பாசாசின் துர்ப்புத்திகளை மறுக்கத் தேவநற்கருணையில் நடந்த புதுமை!

   நேப்பிள்ஸ் பட்டணத்தில் கெட்ட கிறிஸ்தவன் ஒருவன் பிசாசை அழைத்து அதனோடு பேச பழகியிருந்தான். இப்படியிருக்கையில் ஒருநாள் அவன் பசாசுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பசாசு " தேவநற்கருணையில் இயேசுநாதர் என்பது குருக்கள் கட்டி வந்த கதை " என்று சொன்னது .

பசாசு சொன்ன ஞாயங்களை அவன் உண்மை என்று விசுவசிக்கத் தொடங்கினான். ஒருநாள் பரிபூரண பலன் பெறுவதற்காக ஏராளமான மக்கள் தேவநற்கருணை வாங்குவதை அவன் கண்டு அப்பத்தின் சிறிய துண்டுகளை இவர்கள் எத்தனை ஆசையோடு வாங்குகிறார்கள் என்று ஏளனம் செய்தான் .

ஆனால் நன்மை வாங்குபவர்களுக்குள்ளே பிரபுக்களும் சாஸ்திரிகளும் கூட வாங்குவதை அவன் கண்ட போது " இவர்களும் இந்த காரியத்தில் மோசம் போவார்களோ ? நான் போகிறேனேயல்லாமல் , இவர்கள் மோசம் போகவில்லை . இந்த காரியத்தில் பசாசு சொன்னதை நான் விசுவசிப்பது மூடத்தனமல்லவா " என்று சிந்தனை செய்து பழைய நினைவை விட்டுத் தேவநற்கருணையில் இயேசுநாதர் இருக்கிறாரென்று விசுவசித்தான் .

   பசாசு இது அறிந்து அவனெதிரில் தோன்றி " நான் முன்பு தேவநற்கருணையின்பேரில் சொன்ன ஞாயங்களை தப்பென்று நீ நினைக்கிறாயே . ஆனால், இவைகள் உண்மையென்று சோதிக்கத்தக்கதாகத் தேவநற்கருணையையும் , பூசையில் வைக்காத அப்பத்துண்டையும் இங்கே கொண்டு வா " என்றது.

அப்படியே அவன் தேவநற்கருணையையும் பூசையில் வைக்காத அப்பத்துண்டையும் தன் வீட்டிற்குக் கொண்டு வந்தான் . பசாசு : நீ சொன்ன தேவநற்கருணையில் இயேசுநாதர் இருந்தால் அதற்கும் இதற்கும் வேற்றுமை இருக்கவேண்டும் . ஆனால் உற்று உற்று பார்த்தாலும் அதற்கும் இதற்கும் வேற்றுமைக் காணோம் . ஆதலால் தேவநற்கருணையில்கர்த்தர் இல்லையென்று நான் உனக்குச் சொன்னது பொய்யல்ல உண்மையே " என்று சொல்லிற்று .

அதற்கு அவன் , இதில் உண்டான வேற்றுமையைச் சோதிக்க இவ்விரண்டையும் தண்ணீருக்குள்ளே போடவேண்டுமென்றான் . பசாசும் சம்மதித்தது . அவற்றைத் தண்ணீருக்குள்ளே போட்டவுடனே பூசையில் வைக்காத அப்பத்துண்டு தண்ணீருக்குள் மூழ்கி நைந்து போயிற்று. ஆனால் தேவநற்கருணை புதுமையாகத் தண்ணீருக்குள் மூழ்கிப் போகாமல் மேலே மிதந்து ஈரம் முதலாய்ப் படாமலிருந்தது .

இதைஅவன் கண்டு " இதோ இந்த வேற்றுமையைப் பார் " என்று பசாசுக்கு சொன்னான் . பசாசு கோபத்தோடு உன்னுடைய கண்ணுக்கு அப்படித் தெரிகிறதோ ! என் கண்ணுக்கு அப்படித் தெரியவில்லையே " என்று சொல்லிற்று. அப்போது அவன் , இதை இன்னும் சோதிக்க ஒரு ஊசியினாலே தேவநற்கருணையைக் குத்தினவுடனே புதுமையாக இரத்தம் புறப்பட்டது . பசாசு அதைக் கண்டு அந்த நிமிடத்திலே மின்னலைப் போல மின்னிக் காணாமல் மறைந்து போயிற்று .

   கெட்டுப்போன கிறிஸ்தவன் தேவநற்கருணையிலிருந்து புறப்பட்ட திரு இரத்தத்தைக் கண்டவுடன் மிகவும் பயந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அறியாமல் செய்தேன் என்று அழுகையோடு மனஸ்தாபப்பட்டான் . தான் செய்த பாவத்தையெல்லாம் குருவானவரிடத்தில் சொல்ல அந்தக் குருவானவர் மேற்றிராணியாருக்கு அறிவித்து அவனுக்கு அதற்கான அபராதத்தைக் கட்டளையிட்டார் . பிறகு அவன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து தன் பாவத்துக்காகச் சாகுமட்டும் தபசு செய்ததுமல்லாமல் தேவநற்கருணையின்பேரில் மிகுந்த பக்தியாயுமிருந்தான் .

இறைமக்களே ! அந்தக் கெட்ட கிறிஸ்தவன் தேவநற்கருணையைக் குத்தினதால் புறப்பட்ட இரத்தத்தைக் கண்டவுடனே அவனுக்கு நல்ல மனது வந்தது . நீங்கள் தேவநற்கருணை வாங்கினவுடனே நாம் இப்போது சொல்லப்போகிற காரியங்களை நினைத்தால் உங்களுக்கு நல்ல மனதும் புத்தியும் வரும் .

இயேசுநாதர் மரணத்தை அடைந்த பிறகு அவருடைய சீடர்கள் கர்த்தருடைய திருச்சரீரத்தை சிலுவையிலிருந்து இறக்கித் தேவமாதாவின் மடியிலே கிடத்தினார்கள் . அப்போது அன்னை எவ்வளவு துன்பப் பட்டிருப்பார்கள் என்று சற்று சிந்தனை செய்வோம் .

நீங்கள் தேவநற்கருணை வாங்கியவுடன் இந்த காரியங்களையெல்லாம் நினைத்து உங்கள் உள்ளத்தில் அறையுண்டிருக்கிற என் கர்த்தரே, உம்முடைய சரீரத்தில் இருக்கிற காயங்களை நான் செய்த பாவங்களினால் வருவித்தேன் . உம்முடைய இரத்தம் புறப்பட்டதற்கு என் பாவமல்லோ காரணம் . அறியாமல் செய்தேன் என்று அந்தச் சமயத்தில் நினைத்துச் சொன்னால் உங்களுக்கு நல்ல மனது வரும் .