்கு அவசங்கையாகிவிடுகிறது.பல இடங்களில் “நித்திய ஸ்துதிக்குரிய “ மான்புயர் இவ்வருட்சாதனத்தை” பாடப்படுவது இல்லை.

(ஒரு அனுபவம் : அருமையாக, பக்தியாக சென்றுகொண்டிருந்த ஒரு நற்கருணை ஆராதனையில் ஒரு அருட்தந்தை இடையில் பிரிவினைபோல் ஜெபிக்க ஆரம்பித்தார். நான் அவரைப் தற்செயலாகப்பார்த்தேன் நற்கருணை ஆண்டவரின் முன் நின்று கொண்டே ஜெபித்தார் ( நற்கருணை ஆராதனை செய்யும் பங்குத்தந்தை முழங்காலில் இருந்தார்) சரி.. தந்தை நற்கருணை ஆண்டவரைத்தூக்கிப்பிடிக்கும் போதாவது முழங்காலில் இருப்பார் என்று பார்த்தேன். அப்போதும் ஏமாற்றமே. ஏன் கரங்களைக்கூட குவிக்கவில்லை. இரு கரங்களையும் தூக்கி ஆண்டவருக்கு ஆசீர்வாதம் போடுவதுபோல் கரங்களை வைத்திருந்தார். வேறு பல அனுபவங்களும் உண்டு. மேற்சொன்ன அனுவத்தில் இரண்டுமே பாடப்பட்டது)

நற்செய்தி தொடர்கிறது.

"நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்; ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர். அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

செபம் செய்யும்பொழுது, புறவினத்தாரைப்போல நீங்கள் பிதற்றவேண்டாம். அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம். நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்.

கர்த்தர் கற்பித்த ஜெபம்:

 "ஆதலால், நீங்கள் இவ்வாறு செபியுங்கள்: வானகத்திலுள்ள எங்கள் தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக,உமது அரசு வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.

மன்னிப்பு:

"மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில், உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார். மனிதரை நீங்கள் மன்னியாவிடில், உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்.

மத்தேயு 3: 5-15

(குறிப்பு : நற்கருணை ஆண்டவர் முன்னால் ஒரு கழுதையை மண்டியிட வைத்த அந்தோணியார் புதுமை நினைவுக்கு வருகிறது. நம் பரிசுத்த தேவதாயின் வரலாற்றிலே அவர் நற்கருணை வாங்கும் முன் முழங்காலில் இருந்து நெற்றி பூமியைதொடும் வரை வணங்கிவிட்டுத்தான் அவர் திவ்ய நற்கருணை நாதரைப் பெற்றுக்கொள்வாராம். ஏன் அவர் குழந்தையாக இருக்கும் போது அவரை முழங்காலில் இருந்து ஆராதித்துவிட்டுத்தான் அவருக்கு அமுது கொடுத்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அவர்கள் எங்கே? நாம் எங்கே?...சிந்திப்போம்..)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க