நவம்பர் 9

உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு பேறுபலன் வருகிறதில்லை என்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

ஒருவனும் வேலை செய்யக்கூடாத இராக்காலம் வரும் என்று சேசுநாதர் சுவாமி தாமே திருவுளம் பற்றினார் .இத்திவ்விய வாக்கியத்துக்கு அர்த்தம் எதுவோவெனில்: செத்த பிற்பாடு ஒருவரும் யாதோர் பலனுள்ள புண்ணியத்தைச் செய்ய முடியாது என்றும் பலனளிக்கும் யாதொரு தர்மத்தைப் பண்ண முடியாதென்றும் வேதபாரகர் எல்லோரும் சொல்லுகிறார்கள் . ஆகையினாலே சகலமான மனுஷரும் அவர்கள் உயிர் வாழும்போதே மோட்சத்தையும் நற்பலன்களையும் பெருவிக்கும் எவ்வித புண்ணியங்களையும் தர்மங்களையும் மகா சுறுசுறுப்புடனே பண்ணக் கடவார்கள் அல்லவோ ?

​ஜீவியக் காலத்தில் தக்க பிரகாரமாய்ச் செய்ததெல்லாம் பலிக்கும் . தவத்தினால் அதிக சந்தோசத்தையும் செபத்தினால் அதிக பேரின்பத்தையும் தர்மத்தினால் அதிக பிரதாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது சத்தியமாம் . உத்தரிக்கிற ஸ்தலத்திலோ அப்படியல்லவே . அதில் படுகிற சொல்லிலும் நினைவிலும் அடங்காத வருத்தங்கள் யாவும் உத்தரிப்புக் கடனுக்கு உதவுமல்லாமல் அவைகளால் மோட்சத்தில் ஓர் அற்ப பிரயோஜனமும் சிறிய பலனும் வரத்தக்கதாய் இல்லை . அதில் ஆத்துமாக்கள் பண்ணுகிற செபங்களினாலே தங்களுடைய வேதனைகள் கொஞ்சமாகிலும் குறைந்து போகிறதுமில்லை. சர்வேசுரனுடைய கோபாக்கினி அமர்ந்து போகிறதுமில்லை . அதில் , மோட்சத்தின் பேரில் அந்த ஆத்துமாக்கள் படுகிற ஆசைகளினாலே அவர்களுக்கு அதிக வருத்தம் உண்டாகிறதன்றியே அதனால் ஒரு க்ஷணத்திற்கு முன் மோட்ச பாக்கியம் வரப்போகிறதாய் இல்லை . அதனால் தாங்கள் படுகிறதெல்லாம் மிகவும் கொடியாதாயினும் தங்களுக்கு ஓர் அற்ப பிரயோசனமும் கொடுக்கிறதில்லை என்று கண்டு இந்த ஆத்துமாக்கள் அதிகம் வருத்தப்படுகிறார்கள் என்கிறதக்குச் சந்தேகம் இல்லை.

ஜெருசலேமாநகரில் வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குளம் ஒன்று இருந்தது . அதிலே தினந்தோறும் குறித்த நேரத்தில் முழுகிற முதல் வியாதியஸ்தன் எந்த நோயினாலும் நீங்கிக் குணமடைவான். முப்பத்தெட்டு வருஷ காலமாய் திமிர்வாதம் கொண்ட ஒரு வியாதியஸ்தன் ஒருவன் அக்குளத்தின் ஓரமாய் வெகுகாலம் உட்கார்ந்திருந்தாலும் பிறர் உதவி இன்றி அவன் தனக்கு உதவிக் கொள்ளக் கூடாதிருந்ததினால் ஆரோக்கியத்தைத் தரும் இந்த ஜலத்தில் இறங்க இயலாதவனாக இருந்தான் . அதனால் இந்த வியாதியஸ்தனுக்கு வந்த விசனம் கொஞ்சமென்று சொல்லக் கூடுமோ ? உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் அப்படியே சம்பவிக்கும் . இந்த ஆத்துமாக்கள் தங்களுக்குத் தானே யாதோர் சகாயம் பண்ணிக் கொள்ளக் கூடாதென்கிறதினாலே தங்களுக்குப் புறத்தில் இருந்து உதவி வராவிட்டால் தங்களுடைய உத்தரிப்புக் காலம் மட்டும் மிகவும் வேதனைப்பட்டு வருந்துவார்களாம். மற்ற அநேக ஆத்துமாக்கள் அவர்களுக்காக நடந்த தர்மங்களினால் மோட்சத்திற்குப் போகிறதையும் ,தங்களுக்கு ஒருவரும் சகாயம் பண்ணாதிருப்பதையும் கண்டு, அந்த ஆத்துமாக்களுக்கு எவ்வளவு வேதனை என்று கண்டுபிடிப்பாருண்டோ ?

மக்கபேயர் இரண்டாம் ஆகமம் ஏழாம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறது போல ,அக்காலத்தில் ஒரு தாயும் அவளுடைய ஏழு பிள்ளைகளும் பிடிபட்டு சத்திய வேதத்துக்காக கொடுங்கோலனான அந்தியோக்குஸ் இராஜாவினால் மிகுதியான வேதனைகளை அனுபவிக்கும் போது ,அந்த வேதனைகளால் தங்களுக்கு மோட்சத்தில் அதிக மகிமையும் அதிக பாக்கியமும் சந்தோசமும் வரும் என்கிற நம்பிக்கையினாலே , புறமதத்தார் எல்லோரும் அதிசயப்பட , விடாத பொறுமையோடும், ஆனந்த சந்தோசத்தோடும் அந்த வேதனைகளை அனுபவித்து மகிமையாய்ச் செத்தார்கள் . உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில், தாங்கள் படுகிற வேதனைகளினாலே கொஞ்சமாகிலும் பலன் வராததைப் பற்றி அதிக வருத்தப்படுவார்கள் அல்லாது மற்றபடியல்ல . பூமியிலே இருக்கிறவர்கள் ஒரு சின்ன செபத்தைப் பண்ணினால் , ஒரு காசு பிச்சை கொடுத்தால் , ஓர் அற்ப துன்பம் சர்வேசுரனைக் குறித்து சகித்தால் அவர்களுக்குப் பலன் இருக்கிறது . அதற்கு தக்க பலன் மோட்சத்திலே கிடைக்கும் . வேத சாட்சிகள் எல்லோரும் அனுபவித்த வருத்தங்களை விட உத்தரிக்கிற ஆத்துமாக்கள் அதிக கொடுமையான வருத்தங்களைப் பட்டாலும் அதனால் அவர்களுக்கு யாதொரு பலனும் இல்லை . ஆகையினால் எவ்வகையிலும் அவர்களுடைய வேதனை மிகுதியாகுமல்லாமல் அவர்களுக்கு ஓர் அற்ப ஆறுதலும் வரக் காணோம்

சற்றாகிலும் அந்த ஆத்துமாக்களுக்கு புறத்திலிருந்து ஆறுதல், உதவி வரக் கூடுமோ ? அப்படி வருகிறது சந்தேகமாய் இருக்கிறதுமல்லாமல் அப்படி வந்தாலும் மிகவும் கொஞ்சமாய் இருக்கும் .அது எப்படிஎன்றால் பழைய ஏற்பாட்டில் விளங்கின பிதாப்பிதாவாகிய சூசையப்பர் தனது சகோதரர்களின் காய்மகாரத்தால் அடிமையாய் விற்கப்பட்டு அநியாயமாய்த் தன் பேரில் சாட்டின இல்லாத குற்றத்துக்காய் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் . அதில் தம்மோடு கூட சிறைப்பட்ட இராஜாவினுடைய ஒரு உத்தியோகஸ்தனுக்கு பெரிய சகாயம் பண்ணினதன் பேரில் சூசையப்பர் அவனுக்கு சொன்னதாவது " நீ நன்றாய் இருக்கும்போது என்னை நினைத்து என் பேரில் தயவாய் இருந்து இராஜாவிடத்தில் எனக்காகப் பேசி என்னை இந்தச் சிறைக்கூடத்தில் இருந்து விடுவிக்கும்படியாய் செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறேன் என்றார் .

அப்படி இருந்தும் அந்த மனுஷனுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமானாலும் , தனக்கு உபகாரம் செய்த சூசையப்பரை மறந்து போனான் . உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அந்தப்பிரகாரம் சம்பவிக்கும் என்பது நிச்சயம் தான் . பிள்ளைகள் தங்களுடைய தாய் தகப்பனையும் , தாய் தகப்பன் தங்களுடைய பிள்ளைகளையும் சிநேகிதர் தங்களுடைய சிநேகிதரையும் , உபகாரம் பெற்றவர்கள் தங்கள் உபகாரிகளையும் மறந்து அவர்களுடைய அவதியைக் குறைக்க ஒன்றும் செய்யாது போவார்களாம் . ஏதாகிலும் செய்வார்களேயானால் மிகவும் கொஞ்சமாய் இருக்கும் .

மரித்தவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் பொறுக்கப்படாத வேதனைகளை அனுபவிக்கிறபோது ,அவர்களுடைய பிள்ளைகளும் உறவு முறையாரும் ஊரார் சிநேகிதரும் அந்த செத்தவர்களுடைய ஆஸ்திகளைச் செலவழித்து திருப்தியாய்ச் சாப்பிட்டு சிலாக்கியமாய் உடுத்தி ஆடிப் பாடிக் கொண்டாடி அவர்களுக்காக யாதொன்றையும் செய்ய மாட்டார்கள் . அதனாலே அவ்வளவு வருத்தப்படுகிற ஆத்துமாக்கள் யாதொரு உதவியின்றி தங்களுக்கு விதித்த உத்தரிப்பெல்லாம் நிறைவேற்ற வேண்டி இருக்கும்

கிறிஸ்தவர்களே ! நீங்களும் உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களுக்கு உதவி செய்யாமல் அவர்களை மறந்து போவீர்களோ ? அவர்களை மறந்து போவீர்களேயானால் அது பெரிய கொடுமை என்று உங்களுக்குத் தோன்றாதோ ? ஆகையினாலே நீங்கள் செய்கிறதெல்லாம் அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்படிக்கு நல்ல கருத்தோடே சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்

ஜீவிய காலம் பலனுள்ள காலமென்றும் அறுப்புக் காலமென்றும் , மகிமை சம்பாவனை பெறுவிக்கும் காலமென்றும் நன்றாய் விசாரித்து இராக்காலமான சாவு வருமுந்தி நீங்கள் எல்லோரும் எவ்வித புண்ணியங்களையும் விரும்பிச் செய்யக் கடவீர்கள்

நானாவித துன்பங்கள் நிறைந்த சிறைச்சாலைக்குச் சந்தோசமாய்ப் போக சம்மதிப்பாருண்டோ ? சம்மதிப்பார் இல்லை என்றால் , நீங்கள் எப்படி பற்பல பாவங்களைக் கட்டிக் கொண்டு சகல வேதனைகள் நிறைந்த ஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலமாகிய சிறைச்சாலைக்குப் போக சம்மதிக்கிறாற்போல இருக்கிறீர்கள் ? இதைப் போல புத்தியீனம் உண்டோ சொல்லுங்கள்

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

சேசுவே எங்கள் பேரில் தயவாய் இரும்

செபம் 

கடவுளான சர்வேசுரா ! ஸ்திரீ பூமான்களாகிய உமது அடியார்களுடைய ஆத்துமாக்களின் பேரில் உம்முடைய கிருபையை ஏராளமாய் பொழியப் பண்ணி ,அவர்கள் ஞானஸ்நானம் பெறும்படிக்கு தேவரீர் திருவுளமானீர் என்கிறதினாலே ,நித்திய பேரின்பத்தில் முடியாத சந்தோசத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் சுவாமி ஆமென்

ஒன்பதாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை 

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கோவிலில் ஏதாகிலும் காணிக்கை வைக்கிறது

புதுமை 

அர்ச் நிக்கோலோ என்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் மிகுந்த பக்தியாய் இருக்கிறவர் . சர்வேசுரனிடத்தில் அவருடைய செபத்தியானமும் ஒறுத்தல் தவமும் வல்லமையாய் இருந்ததினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று கேட்கத்தக்கதாக அவருக்கு அநேகம் முறை காணப்பட்டார்கள் என்று அவரது சரித்திரத்திலே எழுதி இருக்கிறது . ஒரு நாள் அவர் நித்திரை செய்து கொண்டிருந்த போது , சில நாட்களுக்கு முன்னர் இறந்து போன அவரது சிநேகிதரான பெலேகிரீனோ என்னும் சந்நியாசியாருடைய ஆத்துமம் அவரிடத்திலே வந்து தான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறதாக அறிவித்து , 'குருவே , என்னோடு கூட வந்து உத்தரிக்கிற ஸ்தலத்திலே ஆத்துமாக்கள் படும் வேதனையை பாரும் ' என்றது . அப்படியே அந்த அற்சிஷ்டவர் அந்த ஆத்துமத்தை பின்தொடர்ந்து போகிறார்போல ஒரு விஸ்தாரமான மைதானத்தில் வந்து சேர்ந்தார் .

அந்த மைதானத்தின் எப்பக்கத்திலும் அகோரமாய் எரிந்து வானமட்டும் பாயும் அனல் நிறைந்த ஒரு பெரிய சுவாலையைக் கண்டார். அந்தச் சுவாலையின் நடுவில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் மிகுந்த வருத்தத்தோடே வருகிறதையும் பயங்கரமான அபய சத்தம் இடுகிறதையும் தங்களுக்கு எப்படியாகிலும் உதவி ஒத்தாசை பண்ண வேண்டுமென்று கேட்கிறதையும் கண்டார் . அதைக் கண்டு பயந்து வெருண்டு நடு நடுங்கி நிற்கும் போது அவரைக் கூட்டிக் கொண்டு வந்த அந்த சந்நியாசியாருடைய ஆத்துமம் ' குருவே , இவ்வளவு வருத்தப்படுகிற ஆத்துமாக்களின் பேரில் இரக்கம் இல்லாது இருப்பீரோ ? அவர்கள் படும் வேதனை மனுஷருடைய புத்திக்கு எட்டாததாய் இருந்தாலும் ,அவர்கள் தங்களுக்கு ஒரு அற்ப உதவியும் வருவிக்கத் திராணி உள்ளவர்கள் அல்ல . நீரோவெனில் அவர்களுக்காக செபங்களையும் திவ்விய பூசைகளையும் தவக்கிரியைகளையும் ஒப்புக் கொடுக்க சம்மதிப்பீரேயானால் அவர்களுக்கு உதவுகிறதுமல்லாமல் உம்முடைய கிருபையால் அநேக ஆத்துமாக்கள் இந்த நிர்பாக்கியமான இடத்தை விட்டு மோட்சத்துக்குப் போகக் கடவார்கள் ' என்று சொல்லி மறைந்து போனது

அர்ச் நிக்கோலா என்கிறவர் விழித்தவுடனே எழுந்திருந்து சாஷ்டாங்கமாய் விழுந்து திரளான கண்ணீரைச் சொரிந்து தாம் கண்ட நிர்பாக்கியமான ஆத்துமன்களைக் குறித்து மகா பக்தியோடு செபங்களைச் செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார் . விடியற்காலம் சிரேஷ்டரான குருவின் உத்தரவைப் பெற்று அந்த ஆத்துமாக்களுக்கு திவ்விய பூசை செய்து அதோடல்லாமல் , எட்டு நாட்களுக்கு மிகுந்த சுறுசுறுபோடு  செபங்களைச் செய்து திவ்விய பூசை ஒப்புக் கொடுத்தார் . எட்டாம் நாளிலே முன் சொன்ன பேலேகிரீனோ என்ற சந்நியாசியாருடைய ஆத்துமம் பிரதாபமுள்ள முகத்தோடு அவருக்குக் காணப்பட்டு தாமும் தம்மோடு அநேகம் ஆத்துமாக்களும் அவரது செப தபம் மற்றும் பூசையினாலே உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதாக அறிவித்து நன்றியரிந்த மனத்தொடே சுவாமியாருக்கு ஸ்தோத்திரஞ் சொல்லி மறைந்து போனது

கிறிஸ்தவர்களே ! இப்போது சொன்ன புதுமையினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களை மீட்டு இரட்சிக்க வேண்டுமென்கிற ஆசை உங்களுக்கு வருகிறது என்பதற்க்குச் சந்தேகமில்லை . ஆனாலும் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும்படிக்கு அர்ச் நிக்கோலோ வைப் பார்த்து ஆத்துமாக்களுக்காக அதிக சுறுசுறுப்போடு ஜெபதப தான தருமங்களைச் செய்ய வேணும் . அப்படிச் செய்வீர்களானால் உங்களாலே அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்தை அடைவார்கள் என்று அறியக் கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும் ​​.