பாவத்தோடு தேவநற்கருணை வாங்கின அரசனுடையவும் மற்ற அநேகருடையவும் நிர்ப்பாக்கியமான பாவங்கள்!

ஆஸ்திரியா தேசத்தில் லோத்தேரென்னும் அரசன்மிகவும் அழகுள்ள பெண்மீது ஆசைவைத்ததினால் தன்னுடைய மனைவியை விட்டு அவளை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டான. இவனுடைய நடவடிக்கையைப் பாப்பானவர் அறிந்து அவனுக்கு பாசத்தோடு நற்புத்தி சொன்னார் . ஆனால் அரசன் அந்தப் புத்தியைக் கேட்காத காரணத்தால் பாப்பானவர் அவனையும் அந்தப் பெண்ணையும் திருச்சபைக்கு புறம்பாய் தள்ளிவைத்தார் .

இதற்கு அரசன் பயந்து தான் அந்த நடவடிக்கையை விட்டுவிட்டவனைப் போல வெளியில் சில அடையாளங்களைக் காண்பித்தாலும் முன்போலவே அந்த வழியில் நடந்தான். அவனைத் திருச்சபையிலிருந்து தள்ளி வைத்த பாப்பானவர் மரணமடைந்தார் . அவருடைய பட்டத்திற்கு வேறொரு பாப்பானவர் வந்தவுடன் அந்த அரசன் மகா மகிமையோடு புதிய பாப்பானவரிடம் சென்று " என் பேரில் பொய்யான குற்றம் சாட்டியிருந்தார்கள். வல்திறாதா என்பளை நான் வைத்துக் கொள்ளவில்லை . அவள் அப்பால் இருக்கிறாள் " என்று பொய் சொன்னான்.அந்த அரசனோடு கூடயிருந்த பிரபுக்கள் அவனுக்குப் பயந்து அவன் சொல்வது உண்மை என்றார்கள் .

பாப்பானவர் " நீங்கள் சொல்வது உண்மையென்றால் நாம் ஆண்டவரை தோத்திரம் செய்வோம் . ஆனால் அரசரே , நீர் பாவசங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை வாங்க வேண்டும் " என்றார் . அப்படியே அரசனும்அவனுடன் வந்தவர்களும் பாவசங்கீர்த்தனம் செய்த பின் பாப்பானவர் பூசை செய்து தம்முடைய கையினால் அவனுக்குத் தேவநற்கருணைகொடுக்கிற சமயத்தில் " முன் சொன்ன குற்றம் உம்மிடத்தில் இல்லாதிருந்தால், வல்திறாதா என்பவளுடன் தொடரபு கொண்டிருப்பதில்லையென்று உறுதியான பிரதிக்கினை இருந்தால் இப்போது தேவநற்கருணை வாங்கும். இந்தக் குற்றம் உம்மிடத்தில் இருக்க அதற்குரிய மனஸ்தாபம் பிரதிக்கினை இல்லாமல் போனால் தேவநற்கருணை வாங்காதீர் . வாங்கினால் உமக்கு வெகு பொல்லாப்புகள் வரும் " என்று சொன்னார் .

   அரசன் பாப்பானவரின் எச்சரிக்கைக்கு பயப்படாமல் , அவளை விடுவதற்கு மனதில்லாமலும் மனஸ்தாபப்படாமலும் தேவநற்கருணை உட்கொண்டான் . பிறகு பாப்பானவர் அரசனுடன் வந்வர்களுக்கும் தேவநற்கருணை கொடுக்கிற சமயத்தில் அரசனுக்குச் சொன்னதுபோலவே அவர்களுக்கும் சொன்னார் . அவர்கள் தங்களுடைய அரசனுக்குப் பயந்து தேவநற்கருணையிலிருக்கிற பெரிய அரசருக்குப் பயப்படாமல் சாவானபாவத்தோடு தேவநற்கருணை வாங்கினார்கள் .

அவர்களுள் சிலபேர் மட்டுமே பெரிய அரசராகிய இயேசுநாதருக்குப் பயந்து சாக்கு சொல்லி அந்தச் சமயத்தில் நன்மை வாங்கவில்லை . இதெல்லாம் முடிந்த பிறகு அரசன் தன் தேசத்திற்கு பயணப்பட்டான் . போகும் போது பிளேசான் என்னும் பட்டணத்தில் சேர்ந்தவுடன் அரசனுக்கு கடின வியாதி வந்து அங்கே நிர்பாக்கியனாய் இறந்து போனான் . அரசனோடு வந்தவர்களுள் ரோமபுரியில் யார்யார் சாவன பாவத்தோடு தேவநற்கருணை வாங்கினார்களோ அத்தனை பேர்களும் சில நாட்களுக்குள்ளாக நிர்ப்பாக்கியராய் இறந்து போனார்கள் .

   இறையன்பர்களே! அரசர்களின் அரசராகிய இயேசுநாதர் தேவநற்கருணை வழியாக உங்களுடைய உள்ளத்தில் வருகின்ற சேதி நீங்கள் அறிந்து அதில் இருக்கிற பாவங்களாகிய அசுத்தத்தைத் தள்ளாதிருப்பது இயேசுநாதருக்கு பொருந்துமா? சற்று சிந்தனை செய்வோம் .