இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 22-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் அநித்திய நித்திய காரியங்களை நாம் மதிக்கக் கற்பிக்கிறது.

இயேசுக்கிறிஸ்து நாதர் மகிமை பெருமையோடும் செல்வத்தோடும் இந்த உலகத்தில் வந்து வாழ்ந்திருக்கலாம். அதற்கு விரோதமாக இவ்வுலக அழிவுக்குரிய நன்மைகளை நிந்தித்து பரலோக காரியங்களை மதித்து அன்பு செய்ய தமது வார்த்தைகளாலும், விசேஷமாய் தமது திவ்விய மாதிரிகையாலும் படிப்பிக்கச் சித்தமானார். அப்போஸ்தலர் களுக்கும், யூதேயா நாட்டார்களுக்கும் தாம் போதித்த போதகங்களிலும் வீணும் விழலுமான இவ்வுலக காரியங்களிலிருந்து அவர்களுடைய பற்றுதலைப் பிரித்து அவர்களுக்கு ஞான வெளிச்சம் கொடுத்து முதன் முதலில் பரலோக இராச்சியத்தையும், எப்போதும், அழியாமல் நீடித்திருக்கிற நன்மையையும் தேடும்படி அவர்களைத் தூண்டி ஏவுகிறார். அதே பிரகாரம் இப்போது திவ்விய இயேசு இவ்வுலகத்துக்காக அல்ல, மறு உலகத்துக்காக உழைக்கும்படி நம்மையும் தூண்டி அழைக்கிறார். விசுவாச மந்திரத்தில் சொல்லியிருப்பது போல் கிறிஸ்துவர்கள் நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறார்கள் என்பது மெய். ஆனால் தங்கள் நடவடிக்கையில் எத்தனை பேர் அழியாத நித்திய செல்வத்தைத் தேடுகிறவர்கள்?

பிள்ளைகள் வெகு ஆசை ஆவலோடு விளையாடுகிறதை நாம் பார்க்கையில் அவர்கள் அந்த நேரத்தில் செய்கிறதெல்லாம் விளையாட்டுக் காரியமென்றே எண்ணுவோம். வயதில் முதிர்ந்தவர்கள் செய்கிற அலுவலை முக்கிய அலுவலென்று சொல்லுவோம். என்றாலும் உலகின் கண்ணுக்கு முக்கியம் என்று நாம் சொல்லுகிற அலுவல்கள் நித்தியத்துக்கு உபயோகப்படாவிட்டால் இதுவும் சிறுவர் விளையாட்டென்றே சொல்லவேணும். வேதபுத்தகம் இவைகளை வீண் பெருமையின் மாயை (ஞான . 4 : 12) என்று அழைக்கிறது.

பல கிறிஸ்துவர்கள் துவக்கத்தில் தங்கள் ஆத்தும் மீட்பையும், நித்தியத்துக்கடுத்த காரியங்களையும் தேடுகிறதுண்டு. வேறு பலர் உலக காரியங்களின் பேரில் எவ்வளவு கவலைக் கொண்டிருக்கிறார்களென் றால் பரலோக காரியங்களைப் பற்றி நினைக்க முதலாய் அவர்களுக்கு நேரமில்லை. அவர்களுடைய ஏக ஆசை எவ்விதத்திலும் செல்வம், பெருமை, உயர்ந்த பதவி, சம்பாதிக்க வேணுமென்பதே. இதைப் பற்றி இராப்பகலாய் நினைப்பார்கள். இதுதான் இவ்வுலகத்தில் அவர்களுடைய முக்கிய அலுவலென்று எண்ணுவார்கள். எப்படியாகிலும் அடைய வேண்டும். இதினிமித்தம் என்ன வேலை, பிரயாசை, துன்பங்கள் வந்தாலும் பரவாயில்லை. அதனை அடைந்தாலே போதும். ஆனால் திடீரென்று சில சமயம் சாவு வருகிறது. சகலத்தையும் விட்டு மறுலோகத்துக்குப் போகவேண்டும். சிறுபிள்ளைகளின் விளையாட்டில் தங்கள் வாழ்நாளைச் செலவழித்தார்கள். இப்போது யாதொரு ஆயத்தமின்றி வெறுங்கையாய் சர்வேசுவரனுக்கு முன் ஆஜராகிறார்கள்.

என்றாலும் உலக காரியங்களை, விசேஷமாய்த் தங்கள் தகுதிக்கு அவசரமானவைகளைத் தேட வேண்டாமென்று நமது ஆண்டவர் தடுக்கிறதில்லை. நமது மீட்பே முதன்மையும் அதிமுக்கியமான காரியமென்றும், இன்னும் சொல்ல வேணுமாகில், இதுவே, இவ்வுலகத்தில் நமக்கு அவசரமான ஒரே ஒரு காரியமென்றும் நாம் மதிக்க வேணுமென்பது அவருடைய விருப்பம். நமது விருப்ப வெறுப்புகளிலும் வீண் மகிமையிலேயுமல்ல, நமது மீட்பை உறுதிப்படுத்தும் விஷயங்களில்தான் நம்முடைய புத்தி மனதைச் செலுத்தவேணுமென்று கேட்கிறார். இவ்வித புத்தியோடு நாம் நடந்தால் இவ்வுலகத்தில் நாம் செய்கிற எந்த அலுவலும் நமது மீட்புக்கு தடையாக இல்லாமல் நம்மை நித்திய பேரின்பத்துக்கு கொண்டுபோய்ச் சேர்க்க ஏதுவாயிருக்கும்.

பக்தி சுறுசுறுப்புள்ள நல்ல கிறிஸ்துவர்கள் அதிக விவேகத்தோடு தங்கள் ஆத்தும் இரட்சண்யத்தைத் தேடுவார்கள். தாங்கள் குடும்பத்துக்குத் தலைவர்களாயிருக்கும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகள் இருதயத்தில் தேவபயத்தையும் அன்பையும் மூட்டி, பக்தியிலும், கிறீஸ்துவப் புண்ணியப் பயிற்சியிலும் அவர்களை வளர்ப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை வேலை, மோசமான வியாபாரம், இது முதலிய கெட்ட வழிகளால் இவ்வுலக ஆஸ்தியைத் தேடுகிறதற்குப் பதிலாய் தேவ கற்பனைகளையும் தங்கள் கடமைகளையும் நிறைவேற்றுவதில் வெகு கவனமுள்ளவர்களாயிருப்பார்கள். செல்வந்தர்களைப் பற்றி பொறாமைப் படாமல் திருப்தியடைந்து நித்திய பாக்கியத்துக்கு ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள்.

வரலாறு.

ஏற்கனவே போர்வீரனாயிருந்து பிற்பாடு குடியானத் தொழில் செய்துவந்த பக்தி சுறுசுறுப்புள்ள கிறிஸ்துவன் ஒருவனோடு ஆண்டவர் தங்களை வைத்திருக்கும் இந்த எளிய நிலையில் ஒரு வேத போதகர் பேசும்படி நேரிட்டது. இவர்கள் பேசிக்கொண்டிருந்த இடம் ஓர் பெரிய செல்வந்தருடைய கோட்டைக்கு அருகிலிருந்தது.

இந்த இலட்சப் பிரபு உலக சொத்து சுகத்தின் பேரில் கவலை கொண்டிருந்தாரேயொழிய தன் ஆத்தும் மீட்பைப் பற்றி கவனித்தவரல்ல! குருவானவர் கிறிஸ்துவனை நோக்கி, இந்தப் பெரிய செல்வந்தருடைய செல்வாக்கைப் பற்றிச் சில சமயத்தில் நீ பொறாமைப்படுகிறதில்லையா? என், குடியானவன் : நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்? அந்த சீமான்தான் என் மேல் பொறாமைப்பட வேண்டும். அவன் சாகும்போது அவனுடைய நிலபலமெல்லாம் தன்னோடு கொண்டுபோவானா? அந்த செல்வந்தனை எனக்குத் தெரியும். நான் அவனைவிட ஐந்து அங்குல வளர்த்தியுள்ளவன். நாங்களிருவரும் கல்லறையிலிருக்கும்போது நான் அவனைப் பார்த்து, "ஐயா மிராசுதாரரே, இப்போது நான் உன்னைவிட அதிக சொத்துக்காரன்; ஏனெனில் உன்னைவிட ஐந்து அங்குல பூமி இப்போது எனக்கு அதிகமுண்டு என்று சொல்வேன். ஆதலால் பாருங்கள், நானல்ல, அந்த மிராசுதாரர் தான் சாவுக்குப்பின் என் மேல் பொறாமைப்படுவார்" என்றான்.

நித்திய நன்மையையும், அநித்திய நன்மையையும் சரியான விதமாய் மதிக்கும்படி மோட்சத்தில் வாழும் முத்தர்களையும் நரகத்தில் வேகும் சபிக்கப்பட்டவர்களையும் நமது நினைவால் போய்ச் சந்திப்பது உத்தமம். இப்போது உலகத்தைப்பற்றி புனித. ஞானப்பிரகாசியார் என்ன நினைக்கிறார் என்று வினவினால், "இவ்வுலக செல்வத்தை வெறுத்துவிட்டு நித்திய செல்வத்தை தெரிந்து கொண்டதில் நான் எவ்வளவு ஞானமுள்ளவனாய் நடந்தேன். காஸ்திலியோன் என்னும் என் அரண்மனைக்கும், அரசுக்கும் என்ன ஆனது ! என்னை எதிர்பார்த்திருந்த கிரீடத்தின் மகிமை பெருமை இப்போது எங்கே? நான் அந்த அழிவுக்குரிய நன்மைகளை விரும்பி அனுபவித்திருப்பேனாகில் பலருக்குச் சம்பவித்ததுபோல் நானும் சிலவேளை என் ஆத்துமத்தை இழந்து போயிருக்கலாம். வீணும் விழலுமான காரியங்களைத் துவேஷித்து அழியாத மகிமைப் பாக்கியத்தை தெரிந்து கொண்டதினிமித்தம் நான் எவ்வளவோ பாக்கியமுள்ளவனாயிருக்கிறேன்" என்பர்.

இவ்வுலக வீண் மாயைகளால் பசாசானது உன் ஆத்துமத்தை ஏமாற்றி இழுக்கப் பிரயாசப்பட்டால், புண்ணிய பாதை வெகு கஷ்டமானதென்று உனக்குக் காட்டி பயமுறுத்தினால், உன் கண்களை இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி உயர்த்தி, மோட்சத்தையும், நித்தியத்தையும் ஞாபகப்படுத்திக்கொள். நாம் ஒரு நல்ல வெகுமதியை எதிர்பார்க்கும்போது வெகு கஷ்டமான வேலைகளையும் சந்தோஷமாய்ச் செய்வோமல்லவா? பெரிய இலாபம் வரப்போகிறதென்கிற நம்பிக்கை எவ்வளவு பிரயாசையான வேலையையும் இனிமையாக மாற்றிவிடும்.

நித்திய சம்பாவனை விஷயமாயும் இதேவிதம் சொல்லலாம். தென்னிந்தியாவின் அப்போஸ்தலராய் வேதசாட்சி முடி பெற்ற புனித. அருளானந்தர் வேதத்துக்காகத் தமது சீடர்களோடும் சில கிறிஸ்துவர்களோடும் வெகு கொடுமையான வேதனை அனுபவிக்கும்போது "மோட்சத்தின் பக்கமாய் உங்கள் கண்களை உயர்த்துங்கள். சிலுவையோ சிறிது காலம் ; சம்பாவனையோ முடிவில்லாதது" என்று தம் தோழர்களுக்குத் தைரியம் சொல்லித் தேற்றினார்.

மேற்கண்ட வார்த்தைகளே இயேசுவின் திரு இருதயப் பக்தர்களின் வாக்கியமாக இருக்கக்கடவது. அவைகள் நமது உலக பற்றுதல்களினின்று நம்மைப் பிரித்துப் பரலோக காரியங்களை நாடும்படி செய்யும்.

புனித. மார்கரீத் மரியம்மாளின் வேண்டுகோள்.

திவ்விய இயேசு அன்பு செய்கிறதை மட்டும் நான் அன்பு செய்கிறதும் அவருக்குப் பிரியமில்லாத அனைத்தையும் வெறுத்துத் தள்ளுவதுமே என் ஆசை. மனிதர்களால் மதிக்கப்படவும், புகழப்படவும் உண்டாகும் ஒவ்வொரு வீணாசையையும் முற்றிலும் தள்ளிவிடும். இயேசுவின் திரு இருதயத்துக்குத் திருப்தி வருவிக்கிறதே உன் ஏக எண்ணமா யிருக்கட்டும். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்கள் பேரிலுள்ள பற்றுதல் இயேசுகிறிஸ்துவின் அன்பை கொல்லும் நஞ்சு. உன் இருதயத்தை முழுவதும் சர்வேசுரனுக்குக் கொடுப்பதில் பிரமாணிக்கமாயிரு. உலக காரியங்கள் மேலுள்ள ஆவலும் விசேஷமாய் படைப்புகள் மேலுள்ள பற்றுதலும் உன் இருதயத்தைப் பகிர்ந்துபோக விடாதே. உன்னால் நேசிக்கப்பட்ட மனிதர் உன்னை நேசிக்கவில்லையென்று கண்டால், திவ்விய இயேசு உன்னை அன்பு செய்கிறாரென்றும், அழிவுக்குரியவை களின் மேல் உன் பற்றுதலை வைப்பது அவருக்குப் பிரியமில்லை யென்றும் அறிந்துகொள். (பர். அரு. பிதா.)

மனவல்லய ஜெபம்.

அன்பால் பற்றியெரியும் இயேசுவின் திரு இருதயமே! உமது எங்களிருதயத்தைச் சுட்டெரித்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.