இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 21-ம் தேதி.

இயேசுவின் திரு இருதயம் தேவ சித்தத்திற்கு அமைதலைக் கற்பிக்கிறது.

இயேசு கிறிஸ்து வாழ்நாள் முழுவதும் தமது பிதாவின் திருச்சித்தத்திற்கு அமைந்து ஆண்டவருடைய சம்மதமில்லாமல் இவ்வுலகத்தில் ஒன்றும் நடைபெறகிறதில்லையென்றும், எல்லாச் செபங்களும் சிறிதோ, பெரிதோ அவருடைய மகிமைக்காகவும் ஆத்தும் மீட்புக்காகவும் நடந்தேறுகிறதென்றும், அவருடைய அளவிட முடியாத அன்பு நிறைந்த இருதயத்தை நாம் பார்க்க வேண்டுமென்று திவ்விய இரட்சகர் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார்.

இயேசுவை சிலுவையிலறைய கையளிக்கக் கூடாதென்றும் தடுக்க பிரயாசப்பட்ட புனித பேதுருவை திவ்விய இயேசு கண்டித்து "என் பிதாவினால் எனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை நான் குடிக்கமாட்டேனே சுவாமி?" என்று திருவுளம் பற்றுகிறார் (அருள்.18:11 தமது பாடுகளின்போது தமது பிதாவை மகிமைப்படுத்தி அவருடைய விருப்பத்துக்கு தம்மை ஒப்புக் கொடுக்கிறார். "என் விருப்பப்படியல்ல உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று பேரொலியிடுகிறார். (லூக்22:42)

நமக்கு இவ்வுலகத்தில் நடக்கிறதெதுவும் தற்செயலல்ல, சர்வேசுரனுடைய சம்மதத்தால் நடக்கிறதென்று விசுவாசப்பற்றுதலோடு நினைத்து விசுவசிக்க வேண்டியது. "நன்மையான காரியங்களும், கெடுதலான காரியங்களும் வாழ்வும், சாவும் ஆண்டவரிடமிருந்து வருகிறது" (சர்வப்பிர. 11:14) மழை அல்லது வறட்சி, செளக்கியம் அசெளக்கியம், செல்வம் தரித்திரம், சகலமும் நம்முடைய ஆண்டவரிட மிருந்து வருகிறது. நமக்கு வரும் சகல சோதனைகள், சிலுவைகள், துன்ப வருத்தங்கள் இன்னும் அவதூறு பற்பல வேதனைகள் எல்லாம் ஆண்டவருடைய உத்தரவால் நடக்கிறது. குற்றவாளிகளை அவர் தண்டிக்கிறாரென்பதற்கு யாதொரு சந்தேகமேயில்லை.

வேத கட்டளைகளை யூதர்கள் மீறினதற்கு ஆக்கினையாக அவர்களைப் பிலிஸ்தீனியர்களும் அஸ்ஸிரியர்களும் எதிர்த்துச் சண்டை செய்து, அவர்களுடைய வீடுகளையும், பட்டணங்களையும் சுட்டெறித்து வெறுமையாக்கி, அவர்களில் பலரையும் கொல்லும்படி சர்வேசுரன் உடனே உத்தரவளித்தார். தம்மால் அன்பு செய்யப்பட்ட ஜனங்கள் அக்கிரம் பாதையில் பிரவேசியாதபடி தடுத்து, உண்மையான தேவ ஊழியத்துக்கு வரும்படி அவர் எடுத்த முயற்சி இதுவே. இந்த முயற்சி அவர்கள் பேரில் அவர் வைத்த இரக்கத்துக்கும், அன்புக்கும் எடுத்துக்காட்டு என்பதற்குச் சந்தேகமில்லை.

தூயவரான யோபு என்பவருடைய சொத்துக்களெல்லாம் திடீரென்று அழிந்த மாத்திரத்தில் அவர் தம்முடைய விரோதிகளை யென்கிலும் அல்லது பசாசையென்கிலும் குற்றம் சாட்டவில்லை. உடனே ஆண்டவரை நோக்கி தமது கண்களை உயர்த்தி ஆண்டவர் அறிவித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார் : ஆண்டவரது பெயர் போற்றப்படக்கடவது. (யோப்.1:21) என்றார். அப்படியே நாமும் செல்வாக்கோ தரித்திரமோ, செளக்கியமோ அசௌக்கியமோ, அநுகூலமோ பிரதி கூலமோ, எல்லாம் சர்வேசுரன் நம்முடைய நன்மைக்காக வரவிடுகிறாரென்றும், நமது ஆத்தும் மீட்புக்கு மிகவும் பிரயோசனமானவையென்றும் ஏற்றுக்கொண்டு இயேசுவின் திரு இருதயத்துக்கு மிகவும் நன்றியறிந்திருப்போமாக. இப்போது மோட்சபாக்கியத்தை அனுபவிக்கும் பல ஆத்துமாக்கள் அநுகூலமடைந்திருக்கிறார்கள்.

புனித . கூரேதர்ஸ் இதுகாரியத்தில் சொல்லுகிறதென்னவென்றால்: தமது நண்பர்களுக்கு இயேசு கொடுக்கிற கொடை சிலுவையே. அது யாரிடத்திலிருந்து வருகிறதென்று நாம் பார்க்கக்கூடாது. நம்முடைய அன்பை ஆண்டவருக்கு நாம் காண்பித்து நித்திய மோட்ச சம்பாவனையை அடைவதற்கு ஏற்ற வழியாக அதை ஆண்டவர் நமக்கு அனுப்புகிறார்.

இயேசுவின் திருஇருதயப் பக்தியை பரவச் செய்ய வெகு உதவியான சில வழிகளை புனித. மார்கரீத் மரியம்மாள் 1688-ம் வருஷம் பாப்பானவரிடம் கேட்டபோது அவர் உத்தரவு கொடாததினால் புனிதை மிகவும் துன்பப்பட்டார். அச்சமயம் ஆண்டவர் அவளுக்குத் தம்மைக் காண்பித்து, "மகளே, கவலைப்படாதே. நீ கேட்டது நடைபெறாதது நம்முடைய மகிமைக்காகத்தான். தற்சமயம் வெளிப்படையான வழிபாடுகளில்லாமலே ஆத்துமாக்கள் நம்மை அன்பு செய்து ஆவலுள்ளவைகளாயிருக்கின்றன. ஆனால் இந்த ஆவல் சீக்கிரம் தணிந்து போகும். அப்போது இருதயங்களில் அன்பு சுடர்விடும்படி நீ கேட்ட சுதந்தரங்கள் மாத்திரமல்ல, அவைகளிலும் பெரியவைகளை பாப்பாண்டவர் வழியாய் உனக்குக் கிடைக்கத் தயை புரிவோம்" என்றார்.

தேவசித்தத்துக்கு அமைதல் என்னும் புண்ணியத்தைப்போல் நமது ஆண்டவருக்குப் பிரியமானது வேறொன்றுமில்லை. உரோமாபுரி இயேசுசபை மடத்தில் செலஸ்தினி என்ற துறவி ஒருவர் வியாதிப்பட்டுச் சாகுந்தருவாயிலிருந்தார். வைத்தியர், அவர் கூடிய சீக்கிரம் இறந்து போவாரென்று தீர்மானித்தார். இன்று நாம் கொண்டாடுகிற பெரிய புனிதர் ஞானப்பிரகாசியார் துறவிக்கு தம்மைக் காண்பித்து, பிரிய சகோதரரே, உமக்கு குணம்பெற ஆசையா? அல்லது சாகப் பிரியமா? என, துறவி கேட்டார். "தேவ சித்தமே எனக்குப் பிரியம்" என்றார் புனிதர். புன்னகை கொண்டு மிகுந்த பட்சத்தோடு, தேவ சித்தம் தவிர வேறோர் ஆசையும் உமக்கில்லாததாக நீர் சொன்னது நமது ஆண்டவருக்கு எவ்வளவு பிரியமாயிருக்கிறதென்றால், நீர் திரும்பவும் வாழ்ந்து அவருடைய திரு இருதய பக்தியை விர்த்தி செய்ய உழைக்கும்படியாய் அவர் உமக்கு உத்தரவு கொடுக்கிறார் என்றார்.

ஒரு துறவற சகோதரிக்கு முழுதும் கண் தெரியாமல் போய்விட்டது. யாராகிலும் தன் மேல் பரிதாபப்படுகிறதாக கண்டால், "என்மேல் பரிதாபப்படாதேயுங்கள். உலக காரியங்களையும், பிரகாசத்தையும் நான் பார்ப்பதினால் எனக்கு உண்டாகும் சந்தோஷத்தை நமது ஆண்டவர் எடுத்துக்கொண்டதற்குக் காரணம், என்னுடைய கண்கள் மோட்சத்தில் அவருடைய திரு இருதயத்தின் தெய்வீக ஜோதி வடிவை கண்டு களிக்கும்படியாகவேயன்றி மற்றப்படியல்ல. தவிர, இவ்வுலகத்தில் ஒரே ஒரு பொல்லாப்பு உண்டு. அது பாவம். சிலுவைகளும், துன்பங்களும், தேவாசீர்வாதத்தின் அடையாளங்கள். அவைகள் பாக்கியமேயொழிய பொல்லாப்பல்ல" என்று மறுமொழி சொல்லுவாள்.

இயேசுவின் திருஇருதயப் பக்தியை துறவறவாசிகளிடத்திலும், இல்லறவாசிகளிடத்திலும் வளர செய்ய தமது வாழ்நாளெல்லாம் உழைத்த இயேசுசபை ருசின் குரு சாகும் படுக்கையிலிருக்கும்போது, ஆ! இயேசுவின் திருஇருதயம் அநுபவித்த வேதனைகளோடு நாம் படும் வேதனைகளையும் ஒன்றுபடுத்தி அவைகளை நமது சம்பாவனையாக மாற்றுகிறது எவ்வளவு இன்பமானது என்று அடிக்கடி அவர் சொல்லுகிற சப்தம் மற்றவர்கள் காதில் விழும். அவர் அனுபவித்த பயங்கரமான வேதனை வெகு உக்கிரமாயும் சகிக்கக்கூடாததாயும் இருக்கும்போது தமது திருஇருதயத்தைக் காட்டும் பாவனையாக அவருக்கு முன்னாலிருந்த திவ்விய இரசகருடைய படத்தைப் பார்ப்பார். எல்லா வேதனைகளையும் மறந்தவராய், சாது அமரிக்கையோடு புன்னகை கொள்வார். அவர் புத்தி சுயாதீனத்தைச் சற்று இழந்தவராகத் தெரிந்த அந்த நேரத்திலும், இயேசுவின் திருஇருதயம் என்கிற நாமத்தைச் சொன்னாலே போதும். உடனே அன்பு பற்றுதலோடு அவ்இனிய நாமத்தை உச்சரிப்பார். தாம் முழுவதும் புத்தி சுயாதீனம் இழந்த சில சமயங்களில் இயேசுவின் திரு இருதயத்தில் கண்டடையும் அருட்கொடைகளை கிறிஸ்துவர்கள் நன்றாய்க் கண்டுபிடிக்கச் செய்வதற்கு உதவியான புது வழிகளையும், சுதந்திரங்களையும் பாப்பானவரிடம் கெஞ்சிக் கேட்கும்படி உரோமாபுரிக்குப் போகவேண்டுமென்று சொல்லிக்கொண்டே படுக்கையைவிட்டு எழுந்திருக்கப் பிரயாசைப்படுவார். கடைசியாய் தனது கண்கள் ஆண்டவருடைய திருஇருதயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சமாதான ஐக்கியமாய் மரித்தார்.

நாமும் தேவ சித்தத்துக்கு முழுதும் அமைந்த மனதோடு இயேசுவின் திரு இருதய சகலத்தையும் ஏற்றுக் கொள்வோமாக. நமது உத்தமதனம், தேவசித்தத்துக்கு அமைந்து நடத்தலிலேதான் அடங்கியிருக்கிறது. அப்போதுதான் ஒரு பாசமுள்ள அரசனைப் போல் நமது ஆண்டவர் நமது ஆத்துமத்தில் அரசாள்வார். சகலத்திலும் ஆண்டவருடைய திருக்கரத்தையும் இருதயத்தையும் காண்போமேயாகில் சோதனைகள் நடுவிலும் வேதனைகள் நடுவிலும் நம்முடைய இருதயம் அமைதியாயிருக்கும்.

வரலாறு.

பாஜி பட்டணத்து புனித மதலேனம்மாள், ஓர்நாள் பரவசத்திலிருக்கும் போது புனித ஞானப்பிரகாசியார் மோட்சத்தில் அனுபவிக்கிற மகிமைப் பிரதாபத்தைக் காணப் பாக்கியம் பெற்றாள். அவள் கண்டதை விவரித்துச் சொல்ல அவளுக்கு வார்த்தை வராததினால் "என்ன மகிமை! என்ன மகிமை!'' என்கிற இந்த இரு வார்த்தைகளையே உச்சரித்து, ஞானப்பிரகாசியார் மோட்சத்தில் இவ்வளவு மேலான மகிமைப் பாக்கியம் அனுபவிக்கக் காரணம் அவர் உயிரோடிருந்த காலத்தில் மன வல்லிய ஜெபத்தாலும், தேவ அன்பு முயற்சிகளாலும் இயேசுவின் திரு இருதயத்தில் வாழ்ந்து வந்ததே என்றாள்.

புனித மார்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம் தபோர் மலையில் இயேசுக் கிறிஸ்துநாதரிடத்தில் விளங்கிய அன்பு கல்வாரி மலை வேதனைகளில் குறைந்து போகவில்லை. நமக்கு வரும் சகலத்துக்கும் சர்வேசுரனைப் புகழ்வோமாக. ஆண்டவருடைய சித்தம் சகலத்திலும் நிறைவேறக்கடவது. சர்வேசுவரனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து அநுகூலமான நேரத்திலும், பிரதிகூலமான நேரத்திலும், சமமாய் அவருக்கு நன்றியறிந்திருக்ககடவோம். நாம் தேவசித்தத்துக்குக் கீழ்ப்படிந்து செய்கிற சகலத்திலும் சர்வேசுவரன் அதிகப் பிரியப்படுகிறார்.

மனவல்லிய ஜெபம்.

தேவ நற்கருணையிலிருக்கும் இயேசுவின் திரு இருதயமே! எங்களிடத்தில் விசுவாசம், நம்பிக்கை, தேவ அன்பை அதிகரித்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.