நற்கருணையின் கருவூலம் மரியன்னை!

இயேசுவை வயிற்றில் கருவாய் சுமந்தால் மரியன்னை நற்கருணையின் கருவூலம் என்றழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மனிதனும் உருவாகும்போது தாய் வயிற்றில் அவளின் உதிரத்தில் கலந்து தோய்ந்து மனித வளர்ச்சி பெற்று இவ்வுலகில் பிறக்கிறான்.

வார்த்தையால் பேசப்பட்டு வந்த இயேசு, மரியன்னையின் வயிற்றில் மாமிசமாகி, அன்னையின் உதிரத்தில் உருபெற்று இரத்ததை தாய் பாலாக்கி அருந்தி வளர்ந்தார். அப்படியானால் தாயின் கருவிலே அன்னை மரியன்னையின் சத்தை இயேசுவும், அவரின் சத்தை மரியன்னையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆகவே தான் எவ்வாறு மரியன்னை இயேசுவை சுமக்கும் பேழை ஆனாரோ, அதே போல் இயேசுவும், அனைவரையும் சுமக்கும் பேழையாக மாறினார்.

"உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று (லூக்.11:27) இயேசுவை தாங்கிய மரியன்னையை இறைவன் தனது கருவூலமாக தயார் செய்தார்.

"உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்." அவள் உன் தலையை நசுக்குவாள். "நீயோ அவளுடைய குதிங்காலை தீண்ட முயலுவாய்" (ஆதி.3:15)

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக்.1:28) என்ற வாக்குறுதிகள் நிறைவேறும் பொருட்டு மரியன்னை, இறைவன் கையில் செயலாற்றும் கருவியாகி, மீட்பின் கருவாக மாறி, தன் கருவூலத்தில் கர்த்தரைத் தாங்கினார்.

ஆக மரியன்னை, இயேசுவை மட்டுமல்லாமல் திருச்சபையையும் சேர்த்து சுமந்த ஓரு நற்கருணையின் கருவூலம். தனது பணிவாழ்வை துவங்கும் போது இயேசு "ஆண்டவரின் ஆவி என்மேலே.." (லூக்.4:18-21) என தனது மதிப்பீடுகளை, கொள்கைகளை பிரகடனப்படுத்தும் போது அன்னையின் கருவூலத்திலிருந்து கற்றதை பரீட்சைபடுத்தி காண்பிக்கிறார்.

மரியன்னையின் பாடலின் வரிகள் கூட அந்த விடுதலைத் தாகத்தை எடுத்து சொல்கிறது. தாயும் மகனும் ஒருசேர சிந்தித்து, செயல்படுவதைப் பார்க்கிறோம். தாயின் கருவில் இயேசு அனைத்தையும் தன் நாடி, நரம்புகளில், இரத்த நாளங்களில் தாங்கி இருக்க வேண்டும். எனவே மரியன்னையின் வாழ்வு, இயேசு கருவிலே உருவாகுமுன்பே நற்கருணை வாழ்வின் பரிமாணங்களை வாழ்ந்து காட்டியவள்.

ஆகையால் தான் கடவுள் நற்கருணை இயேசுவை தாங்க அருள் நிறைந்த, பெண்களுள் பேறுபெற்றவள் இவள்தான் என்பதை முன்னுணர்ந்து செயலாற்றியிருக்க வேண்டும். இயேசுவை கருவிலே சுமந்திருக்கையிலும் ஒய்ந்திருக்காமல் எலிசபெத் என்ற முதிர்ந்த வயது பெண்ணின் துயர்துடைக்க ஓடியது கூட கருவில் காத்திருந்த கர்த்தரை பாதித்திருக்க வேண்டும்.

எனவேதான், துயருற்றோரின் துயர்துடைக்க இயேசுவும் தனது நிலைபாட்டை நிலையாக எடுத்து வைத்தார். இயேசுவின் வாழ்வில் காண்கிற பண்புகள் பாடுகள் மரியன்னையின் வாழ்விலும் காணப்பட்டன. ஆகவே மரியன்னை நற்கருணையாகவும் நற்கருணையின் கருவூலமாகவும், கடவுளால் முன்குறித்து வைத்து தயார் செய்யப்பட்டார்.

மரியன்னையும் அத்தகைய மேலான வாழ்வால் தான் அந்த நற்கருணை அன்னையாக வாழ்ந்து காண்பித்தாள். 'கருவூலம்" இயேசுவை தாங்கியது. நமது இதயம் என்னும் கருவூலத்தில் கர்த்தரை தாங்கும் போது நமது வாழ்வும் நற்கருணை வாழ்வாகட்டும்.